பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், இப்போதும் அதே டிராக்கில் நடித்திருக்கும் படமே இந்த ரகு தாத்தா.
1960-70களில் நடக்கிற கதை. தமிழ் நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் நடந்த நேரத்தில் வள்ளுவன் பேட்டை என்ற கிராமத்தில் வங்கி ஊழியராக பணிபுரிந்து வருகிறார், கயல்விழி பாண்டியன் (கீர்த்தி சுரேஷ்) இந்தி திணிப்புக்கு எதிராக மேடை போட்டு பேசுகிறார். தமிழ் மொழி மீது மிகுந்த பற்று வைத்திருக்கும் அவர் பெண்ணிய சிந்தனையும், பெரியார் கொள்கையையும் பின்பற்றி வருகிறார்.
அதோடு தன் தந்தை பாண்டியன் பெயரில் கதைகளையும் எழுதி வருகிறார். இந்த சூழலில் வங்கியில் உயரிய பதவிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்தி கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று மேலதிகாரி சொல்ல, அப்படி ஒரு பதவியே வேண்டாம என்கிறார்.
இதற்கிடையே திடீரென தாத்தாவின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட, அவரின் கடைசி ஆசை, சாவதற்குள் பேத்தி திருமணத்தை பார்த்து விட வேண்டும். இதனால் தன் எழுத்தை புகழ்ந்தபடி தொடர்ந்து நட்பு பாராட்டி வரும் ரவீந்தர விஜய்யை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். நிச்சய தார்த்தம் நடந்து முடிகிறது. ஆனால் ஆணாதிக்க வாதியாக இருக்கும் ரவீந்தர் பெண் அடிமைத்தனத்தை ஆதரித்து வரும் ரகசியம் தெரிய வர… கயல்விழி என்ன முடிவெடுக்கிறார்? இந்தி திணிப்பை வெறுக்கும் அவர் ஏன் இந்தி கற்றுக் கொள்கிறார்? கேள்விகளுக்கு விடைஎதிர்பாராத கிளைமாக்ஸ்.

படத்தை நகைச்சுவையாக கொண்டு சென்றிருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அண்ணனின் திடீர் திருமணம், தாத்தாவின் எதிர்பாராத உடல்நலக் குறைவு என ஆங்காங்கே திருப்பத்துக்கு வேலை வைத்திருக்கிறார்கள்.
1960-70-களின் நாயகி கயல் விழியாக கீர்த்தி சுரேஷ் அந்த கேரக்டரில் அப்படி பொருந்திப் போகிறார். அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் எதிராக வெடிக்கும் கதாபாத்திரத்தில் அச்சு அசலாக மிளிர்கிறார். இறுதிக்காட்சியில் அவரது வசனங்களும், சுயமரியாதை சம்பவங்களும் கரகோஷத்துக்கானவை. சந்தேகம் என்று வந்தபிறகு அவர் தனது காதலனை எதிர்கொள்வது நடிப்பில் அப்படி ஓர்அழகு. இந்தி சபாவை மூட வைப்பதில் காட்டும் ஆவேசத்தில் மையம் கொள்கிற பெண் புயலாக உணர முடிகிறது.
அலுவலக தோழியாக தேவதர்ஷினி, அப்பாவாக ஜெயக்குமார், தாத்தாவாக எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் தனித்து தெரிகிறார்கள். போண்டாவை வாயில் கவ்வியபடி கிளம்பும் திடீர் மாப்பிள்ளை சம்பந்தப்பட்ட ஒரிரு இடங்களில் மட்டும் நகைச்சுவை எட்டிப்பார்க்கிறது.

‘போலி பெண்ணியவாதி’யாக நடிப்பில் ஸ்கோர் செய்கிறார், ரவீந்திர விஜய்.
ஷான் ரோல்டனின் இசை, படத்தின் பக்கக் கிளையாக பரவி நிற்கிறது.
போலி பெண்ணியவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் படம் என்றளவிலும் ‘இந்தி திணிப்பு’ வேறு ‘இந்தி எதிர்ப்பு’ வேறு என்பதை பிரித்து காட்டும் இடங்களிலும் இயக்கிய மதன்குமார் கொடி சற்று உயரவே பறக்கிறது. திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னமும் ஸ்கோர் செய்து இருக்கும்.