பிரபல எழுத்தாளர் ஒருவர் முகமூடி அணிந்த மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூன் விசாரிக்கிறார். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் ஆசிரியையான ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண வலைத்தளம் மூலம் பெண் தேடும் பிரவீன் ராஜாவுக்கு விருப்பம் தெரிவிக்கிறார். அவரைப் பற்றி முழுசாக தெரிந்து கொள்ள நெருக்கமாக பழகு கிறார்.
இன்னொரு பக்கம் போலீஸ் அதிகாரி அர்ஜூன் மேற்கொண்ட விசாரணையில் கொடூர கொலைக்கும், ஐஸ்வர்யா ராஜேஷின் காதலர் பிரவீன் ராஜா வசிக்கும் அடிக்குமாடி குடியிருப்புக்கும்தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார்.
அது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தும் போது, மேலும் ஒருவர் அதே நபரால் கொல்லப் படுகிறார். யார் அந்த மர்ம நபர் ? கொலைகளுக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கும் உள்ள சம்பந்தம் என்ன? ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த கொலை பின்னணியில் தொடர்பு உண்டா?, கேள்விகளுக்கான விடை திகு திகு கிளைமாக்ஸ்.
கொலை வழக்கை விசாரிக்கும் துடிப்பான போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் தனக்கான நடிப்பில் காட்சிகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறார். காவல்துறை சீருடை அணியாமல் போலீஸ் அதிகாரியாக தன்னை உணர வைக்கும் இடங்களில் அந்த உடல் மொழி ஆசம். அதுவே விசாரணையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்று பார்வையாளர்களை ஈர்க்கவும் செய்கிறது.
லிப்டுக்குள் தன்னை தாக்க வருபவரிடம் அவர் நடத்தும் அதிரடி, அர்ஜுன் ஸ்பெஷல்.
நாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த சஸ்பென்ஸ் கேரக்டருக்குள் அற்புதமாக வெளிப்படுகிறார்.
ஆட்டிசம் பாதித்த சிறுமியாக அனிகா இயல்பான நடிப்பில் நிஜமாகவே ஆச்சரியப்படுத்துகிறார். உடல் அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் தனது உணர்வுகளை வெளிப்படுத்த முயன்று, முடியாமல் போகும் இடத்தில் அந்தப் பரிதாப பார்வை இதயத்தை ஒரு கணம் கலக்கி விடுகிறது.
பிரவீன் ராஜா, ராம்குமார், தங்கதுரை, பிராங் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேல. ராமமூர்த்தி கதை களத்தில் காட்சிகளோடு இணைந்து போகிறார்கள்.
இசையமைப்பாளர் பாரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் ரசனை.
ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யுவின் கேமரா ஆரம்பக் காட்சி தொடங்கி முடிவு வரை திகில் குறையாமல் காட்சிகளை நமக்குள் கடத்துகிறது. அந்த லிப்ட் சண்டைக் காட்சிக்காக கேமரா மேனுக்கு ஸ்பெஷல் பொக்கே.
எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் லக்ஷ்மணன், உண்மை சம்பவம் ஒன்றை நெஞ்சம் நெகிழும் விதத்தில் சொல்லி இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்பான இடைவேளை சஸ்பென்ஸ் இயக்குனர் முத்திரை.
மொத்தத்தில், ‘தீயவர் குலை நடுங்க’ மேக்கிங்கில் மிரள வைக்கிறது.
