மாஸ்க் –,திரை விமர்சனம்

நகரின் மையப் பகுதியில் உள்ள பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் துப்பாக்கி முனையில் ஒரு கொள்ளை நடக்கிறது. நடிகவேள் எம்.ஆர். ராதா முகமூடி அணிந்த சிலர் அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள்.

வரும் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றத் துடிக்கும் அரசியல்வாதி பவன் ஏற்கனவே கொள்ளை அடித்து வைத்த பணம் அது. தேர்தலின் போது ஓட்டு போடுவதற்கு மக்களுக்குக் கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த பணம்தான் இப்போது திட்டமிட்டு கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது.

கொள்ளை போன பணத்தை கண்டுபிடிக்க தனியார் டிடெக்ட்டிவ் நபரான கவின் வருகிறார்.

சமூக சேவை என்ற பெயரில் சமூக விரோத செயல்களை செய்யும் ஆண்ட்ரியாவும் வருகிறார்.

இவர்கள் இருவரும் தீவிரமான தேடுதலில் ஈடுபடுகிறார்கள். அதே நேரம் ஒருவரை ஒருவர் உளவு பார்க்கிறார்கள்.

இவர்கள் நோக்கம் என்ன? பணம் கிடைத்ததா? கொள்ளையடித்தவர்கள் யார்? கேள்விகளுக்கு பதில் மாஸ்க்’ படத்தின் மீதிக் கதை. சமூக சேவகி என்ற போர்வையில் சகல தில்லாலங்கடி வேலையையும் கச்சிதமாக செய்யும் வில்லி நடிப்பில் நடிப்பில் துவம்சம் செய்கிறார் ஆண்ட்ரியா.

காமெடி கலந்த, கொஞ்சம் வில்லத்தனம் இணைந்த நடிப்பில் கவின் பிரகாசிக்கிறார். குறிப்பாக, வட இந்திய பெண் ருஹானிக்கும் அவருக்குமான எல்லை மீறல் நட்பு, கலகலப்பு. அதேபோல் ஆண்ட்ரியாவுடனான மோதல் சீன்களிலும் கவின் ரசிக்க வைக்கிறார். அரசியல்வாதியாக பவன், கவின் அப்பாவாக சந்திரன், கவின் நண்பராக கல்லூரி வினோத் ஆகியோரும் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள்.

ஆரம்பத்தில் அப்பாவியாக முகம் காட்டும் சார்லி பிற் பகுதியில் இன்னொரு முகம் காட்டுகிறார். அந்த நடிப்பு முகம் அவரது சீனியாரிட்டி நடிப்பில் ரொம்பவே பளிச். ஆண்ட்ரியா டீமில் இருக்கும் பேட்டரியும் சில சீன்களில் வரும் ரெடின் கிங்ஸ்லீயும் தங்கள் தனித்துவ நடிப்பால் ரசிக்க வைக்கிறார்கள். நடுத்தர குடும்பத் தலைவியாக வந்து கணவரின் அதட்டலுக்கு பம்மும் கேரக்டரில் தொகுப்பாளர் அர்ச்சனா, அடி சக்கைன்னா!

ஆர்.டி.ராஜசேகரின் கேமரா படத்தின் பிரதான பலம். ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை வேகமான திரைக்கதையை இன்னும் வேகமாக்குகிறது.

எழுதி இயக்கி இருக்கிறார் விகர்ணன் அசோக். மாறுபட்ட திரைக்கதையில் கோடிகளை கொள்ளை அடித்த மாஸ்க் மனிதர்களின் பின்னணியை சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார், இயக்குனர்.
நாயகன் தன் மனைவியை பிரிந்து வாழ்வது ஏன் என்பதற்கு போதிய விளக்கம் சொல்லி இருக்கலாம்.

மாஸ்க், மாஸ்.