ஆரியன் — திரை விமர்சனம்

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நடிகர் ஒருவரின் நேர்காணல் நடந்து கொண்டிருக்க, அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்து இருந்த செல்வராகவன், நடிகரின் காலில் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பு ஏற்படுத்திய கையோடு அங்கிருப்போரை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகவும் பிடிக்கிறார்.
அதோடு தினமும் ஒருவர் என்ற கணக்கில் ஐந்து நாட்களில் ஐந்து கொலைகள் செய்யப்போகிறேன் என்கிறார்.
அதோடு நில்லாமல் நான் உயிரோடு இருந்து இந்த கொலைகளை செய்யப்போவதில்லை என்று சொன்னவர், அப்படியே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழக்கிறார்.

செத்துப் போன ஒரு வரால் அதன் பிறகு எப்படி ஐந்து கொலைகள் சாத்தியம்? இந்தக் கேள்வி தலை சுற்ற வைத்தாலும், அந்த கொலைகளை தடுக்க சிறப்பு காவல்துறை அதிகாரி விஷ்ணு விஷால் தலைமையில் ஒரு டீமை அமைக்கிறது காவல்துறை.
செல்வராகவன் செய்யப் போவதாக சொன்ன கொலைகளைத் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார் விஷ்ணுவிஷால்.
அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா? என்ற கேள்விக்கான விடை, கிளைமாக்ஸ்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் விஷ்ணுவிஷால், அதற்கேற்ற மிடுக்குடன் இருக்கிறார். உடல்வலிமை மட்டுமின்றி புத்திக்கூர்மையும் உள்ளவராக இருக்கிறார். தனது முயற்சி தோற்றுப் போகும் இடங்களில், அவர் வெளிப்படுத்தும் மன நிலை தேர்ந்த நடிப்பின் அடையாளம்.
அவருடைய விசாரணை முறைகள் சுவாரசியமாக இருப்பது கதைக்கான கூடுதல் பலம்.

விஷ்ணுவிஷாலின் மனைவியாக வரும் மானசா மன அழுத்தம் நிறைந்த அந்த கேரக்டரில் நடிப்பில் முத்திரை பதிக்கிறார். (காவல்துறையில் வேலை பார்த்தவர் அதே துறையில் இருந்த நாயகனை காதல் மணம் செய்து கொண்டு, விவாகரத்து முடிவுக்கு போக போதிய காரணம் இல்லை. கணவரின் வேலைப்பளு தெரியும் தானே… கதை சறுக்கிய முக்கியமான இடம் இது )
செல்வ ராகவனுக்கு இது மறக்க முடியாத பாத்திரம். இதுவரை திரை பார்த்த கொலைகாரர்களில் இருந்து மாறுபட்டுத் தெரிகிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் கன கச்சிதம். துப்பாக்கி முனை தனக்கு நேராக நீட்டப்பட்டிருந்தும் பயத்தை வெளிக் காட்டாமல் வில்லனிடம் கேள்வி கேட்கும் இடம் அவர் நடிப்பில் அத்தனை அழகு.
நடிக்கத் தெரிந்த
கருணாகரனுக்கு காட்சிகள் குறைவு. ஆனாலும் நடிப்பில் அவர் நிறைவு.

இசையமைப்பாளர் ஜிப்ரான் கிட்டத்தட்ட படத்தின் இன்னொரு ஹீரோ. அதை உணர்ந்து அவரும் திகில் இசையை திகட்ட
திகட்ட வழங்கி இருக்கிறார்.
ஹரீஷ்கண்ணனின் கேமரா கதைக் களத்திற்கேற்ப ஓடி ஓடி உழைத்திருக்கிறது.
பிரவீன்.கே எழுதி இயக்கியிருக்கிறார்.இதுபோன்ற படங்களில் வில்லன் கடைசி வரை போலீசுக்கு கண்ணாமூச்சி காட்டுவான். இதிலோ முதலிலேயே வில்லன் அவுட். அவன் இல்லாமலேயே பரப ரப்பு கொஞ்சமும் குறையாத சைக்கோ த்ரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார், இயக்குனர். வில்லனின் கொலைத் தேர்வு பட்டியல் தான் அநியாயத்துக்கு
இடிக்கிறது. இல்லாதவர்களுக்கு நம்மால் முடிந்தால் உதவலாம். அதை விடுத்து அப்படிப்பட்டவர்களை கொன்று குவித்து சமூகத்திற்கு சொல்ல வேண்டிய செய்தி என்ன இருக்கிறது?