அமைச்சர் சி.வி கணேசனின் சிறு வயது தீபாவளி அனுபவம்
-- தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க விழாவில் அவரே சொன்ன சுவாரசிய தகவல்
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்க தீபாவளி மலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன்,ஆவடி காவல் உதவி ஆணையர் இளங்கோவன், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நடிகை ரேகா, தயாரிப்பாளர் கே.சம்பத்குமார்(எஸ்.கே.பிக்சர்ஸ்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது:
”அண்ணன் பூச்சிமுருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றார். அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன்.
அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் உள்ளத்தில் தனி இடம் பெற்றி ருக்கிறார்.அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், ஏன் நான் கூட அவர் அனுமதியுடன் தான் அறிவாலயம் செல்ல முடியும். அவர் அனுமதியுடன் தான் கட்சித் தலைவரை சந்திப்பேன். அங்கே எங்களை நன்கு உபசரிப்பார். அப்படிப்பட்ட பொறுப்பில் இருப்பவர் அழைப்பை ஏற்று இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளேன்.
,சட்டசபைக்கு 4 முறை, பார்லிமென்ட்டுக்கு ஒருமுறை உட்பட மொத்தம் ஏழு முறை தேர்தலில் நான் வெற்றி பெற்றுள்ளேன். 26 வயதில் தொடங்கி, பூச்சி முருகன் அண்ணனுடன் 35 ஆண்டு காலத்திற்கு மேலாக பணியாற்றியுள்ளேன். போட்டி இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கணும். நிலவில் துணிச்சலாக, முதலில் களம் இறங்க வேண்டியவர் ஆல்ட்ரின் தான். அவர் இறங்க தயங்கிய பிறகே ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து வரலாற்றில் இடம் பிடித்தார். வாழ்க்கையில் முன்னேற துணிச்சல், லட்சியம் வேண்டும். கடுமையான உழைப்பு வேண்டும். அப்படிப்படடவரே வெற்றியாளனாக மாறுகிறார்.
இங்கு தீபாவளி விழாவை கொண்டாடும் நேரத்தில் எனது தீபாவளி அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். அண்ணன், தம்பி, அக்கா என மொத்தம் 12 பேர் எங்கள் குடும்பத்தில். அப்பாவுக்கு 100 ஏக்கருக்கும்
மேல் விவசாய நிலம் இருந்தது. நான் படிக்கும் காலத்தில் மாடு மேய்த்திருக்கிறேன். நாங்கள் ஆசைப்படுவதை அவ்வளவு சீக்கிரம் வாங்கி தரமாட்டார் என் தந்தை. பிள்ளைகள் கஷ்டத்தை உணரவேண்டும் என்பதற்காக அப்படி செய்வாரே தவிர, பெற்ற பிள்ளைகள் மீது அவ்வளவு அன்பு கொண்டிருப்பார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் என் தம்பி தான். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது இப்போது கொண்டாடுவது போல் அப்போது தீபாவளி கொண்டாட முடியாது. பட்டாசெல்லாம் வெடிக்க மாட்டோம். அதிகாலையில் அம்மா அடுப்பை பற்ற வைத்து பனியார சட்டியில் மாவை ஊற்றினால் சொய்ங்.. என்று சப்தம் கேட்கும். அந்த பலகாரத்தை சுடச்சுட எடுத்து மற்றவர்களுக்கு கொடுப்போம். பண்டிகைக்காக உடன் பிறந்தவர்கள், உறவுகள் எல்லாரும் வீட்டுக்கு வருவார்கள். ஒன்றாக கூடி உணவருந்துவதில் அவ்வளவு ஆனந்தம் இருக்கும். இப்படித்தான் எங்கள் தீபாவளி கடந்தது.
எப்போதும் வீட்டை மதியுங்கள். வீட்டைவிட்டு செல்லும்போது மனைவியிடம் “போய்ட்டு வர்றேன்” என்று சொல்லுங்கள். வீடு திரும்ப தாமதமானால்
அதையும் சொல்லுங்கள். குடும்பத்தை நேசியுங்கள். இதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது”
என்றார்.
வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி.எஸ்.முருகன்,
ஆவடி காவல் உதவி ஆணையர் நா.இளங்கோவன், நடிகை ரேகா, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் பேசினர்.
விழாவில் சங்கத் தலைவர் எஸ்.கவிதா சினிமா பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்பில் உதவிகள் தேவை என்பது குறித்து விழாவில் வேண்டுகோள் விடுத்தார். மேலும், சங்க மலருக்கு விளம்பர உதவிகள் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். விழா நிகழ்ச்சிகளை விஜய் டிவி புகழ் அமுதவாணன் தொகுத்து வழங்கினார். சங்க செயலாளர் கோடங்கி ஆபிரகாம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
துணைத்தலைவர் பரத் நன்றி கூறினார்.
