வீர விளையாட்டு என்றாலே ஜல்லிக்கட்டு தான் நினைவுக்கு வரும். இந்தப் படத்தில் இருந்து இனி கிடா சண்டையும் சேர்ந்து நினைவுக்கு வரும். இதுவும் வீரம் விளைந்த மதுரை மண்ணில் நடக்கும் போட்டி என்ற அளவில் தனித்துவமானது. இந்த கிடா சண்டைக்குள் ஈகோ, பழிவாங்கல் என்று பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்கள்
மதுரையில் ஆட்டோ ஓட்டும் நாயகன் யுவன் கிருஷ்ணாவுக்கு கிடா சண்டை என்றால் அத்தனை பிரியம். அதற்காகவே ஒரு கிடா வாங்கி போட்டிக்கு தயார் செய்கிறார்.
இந்த கிடா சண்டை போட்டிகளில் வழக்கமாக ரிதன் கிருஷ்ணா வளர்க்கும் கிடாவே ஜெயிப்பது வழக்கம்.
கிடா சண்டையின் வெற்றியை தனக்கு கிடைக்கும் உயர் கௌரவமாக கருதுகிறார்.
இந்நிலையில் அடுத்து வந்த கிடா சண்டை தான் ரிதனின் கௌரவத்தை சீண்டிப் பார்க்கிறது. அந்தப் போட்டியில் ஆட்டோ டிரைவர் யுவன் கிருஷ்ணா வளர்த்த கிடா, ரிதன் கிருஷ்ணாவின்
கிடாயை பதம் பார்த்து விடுகிறது.
இந்தத் தோல்வியை கொஞ்சமும் எதிர்பார்க்காத ரிதன் கிருஷ்ணா, அடுத்த முறை நடக்கும் போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். அதற்காக குறுக்கு வழியை யோசிப்பவர், அடுத்த போட்டிக்கு ஒரு நாளைக்கு முன்பு யுவன் கிருஷ்ணாவின் கிடா ஆட்ட களத்தில் செயலற்று போகுமாறு ஒரு காரியம் செய்கிறார். அதில் யுவன் கிருஷ்ணா வளர்த்த கிடா தோல்வியை தழுவ, தனது கிடா தோற்றுப் போன பின்னணியிலிருக்கும் சதி பற்றி தெரியவரும் யுவன் கிருஷ்ணா அதை பொது வெளியில் அம்பலப்படுத்த…
இதனால் அவமானத்தில் துடிக்கும் ரிதன் கிருஷ்ணா, யுவன் கிருஷ்ணாவிடம் மோத முற்பட…
கிடா சண்டை மூலம் ஆரம்பித்த இவர்களுடைய பகைக்கு, அதே கிடா சண்டை போட்டி மூலம் முற்றுப்புள்ளி வைக்க ஊர் பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள். இப் போட்டியில் யார் கிடா வெற்றி பெற்றது? அதன் பிறகு என்ன நடந்தது ? என்பது தான் ‘ஜாக்கி’யின் கதை.
கிடா சண்டை கதையை எதார்த்தமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் டாக்டர்.பிரகாபல், கிடா சண்டை போட்டிகளை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தி ரசிகர்களை படத்துடன்
ஒன்ற வைத்து விடுகிறார்.
நாயகனாக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா, மதுரை இளைஞராக, நடிப்பில் மிரட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் வெறித்தனமான வேகம். அம்மு அபிராமியுடனான காதல் காட்சிகளில் இதமான பாங்கு, தன் வீட்டை அடித்து நொறுக்கிய வில்லனை அவன் இருப்பிடத்திற்கே சென்று தாக்குவதில் ஆவேசம் என்று நடிக்க வாய்ப்புள்ள அத்தனை இடங்களிலும் சிக்ஸர் அடிக்கிறார். வில்லனாக வரும்
ரிதன் கிருஷ்ணா தனது கேரக்டரை ரசித்து செய்திருக்கிறார். பஞ்சாயத்தார் பேச்சுக்கு கூட கட்டுப்படாமல் நாயகன் உடனான வில்ல ஆட்டத்தை தொடங்கும் இடங்கள் அத்தனையும் பதை பதைப்புக்கு பஞ்சம் இல்லாதவை. தமிழ் சினிமாவுக்கு ஸ்டைலிஷான ஒரு வில்லன் கிடைச்சாச்சு.
நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, கிராமத்து பெண்களுக்கு உரிய குண நலன்களை நடிப்பில் பிரதிபலிக்கிறார்.
பஞ்சாயத்தாராக
மதுசூதன் ராவ், நாயகனின் சகோதரி கேரக்டரில் சரண்யா ரவிச்சந்திரன் இயல்பான நடிப்பில் இதயம் பதிகிறார்கள்.
ரவி, பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாக களமாடுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார், மதுரை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளை இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார். கிடா சண்டை போட்டிகளை இவரது கேமரா பாய்ச்சலுடன் படமா க்கி இருக்கிறது.
சக்தி பாலாஜியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை கிடா சண்டை போட்டிகளை திகிலு டன் ரசிக்க வைக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் டாக்டர்.பிரகாபல்,
கிடா சண்டை போட்டிகளை தத்ரூபமாக படமாக்கி ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
கிடா சண்டை மூலம் உருவாகும் பகை என்ற கதைக்கருவுக்கு அமைத்திருக்கும் திரைக்கதையில் காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என்று படத்தை விறுவிறுப்பாக கொண்டு போகிறார். கதையின் மையமான கிடா சண்டை என்ற ஆடுகளத்தை வெற்றிகரமான ஆட்டக்களமாக மாற்றியதில் ஜெயித்து விடுகிறது படம்.
மதிப்பெண்
6/10.
மொத்தத்தில் ‘ஜாக்கி’-யின் ஆடுகளம் பழசாக தெரிந்தாலும், கிடா சண்டை தமிழ் சினிமாவுக்கு புதிதான்.