கல்யாண விஷயத்தில் சாதிப்பற்றை தீவிரமாக கடைப்பிடிக்கும் கிராமம் அரிமாபட்டி. அந்த கிராமத்தின் எளிய குடும்பத்து இளைஞன் சக்திவேல் வேற்று சாதி பணக்கார வீட்டுப் பெண்ணை காதலிக்கிறான். இது போதாதா…இந்த காதலை அந்த பெண்ணின் அண்ணன் வெறித்தனமாக எதிர்க்க, அதையெல்லாம் மீறி அந்த ஜோடி மண வாழ்க்கையில் இணைந்து விட, ஊரார், பஞ்சாயத்து என இன்னபிற எதிர்ப்பு அம்சங்கள் களமிறங்க…
முடிவு என்னாகுமோ என்ற பதைபதைப்பை படம் நெடுக பரவ விட்டிருக்கிற இயக்குனர் ரமேஷ் கந்தசாமி படத்தின் முதல் வின்னர் பட்டியலில் இடம் பிடிக்கிறார்.
நாயகன் பவன் காதல் நாயகனாக வருகிறார். காதலில் ஓ.கே. கோபம் பொங்கிவரும் இடங்களில் இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷம் பீறிட வேண்டும்.

நாயகி மேக்னா படபடக்கிற விழிகள் மூலம் காதல் உணர்வை கச்சிதமாக கடத்தும் இடங்கள் அத்தனை அழகு. நாயகனின் அப்பாவாக சார்லி அப்படியான கிராமத்து அப்பாவை பிரதிபலிக்கிறார்.
தங்கையின் காதலை எதிர்க்கிற அண்ணனாக பிர்லா போஸ். அடாவடியை குறைவின்றி தடாலடியாக செய்து முடிக்கிற கேரக்டரில் கச்சிதம். அரசியல்வாதியாக வருகிற இமான் அண்ணாச்சி,. ‘சூப்பர்குட்’ சுப்ரமணி, அழகு, கராத்தே வெங்கடேஷ் என இன்னபிற பாத்திரங்களில் வருகிறவர்களும் கதைக்களத்தோடு பொருந்திப் போகிறார்கள்.
மணி அமுதவன் இசையில் பாடல்கள் ரசனை,. குறிப்பாக ‘வண்ண இறகு நீ’ மயிலிறகால் மனசை தடவி விடுகிறது.
கிராமத்து மண்வாசனை கமழ, தாறுமாறான இயல்பு கொண்ட மனிதர்களின் கதைக்களத்தில் ஒரு காதலை சொன்னவிதத்தில் இயக்குனரோடு ஒளிப்பதிவாளர் ஜே.பி.மேனின் கேமராவும் இணைந்து கொள்கிறது.