எதிர்பார்க்க வைத்த முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்திலும் தயாரிப்பாளரிடம் இயக்குனர் கதை சொல்வதாகவே படத்தை தொடங்குகிறார்கள்.
முதல் கதையாக தமிழ்நாட்டில் உள்ள இரண்டு முன்னணி ஹீரோக்களின் தீவிர ரசிகர்களை காட்டுகிறார்கள். இருதரப்பட்ட ரசிகர்களும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்கள் தங்கள் ஹீரோக்களை முன்னிறுத்தி ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்தங்கள் அபிமான நடிகரின் பிறந்த நாளோ அல்லது புதிய படம் ரிலீஸ் சமயத்திலோ கேட்கவே வேண்டாம்… தங்கள் ஹீரோவை புகழ் பாடுவதோடு நில்லாமல் தங்கள் ஹீரோவுக்கு போட்டி வரிசையில் இருக்கும் ஹீரோவை பரிகசித்து அந்த ஹீரோவின் ரசிகர்களை சண்டைக்கு உசுப்பேற்றுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறா ர்கள்.
இப்படி வேலை, குடும்பம் என்று எந்த கவலையும் இல்லாமல் தங்கள் ஆதர்ச நாயகனுக்காக அவரது படத்தின் வெற்றிக்காக வெறித்தனமாக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள்.
இப்படியான ஒரு சூழலில் தான் ஒரு ஹீரோவின் உயிருக்குயிரான ரசிகரின் மனைவியையும் இன்னொரு ஹீரோவின் அபிமானத்துக்குரிய ரசிகரின் தாயாரையும் கடத்தும் மர்ம நபர், இரண்டு பேரையும் உயிரோடு விட வேண்டுமானால் இரண்டு ஹீரோக்களும் என்னோடு கான்பரன்ஸ் காலில் பேச வேண்டும் என்கிறார். அதற்கான நேரத்தையும் குறிக்கிறார்.
அந்த இரண்டு ஹீரோக்களும் இது விஷயத்தில் தங்களை உயிராக நேசிக்கும் ரசிகர்களுக்கு என்ன செய்தார்கள்?
இரண்டாவது கதையில் பெண்ணியம் மற்றும் ஆடை சுதந்திரம் என்ற பெயரில் பெரியவர்கள் மனதை புரிந்து கொள்ளாத இளசுகளுக்கு அதே பாணியில் பாடம் புகட்டப்படுகிறது.
2025 காலகட்டத்தில் வாழும் நாயகன் 20050 இல் வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகி மீது காதலா கிறான். அதன் பிறகு காதலியே டைம் டிராவல் மூலம் காதலனை பார்க்க வருகிறாள். காதலனை பார்த்த பிறகு அவள் அடையும் அதிர்ச்சி எத்தகையது? ஏன் அந்த அதிர்ச்சி என்பது மூன்றாவது கதை.
இப்போது தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வந்த பெண் இயக்குனர் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது. தயாரிப்பாளர் குடும்பத்தில் அந்த பெண் இயக்குனருக்கு எந்த விதத்தில் இடம் உண்டு என்று சொல்லும் அந்தக் கிளைக்கதை அதிர்ச்சியில் தயாரிப்பாளரையே தலை சுற்ற வைக் க்கிறது.
முதல் பாகத்தில் சமூகப் பிரச்சனைகளை பேசும் குட்டி குட்டி கதைகளை ஒன்று சேர்த்து சொல்லி வெற்றி பெற்ற இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், அதையே இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்து இருக்கிறார். அதே சமயம், முதல் பாகத்தைப் போல் பெரும் சர்ச்சையாக அல்லாமல், எல்லை தாண்டாமல் களமாடி இருக்கிறார்.
ஒவ்வொரு கதைக்கும் உரிய நியாயம் சொல்லி இருக்கிறார்.
ரசிகர்களின் குடும்பங்களை கடத்தி அவர்களின் நட்சத்திர மோகத்தை அகற்றும் கேரக்டரில் எம்.எஸ். பாஸ்கர் மிரட்டல் கலந்த ஆச்சரியம்.
மகளின் குறைந்தபட்ச ஆடை அலங்காரத்துக்கு அதே பாணியில் பதில் தரும் அப்பா கேரக்டரில் தம்பி ராமையா, நடிப்பில் அப்பப்பா. அவரது மகளாக வரும் சஞ்சனா திவாரி
பெண்ணியம் குறித்த கண்ணியம் பற்றி அப்பாவிடம் பாடம் கற்றுக்கொள்ளும் இடத்தில், நடிப்பிலும் பளிச்சிடுகிறார்.
25 வருடம் முன்னோக்கிய காதலனாக வரும் அந்த கேரக்டரை அழகுற செய்திருக்கிறார், அஸ்வின். அவரது நண்பனாக வரும் அமான் டைமிங் காமெடியில் பின்னிப் பெடல் எடுக்கிறார்.
அஸ்வினின் காதலியாக பவானி ஸ்ரீ அழகும் நடிப்பும் கலந்த கலவையாய் மனதில் பதிகிறார்.
முன்னணி ஹீரோக்களின் வெறி பிடித்த ரசிகர்களாக ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன், தயாரிப்பாளராகவே வரும் தயாரிப்பாளர் பால மணிமார்பன் கிடைத்த கேரக்டர்களுக்குள் கில்லி அடிக்கிறார்கள்.
நான்கு கதைகள் மற்றும் அவற்றுக்கான களங்களுக்கு ஏற்ப ஒளிப்பதிவில் கண்களை நிறைவாக்குகிறார்கள், ஒளிப்பதிவாளர்கள் ஜெகதீஷ் ரவி மற்றும் ஜோசப் பால்.
சதிஷ் ரகுநாதன் இசை, கதையின் வீரியத்தை மனதில் முழுசாக நிறுத்துகிறது.
எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் கார்த்திக் சமூக பிரச்சனைகளுக்கு ஒவ்வொரு கதை வழியாகவும் உரிய தீர்வு சொல்லி இருக்கிறார், சுவாரசியமாக. அப்படியே கடைசி கதைக்கு முழுசாக தீர்வு சொல்லாமல் அடுத்த பாகத்தை எதிர்பார்க்க வைத்திருப்பதில் தேர்ந்த இயக்குனராகவும் முத்திரை பதித்து விடுகிறார். ஹாட்ஸ்பாட், சூடு குறையாத காபி.