ஸ்டார் திரை விமர்சனம்

போட்டோகிராபராக இருக்கும் லால் தன்னால் எட்டிப் பிடிக்க முடியாத சினிமாவை மகன் கவின் மூலம் எட்டிப் பிடிக்க நினைக்கிறார். அதற்காக தனது மகன் கவினுக்கு சிறுவயது முதலே சினிமா ஆர்வத்தை ஊட்டி வளர்க்கிறார்.

கல்லூரிப் படிப்பை முடித்து, நடிகனாக முயலும் நேரத்தில் சினிமாவின் உண்மையான கோர முகத்தை காண்கிறார், கவின்.

நிஜ வாழ்க்கைக்கும் நினைத்த வாழ்க்கைக்கும் இருக்கும் வித்தியாசத்தை உணரும் ஒவ்வொரு தருணமும் அவஸ்தை. அவமானம். கண்ணீர். இதில் வேதனையின் உச்சமாக அவரது காதலி அவரை விட்டு செல்கிறார்.

அந்த காயம் தந்த வலி மாறுவதற்குள் விபத்து ஏற்பட்டு முகத்தில் காயம் தந்த கொடையாய் முகத் தழும்பு.,

இப்போது கருகியே போகிறது, நடிகனாகும் கனவு. இந்த நேரத்தில் திருமணம் அடுத்து பல்வேறு போராட்டம் என யதார்த்த வாழ்க்கை வலி தர, அதையும் தாண்டி கவினால் நடிகனாக முடிந்ததா? என்பது உணர்வும் நெகிழ்வுமான திரைக்கதை.

சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் பயணிக்கும் கலையரசன் என்ற கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக பொருந்திப் போயிருக்கிறார், கவின். கல்லூரி காலங்களில் நடனம், காதல் என்று அசத்துபவர், சினிமா வாய்ப்புக்காக காத்திருந்து ஏமாந்து போகும் காட்சிகளிலும், கையில் பணம் இல்லாமல் மும்பை வீதிகளில் வாழ்க்கையோடு போராடும் காட்சிகளிலும், கனவுகளுக்காக மனதளவில் ரணமாகும் இளைஞர்களின் பிரதிபலிப்பாக வலம் வருகிறார்.

‘இனியும் என்னால் சந்தோஷமாக இருப்பது போல் நடிக்க முடியாது, என்னை விட்டு போய்விடு’ என்று மனைவியிடம் கதறும் காட்சிகளில் அதுவரை தோல்வி தந்த மொத்த சுமையையையும் நம் நெஞ்சுக்குள் நடிப்பால் இறக்கி விடுகிறார், கவின்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் ஆதித்தி பொஹங்கர் இருவருக்கும் திரைக்கதையில் சமமான வாய்ப்பு என்றாலும், இயல்பான நடிப்பால் ஒரு படி முந்துகிறார், பிரீத்தி முகுந்தன்.

கவினின் தந்தையாக நடித்திருக்கும் லால், மகனின் கனவுக்கு உருவம் கொடுக்க முன்வரும் இடங்களில் நடிப்பு முன்னிற்கிறது. கவினின் அம்மாவாக கீதா கைலாசம் சிறப்பு.

மாறன், காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், தீப்ஸ், ராஜா ராணி பாண்டியன், சஞ்சய் ஸ்வரூப், தீரஜ் கதைக்கான கேரக்டர்களில் இயல்பாக வந்து போகிறார்கள்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஜாலம் புரிகிறது. குறிப்பாக 80- காலத்து ஸ்டைலில் போடப்பட்ட பாடல்கள் அட்டகாசம்.

80-களின் இறுதியில் தொடங்கும் கதையை படிப்படியாக தற்போதைய கால கட்டத்திற்கு நகர்த்தி வரும் ஒளிப்பதிவாளர் எழில் அரசின் கேமரா கோலங்கள் இன்னொரு வர்ண ஜாலம்.
கனவுகளுக்காக கடைசி வரை போராடும் ஒவ்வொருவரும் ஸ்டார் தான் என்பதை மனதில் ஆணியடித்து சொன்ன விதத்தில் நிஜ ஸ்டாராய் சுடர் விடுகிறார், இயக்கிய இளன். இடைவேளை ட்விஸ்ட்டும் கிளைமாக்சும் படத்தை வேறு லெவலுக்கு கொண்டு போய் விடுவது இவரது இயக்கத்துக்கான மகுடம்.