காடு வெட்டி திரை விமர்சனம்

சாமிப்புள்ள’ என்று சொந்த சாதி மக்களால் அழைக்கப்படுபவர், நாயகன் ஆர்.கே.சுரேஷ். தன்னுடைய சாதிப்பெண்களை திட்டமிட்டு ‘காதல்’ என்ற பெயரால், கபளீகரம் செய்பவர்களையும், செய்யத் தூண்டுகிறவர்களையும் வேரறுப்பதுவே, காடுவெட்டி படத்தின் கதைக்களம்.

‘இருவேறு சாதியினருக்கு இடையே நடக்கும் சம்பவத்தினை, இலைமறைகாயாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும், அது அப்பட்டமாகவே தெரிகிறது.

‘தெருக்கூத்து’ கலைஞரான சுப்பிரமணிய சிவாவின் மகள் வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவரை காதலிக்கிறார். இதனால், ஊர்க் காரர்கள் ஒன்று கூடி, அந்தப்பெண்ணை கொலை செய்யும் படி நிர்ப்பந்திக்கிறார்கள்.
பெற்ற மகளை கொலை செய்ய முடியாமல் தவிக்கும் சுப்பிரமணிய சிவா, ஊர்க்காரர்களுக்குத் தெரியாமல், தன்னுடைய மகள் காதலித்த பையனுடன் சேர்த்து வைக்கிறார். ஆனால், மகளை காதலித்த பையன், தன் சாதித்தலைவன் தூண்டுதலின் மூலமாக காதலித்தது ஏமாற்றியிருப்பது தெரிய வர…
இதனால், சுப்பிரமணிய சிவா, ஆர் கே சுரேஷின் உதவியை நாடுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது என்பது திகுதிகு கிளைமாக்ஸ்.

நாயகனாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் அந்த கேரக்டரில் தன்னை முழுவதுமாக பொருத்திக்கொள்கிறார். தோற்றப்பொலிவும் கூடுதலாய் கைகொடுக்கிறது.

தெருக்கூத்து கலைஞராக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, சாதி பெருமை பேசும் மக்களால், பெற்ற பிள்ளைகளை பறிகொடுக்கும் பெற்றோர்களை பிரதிபலிக்கும் வேடத்தில் வாழ்ந்திருக்கிறார்.

ஏ.எல்.அழகப்பன், ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா பாண்டிலட்சுமி, விஷ்மயா விஷ்வாந்த், சாந்தி மாறன், சுப்பிரமணியம், அகிலன், சுபாஷ் சந்திரபோஸ், ஜெயம் எஸ்.கே,கோபி, சங்கீர்த்தனா விபின் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் கிடைத்த கேரக்டர்களுக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.

சாதிக்கின் இசையில் பாடல்கள் ஓ.கே.. எம்.புகழேந்தியின் ஒளிப்பதிவு அம்சம்.

நாடக காதலை மையக்கருவாக கொண்டு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கறிார், இயக்குநர் சோலை ஆறுமுகம். வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் காதலித்தால் அதை நாடக காதல் என்று சொல்பவர்கள், அதற்கான விளக்கத்தை விரிவாகவும், தெளிவாகவும் சொல்லியிருக்கலாம்.