தாவூத் — திரை விமர்சனம்

சர்வதேச குற்றப் பின் னணி கொண்ட, நிழல் உலக கடத்தல் மன்னன் தாவூத் மும்பையில் இருந்தபடி தமிழ்நாட்டில் போதை பொருள் கடத்தலை நடத்தி வருகிறான். இவனது கடத்தல் வேலைகளை, அவன் சார்பில் இரண்டு குழுக்கள் செய்து வருகின்றன.

இதில் ஒரு நிறுவனம் போதைப்பொருளை குறித்த நேரத்தில் அனுப்பி வைக்க தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து இன்னொரு கம்பெனிக்கு அந்த பொறுப்பை கொடுத்து விடுகிறான்.

இதனால் கமிஷன் கை விட்டுப் போன நிறுவனம் கோபத்தில் அந்த கடத்தல் சரக்கை கைப்பற்ற துடிக்கிறது.

இதற்கிடையே காவல்துறையும் தாவூத்துக்கு அனுப்பி வைக்கப்படும் போதைப் பொருள் பற்றிய தகவல் தெரிந்து கைப்பற்ற ஸ்கெட்ச் போடுகிறது. இதன் காரணமாக, ரகசியமாக இருந்த தாவூத் வெளியே வருகிறான். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது மீதிக் கதை

கதையின் நாயகனாக லிங்கா நடித்திருக்கிறார். ஆனால், எந்த ஹீரோயிசமும் காட்டாமல், கதையை நகர்த்திச்செல்லும் கதாபாத்திரமாக முழுக்கவே தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.அப்பாவி கால் டாக்ஸி டிரைவராக வருபவர் கடத்தல் கும்பலின் நம்பிக்கையை படிப்படியாக பெறும் இடங்கள் ரசமானவை.

ரௌடி வினோத் முன்னாவின் ஆசை நாயகியாக அழகுப் பதுமையாக வருகிறார் சாரா ஆச்சர். இவர் கதையில் ஏதாவது செய்வார் என்று பார்த்தால் நாலை ந்து கெட்டப் போட்டுவிட்டு தலைமறைவாகி விடுகிறார்

சாய் தீனா, திலீபன். மற்றும் அபிஷேக், வையாபுரி, ஜெயக்குமார், ஷாரா, அர்ஜெய், சரவண சீலன் உள்ளிட்டோரும் கதாபாத்திரங்களாக வந்து செல்கின்றனர். இவர்களில் நாயகனின் நண்பனாக வரும் சாரா படத்தின் கலகலப்புக்கு உதவுகிறார். காவல்துறையின் கருப்பு ஆடாக வரும் ஜெயக்குமாரும், துடிப்பான போலீஸ் அதிகாரி அர்ஜெய்யும் கவனிக்க வைக்கிறார்கள்.

ராக்கேஷ் அம்பிகாபதியின் இசை ஓகே. ரகம்.

சரத் வளையாபதி மற்றும் பிரண்டன் சுஷாந்த் ஆகியோரின் இயல்பான ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளோடு நம்மை நெருக்கமாக்கி விடுகிறது.

எழுதி இயக்கியிருக்கும் பிரஷாந்த் ராமன், வழக்கமான கடத்தல், தாதாக்களின் குற்றப்பின்னணியில் விறுவிறுப்பாக ஒரு கதை சொல்ல முயன்று அதில் பாதி கிணறு தாண்டி இருக்கிறார்.

தாவூத், மிரட்டல்.