மன அழுத்தம் தான் உடலின் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகிறது. அப்படி ஒரு மன அழுத்தம் நமது நாயகி பூர்ணிமா ரவிக்கு.
காதல் தோல்வி ஏற்படுத்திய சோகம், தந்தை உடல்நலக் குறைவால் கவலை என்று அடுத்தடுத்து அதிர்ச்சியை எதிர் கொள்ளும் அவருக்கு தற்போது ஒரு மாற்றம் தேவை என்று உணருகிறார் தந்தை.
அதனால் மகளிடம், ‘பிடித்த இடத்துக்கு சுற்றுலா சென்று வா. மனம் லேசாகும்’ என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
மகளும் அதன்படி, தன் சிறுவயதில் தன்னுடன் விடுதியில் தங்கிப் படித்த சில நண்பர்களை தேடிப் போகிறார். அந்த பயணத்தில் அவருக்கு மன அமைதி கிடைத்ததா என்பதை தென்றலின்
சுகானுபவத்தோடு சொல்லி இருக்கிறார்கள்.
இந்தப் பயணத்தில் அவருக்கு வைபவ் முருகேசனின் அறிமுகம் கிடைக்க..
இருவரும் இணைந்து பயணத்தை தொடர்கிறார்கள். இந்த பயணம், அவர்கள் இருவரது வாழ்விலும் எத்தகைய மாற்றத்தை கொண்டு வந்தது? தேடிச் சென்ற நண்பர்களை பூர்ணிமா சந்தித்தாரா? மனம் அமைதியானதா என்பதை கவிதை நேர்த்தியோடு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
யூடியுப் பிரபலமான பூர்ணிமா ரவி, இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் கூட இதில் தான்
அவருக்கு முழுமையான அதுவும் நாயகி பாத்திரம்
வாய்த்திருக்கிறது. அவரும் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதில் குறிப்பிடத்தக்க முக்கிய விஷயம், எந்த இடத்திலும் மிகை இல்லாத நடிப்பு அவரது ஸ்பெஷல்.
ஆதிரை கதாபாத்திரமாக பார்வையாளர்கள் மனதில் பதிந்து விடும் பூர்ணிமா ரவி, ரொமான்ஸ், நடனம், ஆத்திரம் என நடிப்பின் அனைத்து ஏரியாவிலும் அடித்து ஆடியிருக்கிறார்.
நாயகியின் திடீர் தோழனாக வந்து அவரது அன்புக்கு பாத்திரமாகும் கேரக்டரில்
வைபவ் முருகேசன் பொருத்தமான தேர்வாக இருக்கிறார். பயணத்தின் போது நாயகிக்கும் இவருக்குமான சின்னச் சின்ன சண்டைகள் படத்தின் சுவாரசியத்தை கூட்டி விடுகின்றன.
சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி தங்கள் கேரக்டர்கள் மூலம் கதையுடன் நம்மை இன்னும் நெருக்கமாக்குகிறார்கள்.
பயணத்தை காட்சிப்படுத்திய விதமும், பயணப்படும் இடங்களும் படத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, கண்களையும் மனதையும் ஒருசேர ஈர்த்துக் கொண்டு விடுகிறது.
ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக்கின் கேமரா படத்தின் இன்னொரு நாயகனாகவே உலா வருகிறது. கேரளா, கோவா என சுற்றுலாத் தளங்களில் படமாக்கப்பட்ட காட்சிகள் நமக்கு கிடைத்த கேமரா வழி பொக்கிஷம்
இசையமைப்பாளர் கிளிஃபி கிறிஸ் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்க,
ஆனந்த் காசிநாத்தின் பின்னணி இசை
ஓகே.ரகம்.
எழுதி இயக்கியிருக்கும் ஹரி மகாதேவன், இந்த சுற்றுலா கதையில் ரசிகர்களையும் இணைத்துக் கொள்கிறார். புதிய கதைக் களத்தில் இயல்பான கதை சொல்லலில் தேர்ந்த இயக்குனராக தடம் பதிக்கிறார்.
-யெல்லோ, ஏழு வண்ணம் கொண்ட வான வில்.
