அதர்ஸ் திரை விமர்சனம்

சாலையில் உருண்டோடி கவிழும் ஒரு கார் விபத்தில் இருந்துதான் படத்தை தொடங்குகிறார்கள். இந்த அவற்றில் மூன்று பெண்கள் ஒரு ஆண் என நாலு பேருமே உயிரிழந்து போகிறார்கள்.

காவல்துறை விசாரணையில் இறந்த அந்த மூன்று பெண்களும் பார்வையற்றவர்கள் என்பதும், அவர்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்தவர்கள் என்பதும் தெரியவர, விசாரணை சூடு பிடிக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த விசாரணை கருத்தரிப்பு மையமாகச் செயல்பட்டு வரும் ஒரு மருத்துவமனை வரை நீள்கிறது. அங்கே ஐ வி எஃப் எனப்படும் In Vitro Fertilization முறையில் கருத்தரிப்பு செய்யப்படும் செயல்பாடுகளில் மோசடிகள் இருப்பது அம்பலமாகிறது.

அதன் மூலம் கருவைச் சுமக்கும் பெண்களும், கருவில் உள்ள குழந்தைகளும் அபாயத்தை நோக்கிச் செல்வது தெரிகிறது.

இதையெல்லாம் யார் செய்கிறார்கள்?இறந்துபோனவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? போலீஸ் விசாரணையில் இந்த குற்றங்களின் மையப் புள்ளியாக வேறொரு உளவியல் பிரச்சினை வந்து நிற் கிறது. யாரும் எதிர்பார்க்காத ஒரு குற்றவாளி சிக்குகிறான். குற்றத்துக்கு அவன் சொல்லும் காரணம் நிஜமாகவே அதிர்ச்சிக்குரியது .

அவன் ஏன் அப்படிச் செய்தான்? அவனை அப்படி செய்யத் தூண்டிய பின்னணி என்ன? என்பது பாதிக்கப்பட்டவனின் சோகத்துடன் இணைத்து சொல்கிறார்கள்.

அறிமுக நாயகன் ஆதித்ய மாதவன் தான் விசாரணை அதிகாரி. துப்பறியும் எந்த ஒரு இடத்திலும் அவர் நடிப்பு சோடை போகவில்லை. அறிமுகம் என்று எந்த ஒரு காட்சியிலும் சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பிலும் உடல் மொழியிலும் அத்தனை இயல்பு.

அவரது ஜோடியாக வரும் கௌரி கிஷன் டாக்டர் கேரக்டரில் படத்தின் திருப்பு முனைக்கு உதவுகிறார்.
துடிப்பான போலீஸ் இன்ஸ்பெக்டராக அஞ்சு குரியன் படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார். அவரது வேகமும் செயல்பாடுகளும் துடிப்புள்ள போலீஸ் அதிகாரியை கண்முன் நடத்துகிறது.

நண்டு ஜெகன் யாரும் எதிர்பாராத எதிர்மறை சாயல் கொண்ட பாத்திரத்தில் வருகிறார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் கதையின் நாயகன் இவர்தான். கதையின் வில்லனும் இவர் தான். குறிப்பாக வில்லனாக உருமாற்றம் பெறும் இடத்தில் இவரது நடிப்பு எந்த எல்லைக்குள்ளும் அடங்காத சூறாவளி சுற்று.

முண்டாசுப்பட்டி ராமதாஸ், ஆர்.சுந்தர் ராஜன், ஹரிஷ் பெராடி தங்கள் கேரக்டர்களில் பளிச். படத்தின் இன்னொரு நாயகன் ஜிப்ரானின் இசை. காட்சி நெடுக அவரது கடின உழைப்பு தெரிகிறது

‘அதர்ஸ்’ என்கிற தலைப்பு குறித்த விளக்கம் தெரியத் தொடங்கியதில் இ ருந்தே படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது. முடிவு வரை அதே வேகம். இயக்கிய அபின் ஹரிஹரனை உச்சி முகர்ந்து பாராட்டலாம்.