சிறை –திரை விமர்சனம்

கொலை வழக்கு ஒன்றில் விசாரணை கைதியாக வேலூர் மத்திய சிறையில் ஐந்து வருடங்களாக இருக்கும் எல்.கே.அக்‌ஷய் குமாரை, சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு தலைமைக் காவலர் விக்ரம் பிரபு தலைமையிலான காவலர் குழுவுக்கு வழங்கப்படுகிறது. போகும் வழியில் காவலர்கள் சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள, அந்த களேபரத்தில் கைதி அக்‌ஷய் குமாரை தவற விட்டு விடுகிறார்கள்.
அதுவும் போலீஸ் துப்பாக்கியுடன் காணாமல் போகிறார். அவர்களிடம் இருந்து தப்பித்த அக்‌ஷய் குமார் மீண்டும் பிடிபட்டாரா ?, கொலைக் குற்றவாளியான அவரது பின்னணி என்ன ? அவர் யாரை எதற்காக கொலை செய்தார்? அவரால் விக்ரம் பிரபு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன ? கேள்விகளுக்கான பதிலை கொஞ்சமும் பரபரப்பு குறையாமல் தந்திருப்பதே இந்த சிறை.
நாயகனாக தலைமை காவலராக வரும் விக்ரம் பிரபு இதற்கு முன்பு காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இதில் முழுக்க முழுக்க கனிவு கலந்த காக்கி சடடையில் புதிய விக்ரம் பிரவை பார்க்க முடிகிறது.
தப்பித்து செல்லும் கைதியை பிடிக்கும் முயற்சி மற்றும் அதை தொடர்ந்து எதிர்கொள்ளும் பிரச்சனையில் தடுமாறுவது, நீதிமன்றத்தில் கைதிக்காக பரிந்து பேசுவது என படம் முழுவதும் காக்கி சட்டைக்குள் இருக்கும் கனிவு முகத்தை திரையில் முத்துக்களாய் சிதற விட்டு இருக்கிறார்.nநடிகர் திலகத்தின் குடும்ப வாரிசு என்பதை இந்த கேரக்டர் மூலம் கல்வெட்டாக பதித்திருக்கிறார்.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் எல்.கே.அக்‌ஷய் குமார், இனிய திரை வரவு. நம்பிக்கைக்குரிய நல்வரவு. அந்த கைதி கேரக்டரில் அச்சாக பொருந்துகிறார். ஒரு ஐந்து வருட காலம் விசாரணை கைதியாகவே மனப் போராட்டத்தில் வாழும் கைதியை நடிப்பில் கண் முன் நிறுத்துகிறார். அவரது அந்தஅழகான காதல் கோர்ட் வாசலில் காதலியை தேடும் தவிப்பில் வெளிப்படுகிறது. பள்ளிப் பருவம், இளம் பருவம் மற்றும் சிறைக் கைதி என தனது தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் உரிய மாற்றங்களை கொண்டு வந்து விடு கிறார்.
இரண்டாம் பாதி படம் முழுவதையும் தன் எதார்த்தமான நடிப்பால் தாங்கிப் பிடிக்கிறார். தனது விடுதலை கனவு சிதைந்து போனது தெரியவந்ததும் கோர்ட் வாசலில் அவர் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் இடங்கள் கண்களில் கங்கைப் பிரவாகம்.
அவரின் உயிர்க் காதலியாக
நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், எழில் தோற்றத்திலும் கேரக்டராகவே மாறிப்போன நடிப்பிலும் டபுள் பிரமோஷன் வாங்கி விடுகிறார்.
விக்ரம் பிரபுவின் மனைவியாக நடித்திருக்கும் ஆனந்த தம்பிராஜாவின் திரை பங்களிப்பு கொஞ்சமாக இருந்தாலும் மனிதநேயமிக்க அந்த கேரக்டரில் ஜொலிக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் மூணாறு ரவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்துக்குள் இருக்கும் கச்சிதமான அரசியலை பேசி விடுகிறது.
மனிதநேயமிக்க நீதிபதியாக வரும் தேனப்பன் கேரக்டருக்கு அரங்கு அதிர கரகோஷம்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் இதயம் வரை சென்று சேர, பின்னணி இசையோ இன்னொரு கதாபாத்திரமாக படம் முழுக்க வலம் வருகிறது.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா காட்சிகளை எதார்த்தமாக கண் முன் நிறுத்துகிறது.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தமிழ் எழுதிய கதைக்கு உயிர் கொடுத்து இயக்கியிருக்கிறார் சுரேஷ் ராஜகுமாரி. காக்கிச்சட்டையின் விரைப்பு ஒரு உண்மைக் காதலுக்குள்
கனிந்து போகும் காட்சிகள் அனைத்தும் கதையை நம்மோடு முழுக்கவே இணைத்துக் கொள்கிறது. அந்த கிளைமாக்ஸ் நிஜமாகவே இன்ப அதிர்ச்சி.
மொத்தத்தில், இந்த ‘சிறை’ ரசிகர்களின் இதயச் சிறைக்குள்.