மிடில் கிளாஸ் — திரை விமர்சனம்

தனியார் கம்பெனியில் குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டு, சென்னையில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் பொருளாதார போராட்டத்துடன் குடும்பம் நடத்தும் முனிஷ்காந்த்துக்கு பூர்வீக சொத்து வழியாக ஒரு கோடி ரூபாய்க்கான செக் கிடைக்கிறது. இனி நமக்கு ராஜ வாழ்க்கை தான் என அவர்கள் கனவு கண்டிருக்கும் நிலையில், அந்த செக் தொலைந்து போகிறது. அந்த செக்கை கொடுத்தது யார்? தொலைந்தது எப்படி? அதை கண்டுபிடித்தார்
களா? என்பதே இந்த மிடில் கிளாஸ்.
நம் கதையின் நாயகனுக்கு வேலையின் பொருட்டு நகரத்துக்கு வந்து விட்டாலும் கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதில் வீடு கட்டிக்கொண்டு நிம்மதியாக வாழ ஆசை. ஆனால் மனைவி விஜயலட்சுமிக்கோ நகரத்திலேயே வசதியாக வாழவேண்டும். இதனாலேயே இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சில்லறைச் சண்டைகள். விஜயலட்சுமியோ ஒவ்வொரு பணத்தேவையின் போதும் கணவனை இளக்காரமாக பார்ப்பவர். இருப்பினும் குடும்பம் சிதறி விடக் கூடாது என்பதற்காக அவமானங்களை வெகுமானங்களாக ஏற்றுக் கொண்டு வாழ்கிறார் முனீஷ்.
இப்படிச் சென்று கொண்டிருக்கும் இவர்கள் வாழ்வில் பூர்வீக சொத்து மூலம் ஒரு கோடி ரூபாய் செக்காக கிடைக்க, சோதனையாக அது தொலைந்து போக… அந்த நடுத்தர குடும்பம் நடுத்தெருவுக்கு வரும் அளவுக்கு பிரச்சனைகள் தொடர… அந்த செக் கிடைத்ததா என்பதை பரபரப்புக்கு பஞ்சமின்றி சொல்லி இருக்கிறார்கள்.

நடுத்தரக் குடும்பத் தலைவர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் முனீஸ்காந்த். மனைவியிடம் அடங்கிப் போகும் இடத்திலும், பிள்ளைகளிடம் அன்பு காட்டும் இடத்திலும் ஒரு நடுத்தர குடும்பத் தலைவரை அப்படியே பிரதிபலிக்கிறார். தன் ஒரு கோடி கனவை கவனக்குறைவால் சிதைத்து விட்டதாக கணவரை வார்த்தைகளால் வாட்டி வதைக்கும் இடத்தில் ஒரு நடுத்தர குடும்பத்து மனைவியை நடிப்பில் கண் முன் நிறுத்துகிறார் விஜயலட்சுமி.
துப்பறிவாளராக நடித்திருக்கும் ராதாரவி, முனீஸ்காந்த்தின் தந்தையாக நடித்திருக்கும் வேல.ராமமூர்த்தி, ஆட்டோ டிரைவர்
குரோஷி பொருத்தமான பாத்திர வார்ப்பில் கதையோடு இணைந்து கொள்கிறார்கள்.
நாயகனின் கிராமத்து நண்பராக காளி வெங்கட் சில காட்சிகளே என்றாலும் நினைவில் நிற் கிறார்.
பிரணவ் முனிராஜின் இசையில் பாடல்கள் கேட்கலாம் ரகம்.
பின்னணி இசை கதைக்களத்தின் உணர்வுகளை இதயம் வரை கொண்டு சேர்க்கிறது.

சுதர்சன் சீனிவாசனின் கேமரா ஆரம்பக்
காட்சியிலேயே கிராமத்து வயலில் மகிழ்ச்சி பொங்க படுத்திருக்கும் முனீஸ் காந்த்தை காட்டி அப்ளாஸ் வாங்கி விடுகிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் கிஷோர் முத்துராமலிங்கம். ஒரு நடுத்தர குடும்பத்தை கதையை பின்னணியாக எடுத்துக்கொண்டு அதில் பரபரப்பு படபடப்பு சேர்த்து கோடி விளையாட்டு விளையாடி இருக்கிறார் இயக்குனர். மனிதநேயம் மரித்துப் போகாத அந்த கிளைமாக்ஸ் நெஞ்சுக்குள் நேசப் பூங்காற்று.
மொத்தத்தில் இந்த மிடில் கிளாஸ், கதை சொன்ன விதத்தில் ஹை கிளாஸ்.