இயக்குனர் மணிரத்னம் உதவியாளர் பிஜாய் நம்பியார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்கியுள்ள திரைப்படம் போர். சிறுவயதில் பள்ளியில் நண்பர்களாக இருக்கும் அர்ஜுன் தாஸ், காளிதாஸ் பின்னாளில் எதிரிகளாக மாறுகிறார்கள். கல்லூரியில் சீனியர் மாணவராக இருக்கிறார் அர்ஜுன் தாஸ். அதே கல்லூரியில் ஜூனியர் மாணவராக வந்து சேரும் காளிதாஸ் அர்ஜுன் தாஸை பழி வாங்க துடிக்கிறார். இதனால் சீனியர் கேங்குக்கும் ஜூனியர் கேங்குக்கும் முட்டல் மோதல் தொடர்கதையாகிறது.
நாளடைவில் இதுவே ஈகோ மோதலாக மாறி அதிரடி ரணகளமாகிறது.. இந்தப் போரில் வெற்றி யாருக்கு? என்பது அதிரடி கிளைமாக்ஸ்.
கல்லூரி மாணவர்களின் நட்பு, காதல், துரோகம், சண்டை என அனைத்து விதமான உணர்ச்சிகளையும் தன் சிறப்பான மேக்கிங் மூலம் உலகத்தரம் வாய்ந்த படமாக கொடுத்திருக்கிறார் பிஜாய். முழு படத்தையும் ஈகோ சண்டையை வைத்து நகர்த்தி இருக்கும் இயக்குநர் அதை இன்னும் கூட பாலிஷ் செய்திருக்கலாம்.

சீனியர் மாணவராக வரும் அர்ஜுன் தாஸ் படம் முழுவதும் நிரம்பி வழிகிற நடிப்பில் மாஸ் காட்டி இருக்கிறார். அதிரடியிலும் அம்சம். பழிவாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளிதாஸ் ஜெயராம் சின்னச் சின்ன முக பாவனைகளில் கூட எரிச்சல் ஊட்டும் நடிப்பில் அசத்துகிறார்.
நாயகியரில் சீனியர் மாணவியாக வரும் சஞ்சனா நடராஜன் கதாபாத்திரத்திற்குள் நிறைந்து போகிறார். முன்னாள் மாணவியாக வரும் டி. ஜே. பானு எல்லை தாண்டாத நடிப்பில் வசீகரிக்கிறார்.
ஒளிப்பதிவும் இசையும் போர் படத்தின் உலகத்தரத்தை உறுதி செய்கின்றன. படத்தின் இறுதியில் வரும் இளையராஜா பாடல் இன்ப அதிர்ச்சி.
ஈகோ பிரச்சனையை மையமாக வைத்து அதனுள் காதல், நட்பு, சோகம், வெறுப்பு, சண்டை என பல்வேறு உணர்ச்சிகளை கலந்து கொடுத்து சுவாரசிய திரைக்கதையின் பிதா மகராகி இருக்கிறார், இயக்கிய பிஜாய் நம்பியார்.