டியூட் –திரை விமர்சனம்

தோற்ற காதல் ஜெயித்த காதல் என்று பல படங்கள் பார்த்து விட்டோம். இது திரையில் இதுவரை சொல்லப்படாத காதல். அதையும் புதிய கோணத்தில் சொல்லி இருக்கிறார்கள். பிரதீப் ரங்கநாதனைக் காதலிப்பதாக அவருடைய மாமா மகள் மமிதா பைஜு சொல்கிறார். சிறுவயது முதல் ஒன்றாக பழகி வந்ததால் உன்னை என்னால் நல்ல சினேதியாக தான் பாவிக்க முடிகிறது. அதனால் காதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்கிறார் பிரதீப்.

ஆறு மாத இடைவெளிக்குள் பிரதீப்பிடம் ஒரு மாற்றம். நம்மிடம் காதல் சொன்ன மாமா மகளை மண ந்தால் என்ன என்கிற அளவுக்கு போகிறது, அந்த மன மாற்றம். அதை அமைச்சராக இருக்கும் தனது மாமாவிடம் சொல்ல, மாமா மகிழ்ந்து போகிறார். திருமண தேதி நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் மாமா மகளோ, ‘சாரி மாமா… இப்போது நான் இன்னொருவரின் காதலி’ என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.

அப்படியே காதலனையும் அறிமுகப்படுத்துகிறாள். திருமண தேதி நெருங்கும் சமயத்தில் மகளின் காதல் பற்றி தந்தைக்கு தெரிய வர, சாதி பாகுபாடு தடையாக நிற்கிறது . மகளிடம், “வேற்று சாதி பையனை காதலித்து திருமணத்துக்கும் தயாரான என் தங்கையை கொன்றவன் நான். நீயும் அடம் பிடித்தால் உன்னை கொல்லவும் தயங்க மாட்டேன்” என்று அவர் கொலைவெறி முகம் காட்ட…

பிறகென்ன…குறித்த தேதியில் பிரதீப்–மமிதா திருமணம் நடந்து முடிகிறது.

இதற்கிடையே காதலனிடம், இரண்டே மாதத்தில் உங்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று பிரதீப் உறுதி கூற…

சொன்னபடி இரண்டு மாதத்தில் விசா உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்கிறார் பிரதீப்.

ஆனால் அங்கும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. மமிதாவை பரிசோதித்த மருத்துவ அறிக்கை அவர் இரண்டு மாத கர்ப்பிணி என்கிறது. அதனால் விசா ரத்தாக…

இப்போது இதில் முக்கியமான ட்விஸ்ட், குழந்தையின் தந்தை பிரதீப் அல்ல. மமிதாவின் காதலன். அடுத்த எட்டு மாதத்தில் மகன் பிறக்கிறான். இப்போது தடையின்றி விசா கிடைக்க, காதல் ஜோடி வெளிநாட்டுக்கு பறக்க தயார் ஆகிறது.

இப்போது இன்னொரு சிக்கல். மமிதா சட்டப்படி பிரதீப் மனைவி. முறைப்படி அவர்கள் விவாகரத்து நடந்து முடிந்தால் மட்டுமே மமிதாவின் வெளிநாட்டு பயணம் தடை படாது. எனவே விவாகரத்துக்கான ஏற்பாடுகளை பிரதீப் செய்யும் போது தகவல் அமைச்சர் காதுக்கு வருகிறது. ஏற்கனவே ஜாதி வெறி பிடித்த அவர், மகளின் விவாகரத்து முயற்சிக்கு பின்னாக மகளின் வேற்று சாதி காதலன் இருப்பது தெரிய வர…

அடுத்து வெடித்தது பிரளயமா… பூகம்பமா… அமைச்சரின் கோபம் காதல் ஜோடிகளை சின்னாபின்னம் ஆக்கியதா… அல்லது தடைகளை தாண்டி காதல் ஜோடி இணைந்ததா என்பதே இந்த க்யூட்டான டியூட்.
நாயகனாக நடிப்பில் புலிப் பாய்ச்சல் பாய்ந்திருக்கிறார், பிரதீப் ரங்கநாதன்.இந்த சீரியஸ் கதைக்குள் படம் முழுக்க ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாக வலம் வந்திருக்கிறார். அதுவே படத்தின் பிளஸ்சாகவும் மாறி விடுகிறது.

கட்டிய தாலியை மனைவிக்கு வேலி யாக மாற்றி விடும் இடம் தொடங்கி அந்த கேரக்டர் நம் மனதளவிலும் உயரத் தொடங்கி விடுகிறது. கணவனுக்கும் காதலனுக்கும் இடையே பேலன்ஸ் செய்யும் கேரக்டரில் மிக அழகாக பதிந்து போகிறார் நாயகி நமீதா பைஜு.

தந்தையின் ஜாதி வெறி பிடித்த முகம் பார்த்து அதிரும் இடத்தில் நடிப்பரசியம்மா நீ.

தமிழக அமைச்சர், நாயகியின் பழமைவாத அப்பாவாக சரத்குமாருக்கு இது முற்றிலும் மாறுபட்ட வேடம். கேரக்டரை உணர்ந்து நடிப்பில் பட்டை கிளப்பி இருக்கிறார்.

ரோகிணி, திராவிட் செல்வம், ஹிருது பொருத்தமான பாத்திரத் தேர்வுகள் .

சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் இளமைத் துள்ளல்.

நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு, காட்சிகளோடு நம்மை நெருக்கமாக்கி விடு கிறது.
எழுதி இயக்கியிருக்கும் கீர்த்திஸ்வரன், முதல் படத்திலேயே இடியாப்ப சிக்கல் நிறைந்த ஒரு கதைக் களத்தை எடுத்துக் கொண்டு அதற்குப் புதிய பாணியில் தீர்வு சொல்லி இருக்கிறார்
நாயகன் பிரதீப்பும் நாயகி மமிதாவும் அவர் படைத்த கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த டியூட், நிஜமாகவே க்யூட்.