தலைமைச் செயலகத்தில் இடைத்தரகராக இருந்து வரும் விஜய் ஆண்டனி, எந்த வேலையாக இருந்தாலும் அதை கமிஷன் அடிப்படையில் கச்சிதமாக முடித்துக் கொடுக்கிறார்.
தனது பெயர் வெளிவராமல் எவ்வளவு பெரிய காரியமாக இருந்தாலும், அதை அவர் அணுகும் விதமே தனி.
இந்தியா மட்டும் இன்றி சர்வதேச அளவில் ஏறக்குறைய இதே தொழிலை செய்து கொண்டிருக்கும் வில்லன் சுனில் கிருபாளினிக்கு தமிழகத்தில் இப்படி ஒரு அசகாய சூரன் இருப்பது தெரிய வர…
விஜய் ஆண்டனியிடம் இருக்கும் அனைத்தையும் அபகரித்துக் கொண்டு அவரை காலி பண்ண நினைக்கிறார்.
அவரிடம் இருந்து விஜய் ஆண்டனி தப்பித்து தனது வேலையை தொடர்ந்தாரா ? அல்லது பழிக்கு பழியாக அவரது அதிகார மையத்தை ஆட்டம் காண வைத்தாரா என்பதை சமகால அரசியலுடன் முடிச்சு போட்டு சொல்லி இருப்பதே இந்த சத்துவமிக்க சக்தி திருமகன்.
ஜனநாயகம் என்ற போர்வையில் பெரும் பணக்காரர்களுக்கு அரசு எப்படி வெண் சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது என்பதையும் நெஞ்சில் ஆணி அடித்து சொல்லி இருக்கிறார்கள்.
எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அதை காதும் காதும் வைத்த மாதிரி முடித்துக் கொடுக்கும் சம யோசிதமும் சாமர்த்தியமும் இணைந்த கிட்டு கேரக்டரில் நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி. தன் மூளைக்குள் அடுத்தடுத்த திட்டங்கள் ஓடிக்கொண்டிருப்பதை பார்வை மூலமே சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிrறார். அவர் செய்து முடிக்கும் விசயங்களும், அதற்காக அவர் போடும் ஸ்கெட்ச்களும் ‘அட இப்படியெல்லாம் கூட முடியுமா…’ என ஆச்சரியப்பட வைப்பவை.
வில்லனாக நடித்திருக்கும் சுனில் கிருபளானி, சமகால அரசியல்w நிகழ்வுகளையும், அதன் பின்னணியில் கோடிகள் புரள்வதையும் அசால்ட் டாக கையாளும் இடங்கள் அத்தனையும் இவர் நடிப்பில் கோடி பெறும். அவரது திமிரான rபேச்சும், உடல் மொழியும், அரசியல் பின்புலமும் அந்த கேரக்டருக்கான பலத்தை கூட்டி விடுகிறது.
நாயகியாக நடித்திருக்கும் திருப்தி ரவீந்திராசி, கணவர் விஷயத்தில் எதை நம்பலாம் எதை நம்பக் கூடாது என்பதை படிப்படியாய் தெரிந்து கொள்ளும் இடங்கள் அத்தனையும் படத்தின் சென்டிமென்ட் ஏரியா.
இதில் பாதி நடிப்பை அவரது கரிய பெரிய கண்களே பேசி விடுகிறது.
நாயகனின் நண்பன் மாறனாக செல் முருகன் அந்த கேரக்டருக்கு சரியாக பொருந்தி போகிறார்.
விஜய் ஆண்டனியை பிடிக்க ஸ்பெஷல் ஆபீசராக வரும் கிரண் குமார், கவனிக்க வைக் கிறார்.
ஷோபா விஸ்வநாத், ரியா ஜித்து, வாகை சந்திரசேகர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் கதாபாத்திரமும், அதில் அவர்கள் பங்களிப்பும் நிறைவு.
ஷெல்லி ஆர்.கேலிஸ்ட்டின் கேமரா காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப பயணிக்கிறது.
விஜய் ஆண்டனி இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளோடு நம்மை நெருக்கமாக்குகிறது.
எழுதி இயக்கியிருக்கும் அருண் பிரபு, சமகால அரசியல் மற்றும் மறைமுக அரசியல் வியாபாரத்தை அப்பட்டமாக சொல்லியிருக்கிறார். இந்திய அரசியலை eeகாட்சிப்படுத்திய விதம், மத்திய அமைச்சர்கள் பாத்திரங்களின் rவடிவமைப்பு என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்
தோசை மாவுக்கு போடப்படும் ஜி.எஸ்.டி. உள்பட அரசு திட்டங்களினால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதை பட்டியலிட்ட விதம் சூப்பர். பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் கோடியில் குளிக்க, ஜனநாயகம் என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் அரசு மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை கேள்வி கேட்க தூண்டியிருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு. இந்த வகையில்
இந்த ‘சக்தித் திருமகன்’ மக்களை சிந்திக்க வைக்கிறான். இப்படியா அதிகாரம் படைத்தவர்களிடம் ஏமாந்து கொண்டு இருந்தோம் என்று சிந்திக்கவும் வைக்கிறான்.
முதல் பாதையில் மூச்சிரைக்கு ஓடும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் ஆங்காங்கே மூச்சு வாங்குவதை தவிர்த்து இருக்கலாம்.