ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்க, இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘கள்வன்’ வரும் ஏப்ரல் 4 அன்று வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசுகையில்,, “இதேபோல ஒரு ஆடியோ ஃபங்கனில் ஜிவி பிரகாஷைப் பார்த்துவிட்டு ஹீரோ போல இருக்கிறார் என்று சொன்னேன். ரூட்டை மாற்றி விட்டேன் போல. இப்போது பார்த்த இந்தப் பாடலில் அவ்வளவு அருமையாக நடித்துள்ளார். ’பொல்லாதவன்’ படத்தில் தனுஷ் நடித்த அளவிற்கு ஜிவி நடிப்பில் மிரட்டியுள்ளார்.
இந்த விழாவிற்கு நான் வர முக்கியக் காரணம் பாரதிராஜா. அவரைப் பார்த்து தான் நாங்கள் சினிமாவுக்கு வந்துள்ளோம். அவருக்கு சீக்கிரம் விழா எடுக்கவுள்ளோம். பாரதிராஜா சாரும் பாதுகாக்கப்பட வேண்டிய அதிசயம். அவரது பயோபிக்கும் சீக்கிரம் யாராவது எடுப்பார்கள். பாரதிராஜா அருகில் உட்கார தகுதியானவர் வெற்றிமாறன். எனக்குப் பிடித்த இயக்குநர் அவர்’’ என்றார்.
தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசுகையில், “நான் சினிமாவுக்கு வரக் காரணமே பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படம்தான். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’’ என்றார்.
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசுகையில், “பாரதிராஜா சாரிடம் உதவி இயக்குநராக பணி புரிய ஆசைப்பட்டேன். இப்போது அவர் படத்தின் விழாவில் கலந்து கொள்வது பெருமை. இந்த படத்தை பற்றி பேசும்போது தன் வாழ்வில் மிகச்சிறந்த படத்தில் நடித்திருப்பதாக பாரதிராஜா சொல்வார். அதில் இருந்தே ‘கள்வன்’ படம் மீது எனக்கு அதிக ஆர்வம் வந்து விட்டது’’என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “கள்வன்’ படத்துக்கும் எனக்கும் சில தொடர்புகள் உள்ளது. நான் ‘விடுதலை’ படத்தில் பாரதிராஜா சார் தான் நடிக்க வேண்டும் என முடியெல்லாம் வெட்டி ‘லுக் டெஸ்ட்’ பண்ணேன். நான் லொகேஷன் பார்க்க சென்ற பிறகு அவர் வேண்டாம் என நினைத்தேன். அதை சொன்னபோது என்னிடம் பாரதிராஜா செல்லமாக கோபித்துக் கொண்டார். அதன்பிறகு கொஞ்ச நாள் கழித்து, இதே முடியோடு என்னை வைத்து ஒருத்தர் படம் எடுக்கப் போறாருன்னு சொன்னார். அது தான் ‘கள்வன்’ படம். நாங்க ‘விடுதலை’ படம் ஷூட் பண்ண இடத்தில் தான் ‘கள்வன்’ படமும் ஷூட் பண்ணினார்கள். காட்டில் படப்பிடிப்பு என்பது ரொம்ப கஷ்டம். ஒளிப்பதிவாளருக்கு எவ்வளவு சவால் இருந்திருக்கும் என்பது தெரியும். ஒரு படத்துக்காக காத்திருப்பது என்பது மற்றவர்களை விட இயக்குநருக்கு ரொம்ப சவாலாக இருந்திருக்கும். நாம் யானையை வைத்தோ, டைனோசரை வைத்தோ படம் எடுத்தாலும் திரைக்கதையும், கதையும் நல்லா இருந்தா மட்டும் தான் ஓடும். ஜிவி நடிகராக சிறப்பாக பரிணமித்து வருகிறார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.