நான்கு இளைஞர்கள், மூன்று இளம்பெண்கள் என ஏழு பேர் ஜாலி டூராக ஊட்டிக்கு பயணப்படுகிறார்கள். போன இடத்தில் ஒரு இளைஞன் காணாமல் போய் விட, ஆறு பேர் மீதும் போலீஸ் விசாரணை தொடங்குகிறது.
இந்நிலையில் காணாமல் போன இளைஞன் பற்றி கிடைக்கிற தகவல்கள் அதிர்ச்சி தருவதாக இருக்க, இரண்டொரு நாட்களில் இன்னொரு இளைஞனும் காணாது போகிறான்.
இதற்கிடையே சீரியல் கில்லர் ஒருவன் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொலைகள் செய்வது, அந்த கொலை பற்றி போலீசாருக்கு குறிப்பிட்ட ஒரு நேரத்தில் தகவல் கிடைப்பது என அடுத்த கட்ட திருப்பம்.
இளைஞர்கள் இருவர் காணாமல் விவகாரத்தில் சீரியல் கில்லருக்கு தொடர்புண்டா? இந்த சந்தேக வளையத்தில் நண்பர்கள் பங்கு உண்டா?
பரபர கேள்விகளுக்குப் பதில் தருகிற கிளைமாக்ஸ், சாய் ரோஷனின் தேர்ந்த இயக்கத்தின் அடையாளம்.
ஷாரிக் ஷாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த் இந்த ஏழு பேரும் நண்பர்களாக கதைக்குள் கலந்து போக, ஆனந்த், செல்வா, பாலா நடிப்பில் அடையாளம் பதிக்கிற மற்றவர்கள்.
ஹீரோக்களில் ஒருவராக வருகிற ‘பிக் பாஸ்’ ஷாரிக் ஹாசன் சைலண்ட் வில்லத்தனத்தில் ரசிக்க வைக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக வருபவர் நடிப்பில் கவர்கிற மற்றொருவர். இவரது விசாரணை பாணி ‘அடடா’ ரகம்.
காட்சிகளுக்கு வேண்டிய பரபரப்பு தருகிறது, கெவின் என்னின் பின்னணி இசை. ஊட்டிக்கு இன்னும் பியூட்டி சேர்க்கிறது,விஷால் எம்மின் கேமரா.
முதல்பாதி சஸ்பென்ஸ் முடிச்சை மறுபாதியில் எதிர்பாராத கோணத்தில் இயக்குனர் அவிழ்க்கும் இடங்கள் ஆ…ஆச்சரியம். அந்த கிளைமாக்ஸ் ‘அட’ போட வைக்கிறது.