வாழை திரை விமர்சனம்

சிறுவயதிலேயே அப்பாவை இழந்த சிறுவன் பொன்வேல், அம்மா மற்றும் அக்கா அரவணைப்பில் வளர்கிறான். அம்மாவும், அக்காவும் பக்கத்தில் உள்ள ஊர்களில் வாழைத்தார்களை அறுத்து அதை லாரியில் ஏற்றும் பணியை செய்து வருகிறார்கள். பள்ளியில் முதல் மாணவனாக இருக்கும் பொன் வேலுக்கோ இந்த வேலை சுத்தமாக பிடிக்கவில்லை. இருந்தும் குடும்ப கஷ்டத்திற்காக வேண்டா வெறுப்பாக இந்த வேலையை செய்து வருகிறான்.

அன்று பள்ளியில் நடக்கும் ஆண்டு விழா ஒத்திகைக்காக தாய்க்கு தெரியாமல் அக்காவை மட்டும் வேலைக்கு அனுப்பி விட்டு பள்ளிக்கு சென்று விடுகிறான். பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும் பொன்வேலுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. காய் சுமக்க சென்ற தன் அக்காவிற்கு என்ன ஆனது? என்பது படத்தின் கலங்கடிக்கும் மீதிக் கதை.

பொன்வேல், சேகர் ஆகிய இரு சிறுவர்களே படத்தின் நாயகர்கள்.நடித்தது போன்றே தெரியாமல் படத்தில் அத்தனை இயல்பாக வருகிறார்கள்.. இருவரில் ஒருவர் கமல் ரசிகர். இன்னொருவர் ரஜினி ரசிகர் என்று வைத்து கதைக்களத்தை தொடக்க முதலே ரசனை மிக்கதாக மாற்றி விடுகிறார், இயக்குனர்.

சிறுவன் பொன்வேலால் விரும்பப்படும் பள்ளி ஆசிரியையாக வரும் நிகிலா விமல் இயல்பாகவே அழகு. படத்தில் அவர் அன்பால் ஆகர்ஷிக்கும் அந்த நடிப்பு நிஜமாகவே பேரழகு.

சிறுவன் பொன்வேலின் அக்காவாக நடித்திருக்கும் திவ்யா துரைசாமியின் பாத்திரமும் நடிப்பும் சிறப்பு. அவரது காதலனாக கம்யூனிசம் பேசும் கலையரசன் பொருத்தமான தேர்வாக தன் இருப்பை நிரூபிக்கிறார். சிறுவனின் அம்மாவாக வரும் ஜானகி நடிப்பில் இறுதிக் காட்சி கண்களை குளமாக்கும்.

ஜேஎஸ்கே.சதீஷ் முதலாளித்துவத்தின் பிரதிநிதியாக அந்த பாத்திரத்தில் பிரகாசிக்கிறார். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் .சந்தோஷ் நாராயணனின் இசையும் இந்த வாழையை தாங்கும் வேர்களாகி இருக்கின்றன.

படத்தில் சிறுவனாக வரும் பொன்வேல் தான் இன்றைய இயக்குநர் மாரிசெல்வராஜ். தனது கடந்த காலத்தின் கசிந்த காயங்களை பதிவு செய்த விதத்தில் ஓங்குதாங்காய் இந்த வாழைக்கு கூடுதல் உயரம் சேர்த்திருக்கிறார்.

காதலுக்கு சிறுவனை தூதாக சிறுவனை பயன்படுத்துவது போன்ற சில நெகட்டிவ் விஷயங்களும் இருக்கின்றன. படத்தின் இறுதிக் காட்சி நெஞ்சுக்குள் தீப்பந்து. ஆடு, மாடுகளை போல் லாரியிலும், டிராக்டரிலும் பயணம் செய்யும் மனிதர்களின் உயிர்களுக்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்வியை மறக்காமல் எழுப்புகிறது இப்படம்.

வாழை, வாழ்வியல்.