சூர்யாவின் சனிக்கிழமை திரை விமர்சனம்

ஹீரோ நானி சிறு வயதில் இருந்தே கோப சுபாவம் கொண்டவர். எங்கு போனாலும் அடிதடி, கலாட்டா தான். ஒருகட்டத்தில் தனது மகனைக் குறித்து கவலைப்படும் தாய், இறக்கும் தருவாயில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் உன் கோபத்தை காட்டு என சத்தியம் வாங்கிக் கொண்டு இறந்து போகிறார்.
அதனால், வாரத்தில் ஆறு நாட்கள் தன் கண்ணில் படும் தவறுகளை எழுதி வைத்துக் கொண்டு, சனிக்கிழமை மட்டும் சென்று அவர்களை நானி நையப்புடைக்கிறார்.

இந்த காலகட்டத்தில் பெண் போலீஸ் பிரியங்கா மோகனின் நட்பு கிடைக்க, அது காதல் வரை கனிய…
பிரியங்கா மோகன் போலீசாக இருக்கும் அதே ஸ்டேஷனில் எஸ்.ஜே. சூர்யா இன்ஸ்பெக்டர். தனக்கு கோபம் வரும்போதெல்லாம் தனது சொந்த ஊரான சோகுல பாலம் மக்களை கொடூரமாக அடித்து துவைப்பது தான் இவரது தலையாய பணி.

இந்நிலையில், நானிக்கு பிரியங்கா மோகன் மூலம் சோகுல பாலம் மக்களிடம் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர்கள் அன்பில் கரைந்த நானி, எஸ்.ஜே.சூர்யாவை பெண்டெடுப்பது மீதி கதைக்களம்.

தெலுங்கில், ‘சரிபோதா சனிவாரம்’ என்றும் தமிழில் ‘சூர்யா சாட்டர்டே’ என்றும் இந்த படம் வெளியாகி உள்ளது. படத்தின் ஆரம்பத்தில் 20 நிமிடங்கள் ஹீரோ ஏன் சனிக்கிழமை மட்டும் சண்டை போடுகிறார் என்பதை கட்டமைப்பதிலேயே போய் விடுகிறது.

நானிக்கு நடிக்கவும் அடிக்கவும் வாய்ப்புள்ள கேரக்டர். இந்த களேபரத்திலும் பிரியங்கா மோகனுடனான அந்த காதல் பாஸந்தியின் இனிப்பு. வில்ல இன்ஸ்பெக்டராக எஸ்.ஜே.சூர்யா சைக்கோத் தனத்துடன் கூடிய அந்த கேரக்டரில் புகுந்து விளையாடுகிறார். கிளைமாக்சில் இவருக்கும் நானிக்குமான அந்த முட்டல் மோதல் திரையரங்கின் அதிக பட்ச கரகோஷத்துக்கு உத்தரவாதம்.
எஸ்.ஜே.சூர்யாவின் அண்ணனாக வரும் முரளி சர்மா அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார். வன்மமும் நகைச்சுவையும் கலந்த அந்த கேரக்டர் திரை வடிவமைப்பிலும் புதுசாக பிரஷ்சாக இருக்கிறது.

நாயகனும் வில்லனும் மோத முனையும்காட்சி தொடங்கி முடிவு வரை காட்சிகள் கொஞ்சமும் சூடு குறையாமல் இருக்கிறது. இதற்காகவே இயக்குனர் விவேக் ஆத்ரேயாவுக்கு கொடுக்கலாம், ‘கமர்ஷியல் கிங்’ பட்டம்.