தடை அதை உடை _திரை விமர்சனம

தயாரிப்பாளரிடம் கதை சொல்லப் போய் நிராகரிக்கப்பட்டு ஏமாற்றத்தை சந்திக்கும் ஒரு இளைஞரின் கதையாகப் படம் தொடங்குகிறது.

திரைப்பட இயக்குநர் கனவில் இருக்கும் ஒரு இளைஞர் தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறார். அது அவருக்குப் பிடிக்கவில்லை என்பதால்
வேறொரு கதை கேட்கிறார். அந்தக் கதை சொல்லப்பட்டு அதுவும் பிடிக்கவில்லை . இம்முறையும் துரத்தி விடுகிறார்.
மூன்றாவது முறையாக இளைஞர் சொன்ன கதை ஓகே ஆகிறது. அதைப் படமாக்கத் தயார் என்கிறார், தயாரிப்பாளர். இந்தக் கதை சொல்லும் அனுபவத்தை ஒரு படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் தயாரிப்பாளர் அறிவழகன் முருகேசன்.

இளைஞர் சொன்ன கதை தான் திரைப்படமாக உருவாகிறது. அதன்படி ஏழைத் தந்தை ஒருவர் அந்தஊர் மேல் தட்டு மிராசு ஒருவரிடம் வாங்கிய கடனுக்கு காலத்துக்கும் அடிமையாக இருக்க வேண்டிய கட்டாயம். ஆனால் அதை மீறி அந்த ஏழைத் தந்தை தன் பிள்ளையைப் பள்ளியில் சேர்க்கப் போராடுகிறார். இது விஷயம் தெரிந்த பிறகு மிராசு குடும்பம் சும்மா இருக்குமா… ஆனால் அதையும் மீறி ரத்தச் சேற்றில் குளித்த நிலையில் பள்ளிக் கூட வாசலைத் தொடுகிறான் சிறுவன் ஒருவன். அவன் எப்படி கல்வியில் சிறந்து வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறான் என்பது ஒரு கதை. சமூக ஊடகங்களில் ரீல்ஸ், வீடியோக்கள் போடுபவர்கள்,சமூக ஊடகங்களில் உருப்படியாகச் செய்து மாற்றத்தை ஏற்படுத்துவோர், அவர்களைப் பின்தொடர்ந்து தவறான கருத்துக்களை வெளியிடுவோர் என் பது போன்ற சமகால பிரச்சினைகளையும் படம் பேசுகிறது.

முதல் படமாக இதை எழுதி இயக்கித் தயாரித்துள்ள அறிவழகன் முருகேசனுக்கு இது முதல் முயற்சி. வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒருவனுக்கு எத்தனை தடைகள் வந்தாலும் அதை உடைத்து அவன் முன்னேற வேண்டும் என்ற கதைக் கரு தான் இந்தப் படம் சொல்ல வந்த கருத்து. அதை கருத்தாகவே சொல்லி இருக்கிறார் இயக்குனர்
அறிவழகன் முருகேசன
கதை சுவாரஸ்யமாக மட்டும் இன்றி, கதாபாத்திரங்கள் வடிவமைப்பு மற்றும் கதை சொல்லலில் புதிய பாணி என படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
அங்காடி தெரு மகேஷ், திருக்குறள் குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது என முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களில் சிலர் ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் புதுமுகங்களாகவே இருக்கிறார்கள். ஆனால் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.
நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன், காத்து கருப்பு கலை, பாக்கியம் கெளதமி, சுபாஸ்ரீ, சூரியப்ரதாபன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் தங்களது நடிப்பை ஏற்றுக் கொண்ட பாத்திரங்களில் நிரப்பி இருக்கிறார்கள்.
.
இசையமைப்பாளர் சாய் சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் தங்கப்பாண்டியன் மற்றும் சோட்டா மணிகண்டன் ஆகியோரது கேமரா பழைய காலகட்டத்தையும், தற்போதைய காலகட்டத்தையும் நேர்த்தியான ஒளிப்பதிவில் கண் முன் நிறுத்துகிறது.

கதை, திரைக்கதை வசனம், எழுதி இயக்கியிருப்பதோடு,தயாரிக்கவும் செய்திருக்கும் அறிவழகன் முருகேசன், வித்தியாசமான கதை சொல்லல் மூலம் அழுத்தமாகவே தனது இயக்குனர் முத்திரையை பதிக்கிறார்.
திரைக்கதையை கையாண்டிருப்பது பாராட்டும்படி உள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் சமூக சீர்கேடுகள் மற்றும் அதன் பேராபத்துகளை சொல்லி எச்சரிப்பவர், அதனை ரசிகர்கள் வாய் விட்டும் மனம் விட்டும் சிரிக்கும்படி சொல்லியிருப்பது படத்தின் ரசனைக்கு உத்தரவாதம் ஆகிவிடுகிறது.
மொத்தத்தில், ‘தடை அதை உடை’ ஏற்றத்தாழ்வை அடித்து நொறுக்கும் சம்மட்டி.