சிறுவயதில் பெற்றோரை தொலைத்த தனுஷ் இரண்டு தம்பிகள் மற்றும் தங்கையுடன் பிழைப்புக்காக சென்னை வருகிறார். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவுகிறார், செல்வராகவன்.
தங்கை, தம்பிகளுக்கு தந்தையாக இருந்து குடும்பத்தை காக்கும் ராயனுக்கு ஃபாஸ்ட் புட் கடை தான் தொழில்.
தனுஷ் இருக்கும் பகுதியில் கோலோச்சும் இரண்டு கேங்ஸ்டர்களின் ‘ரவுடி’யிசத்தை முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார், காவல் துறை அதிகாரி பிரகாஷ்ராஜ். அவரது திரை மறைவு ஆக்ஷனில் எதிர்பார்த்தபடியே தாதாக்கள் மோதல் தொடங்க, இதில் தனுஷ் குடும்பம் எப்படி சிக்கிக் கொள்கிறது என்பதை திகுதிகு திருப்பங்களுடன் சொல்லியிருக்கிற டைரக்டர் தனுஷூக்கு முதலில் ஒரு சபாஷ். பழிவாங்கல் கதையை உறவுகளுடன் இணைத்து சொல்லியிருக்கிற விதத்திலும் இயக்குனர் தனுஷ் ‘பளிச்.’
படத்தின் நாயகன் தனுஷ் வழக்கம் போல் தன் கேரக்டருக்கு என்ன தேவையோ அதை மிகையில்லாமல் செய்கிறார். பொதுவாக அதிகம் பேசாமல் உணர்வுகளை கடத்தும் இந்த தனுஷ் நமக்கு புதுசு. பெரிய த ம்பியை திட்டும் இடத்திலும் சின்னத்தம்பிக்கு அட்வைஸ் செய்யும் இடத்திலும் நடிப்பில் மீட்டர் தாண்டாத அந்த அண்ணன் மனசை அள்ளிக் கொள்கிறார்.
இவருக்கு தம்பிகளாக வரும் சந்திப் கிஷனும் காளிதாஸ் ஜெயராமும் அவரவர் கேரக்டர்களில் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறார்கள். குறிப்பாக பெரிய தம்பியாக வரும் சந்தீப் கிஷனுக்கு இந்த படம் அவரது கேரியரில் பெஸ்ட்டாக இருக்கும்.

கதையே இவரது கேரக்டர் மூலம் தான் நகர்கிறது. அதை தனது நடிப்பில் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார், சந்தீப். இவருக்கும் அபர்ணா பாலமுரளிக்குமான முரட்டு காதல் சிறப்பு. முட்டு சந்தில் சைக்கிளில் ஜோடியாக வரும்போது எதிரே அண்ணன் தனுஷ் வந்து விட, அப்போது சந்தீப் கொடுக்கும் ரியாக்ஷன் ‘அடடே’ ரகம்.
சந்தீப்பின் காதலியாக அபர்ணா பாலமுரளி. மிக சிறப்பான யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அந்த கேரக்டரை நமக்குள் இடப்பெயர்ச்சி செய்து விடுகிறார். ‘எங்கப்பாவை எதுக்கு அடிச்சே’ என்று கோபமும் ஆற்றாமையுமாய் சந்தீப்பை கேட்கிற இடத்தில் அந்த நடிப்புக்கு கரம் தட்டத் தோன்றுகிறது..
தனுஷ் தங்கையாக வரும் துஷாரா விஜயன் நடிப்பில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அதைக் காட்டிலும் ஆக்ஷன் காட்சிகளிலும் அதகளம் பண்ணியிருக்கிறார்.
தனூஷ் குடும்பத்தின் காட்பாதராக செல்வராகவன் ஈர்க்க, வில்லனாக வரும் பருத்திவீரன் சரவணன் இன்னொரு நடிப்பு அட்டகாசம். தோற்றமும் உடல் மொழியும் அந்த தாதா பாத்திரத்தை மிரட்சியோடு பார்க்க வைக்கிறது.
முக்கிய வில்லனாக வரும் எஸ்.ஜே சூர்யா வழக்கமான நடிப்பில் இருந்து மாறுபட்டு தெரிகிறார். பழிவாங்கும் காவல்துறை அதிகாரியாக வரும் பிரகாஷ்ராஜ் கிடைத்த கேப்புக்குள் கில்லியடிக்கிறார். வருவது கொஞ்ச நேரமே என்றாலும் அந்த அப்பா கேரக்டரில் இளவரசு, ‘அக் மார்க்’ அமர்க்களம்.

ஏ.ஆர் ரகுமானின் இசை படத்தின் இன்னொரு பலம். அடங்காத அசுரன் பாடல் இளைஞர்களின் கொண்டாட்டம். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறது.
படம் ஆரம்பித்தது முதல் இறுதிவரை ஒவ்வொரு காட்சியையும் மிக நேர்த்தியாகவும் யதார்த்தமாகவும் ரசிக்கும்படி செதுக்கி தனக்கான இயக்குனர் அடையாளத்தை மறுபடியும் உறுதிப்படுத்தி இருக்கிறார், தனுஷ். அத்தனை கேரக்டர்களின் நடிப்பிலும் இயக்குனர் தனுஷை உணர முடிவது படத்தின் பலம்.
அந்த உள்ளூர் பூசாரியை திடீரென வில்லனாக காட்டுவது மட்டும் கதைக்கு சந்றே அந்நியப்பட்டு நிற்கிறது.
இந்த ராயன், மகுடம் சூடுவான்.
