ரோமியோ திரை விமர்சனம்

நாயகி மிர்ணாளினியை பார்த்ததும் விஜய் ஆண்டனிக்குள் பொங்குகிறது காதல் ஊற்று. உறவுக்கார பெண் என்ற வகையில் திருமணம் சுலபமாகிறது. ஆனால் திருமணம் முடிந்தபிறகே மனைவி வேண்டாவெறுப்பாக திருமண பந்தத்தில் தலையைக் கொடுத்திருக்கிறாள் என்பது தெரிய வர, அதற்கான காரணம் இன்னும் அதிர வைக்கிறது. அந்த பெண் சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு அதற்கான முனைப்பில் இருந்தவள். கட்டாயத் திருமணம் மாதிரி அவள் திடீர் திருமணம் அமைந்து விட…

அப்புறமென்ன கணவனிடம் பாராமுகம். ஒருகட்டத்தில் மனைவியின் லட்சியம் கணவனுக்கு தெரிய வர, அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பது சுவாரசிய திரைக்களம்.

ஆக்க்ஷன் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் ஆண்டனி, காதல் நாயகனாக நடிப்பில் ‘புது’முகம் காட்டி இருக்கிறார். ம னைவிக்காக அவர் தன்னை மாற்றிக் கொள்ளும் இடங்களில் அந்த கணவன் கேரக்டர் உயரம் போகிறது.

கேரக்டர் தேர்வில் வித்தியாசம், கூடவே நடிப்பில் வித்தியாசம் என அப்படியே நடனம் வரை ஒரு கை பார்த்திருக்கிற விஜய்ஆண்டனி காமெடியிலும் ரசிக்க வைக்கிறார் என்பது ரசிகனுக்கான பரவச ஏரியா.

நாயகியாக நடித்திருக்கும் மிர்ணாளினி, கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார். தன் கேரியரின் வெற்றிக்குப்பின் இருப்பது கணவர் தான் என தெரிய வரும் இடத்தில் அம்மணி நடிப்பில் ரசிகர்களின் கண்மணியாகி விடுகிறார்.

நாயகனுக்கு காதல் ஐடியா கொடுக்கும் யோகிபாபு வரும் காட்சிகள் அனைத்தும் கலகலப்பு. நாயகியின் நண்பர்களாக நடித்திருக்கும் ஷாரா அண்ட் கோ வரும் காட்சிகள் சரவெடி.

வி.டி.வி.கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி, சுதா கதைக்களத்தில் மிளரும் நட்சத்திரங்கள்.

ஒளிப்பதிவாளர் பரூக் ஜே.பாட்ஷாவும் இசையமைப்பாளர் பரத் தனசேகரும் இந்த ரோமியோவின் பக்க பலம். பக்கா பலம்.

காதல் கதைக்குள் மனைவியின் லட்சியம் நிறைவேற போராடும் கணவன் பாத்திரம் திரைக்கு புதுசு இல்லையென்றாலும் அதை புதுவித ட்ரீட்மென்ட்டில் தந்து இதயத்தை ஈர்த்து விடுகிறார், இயக்கிய விநாயக் வைத்தியநாதன்.

இந்த ரோமியோ, கோடை ஸ்பெஷல்.