கொட்டுக்காளி திரை விமர்சனம்

மீனாவுக்கும் (அன்னா பென்), பாண்டிக்கும் (சூரி) திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்நிலையில் மீனாவுக்கு பேய் பிடித்து விடுவதாக சொல்லப் பட, பேயை விரட்ட அவரை சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள். அப்பொழுது பாண்டியும் உடன் செல்கிறார்.

மீனாவுக்கு நிஜமாகவே பேய் பிடித்ததா? அல்லது திருமணம் பிடிக்காமல் அவர் ஆடும் நாடகமா? கேள்விக்கு பதிலை காட்சிகளில் வைத்திருக்கிறார்கள்.

கூழாங்கல் படம் மூலம் வைரக்கலான பி.எஸ். வினோத்ராஜ் தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார். சொல்ல வந்ததை சொல்ல நேரம் எடுத்துக் கொள்கிறார். அவர் நிதானமாக கதை சொல்வது படம் பார்ப்பவர்களின் பொறுமையை சோதிப்பதாக அமைந்து விடுகிறது..

சூரியை பொறுத்த மட்டில் அந்த கிராமத்து பாண்டியாகவே வாழ்ந்திருக்கிறார். மீனா ஒரு காதல் பாடலை முணுமுணுப்பதை கேட்டு அத்தனை நாள் வரை அடக்கி வைத்திருந்த எரிச்சலை வெளிப்படுத்தும் இடத்தில் நடிப்பில் சூரியப் பிரகாச சூரி.

மீனாவாக அன்னா பென். அளந்து பேசி நடிப்பின் அளவுகோலாகி இருக்கிறார்.

அன்னாபென் அணிந்திருக்கும் மோதிரத்தை கொடுத்தது யார்? மீனாவுக்கு தொண்டையில் வடு எப்படி வந்தது? மீனாவுக்கு ஏன் தன்னை ஒரு ‘மற்ற நபராக’ பார்க்கத் தோன்றுகிறது போன்ற கேள்விகளுக்கான விடையை ஒருவேளை அடுத்த பாகத்தில் (எடுத்தால்) சொன்னாலும் சொல்வார்கள்..
விருதுப் படம் என்றாலே அது நடை வண்டி பயணம் என்பதை இந்த கொட்டுக்காளியும் சொல்கிறது. அதனாலேயே ஒரு மணி 40 நிமிட படம் 3 மணி நேரம் தியேட்டருக்குள் அடைத்துப் போட்ட உணர்வை தந்து விடுகிறது.