கிறிஸ்டினா கதிர்வேலன் — திரை விமர்சனம்

தங்கள் ஊர் கோயில் திருவிழாவில் தன் உயிரை காப்பாற்றிய பக்கத்து ஊர் கிறிஸ்டினா மீது காதலாகிறான் கதிர்வேலன். பள்ளி இறுதி வகுப்பு வரை முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலைக்கு போக ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த கதிர்வேலனை இந்த திடீர் காதல் அப்படியே புரட்டிப் போடுகிறது. கிறிஸ் டினாவின் காதலை அடைவதற்காக அவள் படிக்கும் கல்லூரியிலேயே சேர்கிறான். கல்லூரியில் அவள் போக வர உள்ள அத்தனை ஏரியாக்களிலும் இவன் ஆஜர் ஆகிறான். லைப்ரரி போகிறாளா… அடுத்த கணம் கதிர்வேலனும் லைப்ரரியில்.

இப்படி நாயகியின் காதலுக்காக ஓட்டமாய் ஓடிக்கொண்டிருந்த நாயகன் மீது நாயகியின் கனிவுப் பார்வை விழுகிறது.

ஆஹா இனி காதல் தான்… கொண்டாட்டம் தான் என்று நாயகன் மகிழ்ச்சியின் உச்சம் போன நேரத்தில் நடக்கிறது எதிர்பாராத அந்த சம்பவம். அது என்ன? அதன் பிறகு என்னென்ன நடந்தது என்பது கிளைமாக்ஸ் வரையிலான பரபரப்பு கதைக் களம்.

கதிர்வேலனாக கெளசிக், கிறிஸ்டீனாவாக பிரதீபா பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

திருமண சிக்கலில் இருந்து பிரதீபாவை காப்பாற்ற போராடும் காட்சிகளில் நாயகனும், வேறொ ருவருடன் திருமணம் நிச்சயமான நிலையில் நாயகனை சந்திக்க நள்ளிரவு பயணம் மேற்கொள்ளும் இடத்தில் நாயகியும் மனம் பதிகிறார்கள்.

கிறிஸ்தவ பாதிரியாராக வரும் அருள் டி.சங்கர் தனது இருப்பை நிரூபிக்கிறார். சிங்கம் புலி, கஞ்சா கருப்பு ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு மற்றும் அவர்களது திரை இருப்பு படத்திற்கு கூடுதல் பலம்.

நாயகனின் நண்பராக வரும் சில்மிஷம் சிவா கல்லூரிக் காட்சிகளில் சிரிப்புக்கு உத்தரவாதம். இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நேர்த்தி.
ஒளிப்பதிவாளர் பிரகத் முனியசாமியின் கேமரா, திருவிழா காட்சிகளில் மாயாஜாலம் நிகழ்த்துகிறது.

தலைப்பை பார்த்ததும் இரண்டு மதங்கள் சம்பந்தப்பட்ட காதல் கதையாக இருக்கும் என்ற எண்ணத்தை அடியோடு மாற்றி கதையை முற்றிலும் மாறுபட்ட ஜானரில் தந்திருப்பதே படத்தை வெற்றிப் பாதையில் பயணிக்க வைத்து விடுகிறது. ஒரு காதல் ஜோடி காதலுக்குள் விழ இருந்த இன்னொரு ஜோடியின் வாழ்வில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற கான்செப்ட் திரைக்கு புதுசு. ரசிகர்களுக்கும் புதுசு. இதற்காகவே இயக்குனர் அலெக்ஸ் பாண்டியனை கொண்டாடலாம்.