TN 2026 தங்க நட்சத்திரம் –திரை விமர்சனம்

அமைதிப்படை படத்துக்கு பிறகு அரசியலை தெளிவாகப் பேசும் அதிரடி படமே இந்த T. N -2026
தங்க நட்சத்திரம். அதற்காகவே இயக்குனர் உமாபதிக்கு ஸ்பெஷல் பாராட்டு.

மக்கள் திலகம் எம்ஜிஆரை தொடர்ந்து தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலர் அரசியல் களத்தில் பயணித்தாலும், தொடர முடியாமல் நின்று போனார்கள். இந்நிலையில் வட மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடி தமிழகம் வந்த ஒரு இளைஞர், சினிமாவில் அறிமுகம் ஆகி வெற்றிப் படங்களை தந்து பெருவாரியான ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறார். இதன் பிறகு அரசியலுக்குள்ளும் அடியெடுத்து வைக்க விரும்புகிறார். அவரது எண்ணம் ஈடேறியதா என்பதை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ரசனைக்கும் குறைவின்றி தந்திருக்கிறார்கள்

மத்திய பிரதேசத்திலிருந்து பிழைப்பு தேடி சென்னை வரும் குமார், சென்னையில் பிளாட்பார பகுதியில் குல்கந்து விற்று அன்றாட
பிழைப்பை ஓட்டுகிறார். இந்நிலையில் கொத்தலும் குதறலுமாக அவர் பேசும் தமிழ் பிடித்துப் போன ஒரு தயாரிப்பாளர் அவரை ஒரு தமிழ் படத்தில் கதாநாயகன் ஆக்கி விடுகிறார். அவர் பேசும் அந்த கொச்சைத் தமிழுக்காகவே படம் பிய்த்துக்கொண்டு ஓட…
இந்த நடிகர் எம் ஜி ஆர் லெவலுக்கு வருவார்.
மக்களால் கொண்டாடப்படுவார் என்பதை யூகிக்கும் ஜமீன்தார் ஒருவர் இவரது அடுத்த கட்ட வளர்ச்சியை தனது பொறுப்பில் எடுத்துக் கொள்கிறார்.
சினிமாவில் தேவைக்கு மேலாக சம்பாதித்த நேரத்தில் குல்ஷன் குமாருக்கு அரசியல் ஆசையை தூண்டுகிறார் ஜமீன்தார். நடிகராக இருந்து மக்கள் தலைவராக மாறிப்போன எம் ஜி ஆர் போல நீங்களும் அரசியலில் சாதிக்க முடியும். அதற்கு நான் துணை இருப்பேன் என்று
குல்ஷன் குமாரை உசுப்பி விட… இதற்கிடையே காதல் மனைவிக்கும் குல்ஷன் குமாருக்கும் ஏற்பட்ட மோதல் கோர்ட் படியேறி விவாகரத்து வரை போக…
மனைவி, மக்கள் என்று ஒன்றாக இருந்தால் மட்டுமே ரசிகர்கள் ரசிப்பார்கள். நேசிப்பார்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக கொண்டாடுவார்கள். அதை விடுத்து விவாகரத்து லெவலுக்கு போய்விட்டால் ரசிகர்கள் மொத்தமாக தங்கள் இதயத்தில் இருந்து தூக்கி எறிந்து விடுவார்கள். இதற்கு பல பிரபல நடிகர்கள் உதாரணம் என்று நடிகருக்கு உபதேசம் செய்கிறார். கணவனைப் பிரிந்து வாழ்ந்த மனைவியை சந்தித்து அவளுக்கும் புத்திமதி சொல்கிறார். ஜமீன்தார் சொல்வதை ஏற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெற்று விடுகிறார் குல்ஷன் குமாரின் மனைவி. இதனால் குல்க்ஷன் குமாரின் மார்க்கெட்டும் ஜமீன்தார் சொன்னது போலவே ஸ்டெடியாகி விடுகிறது.
இந்த நேரத்தில்தான் அவர் அரசியலுக்கு வர வேண்டும். புதிய
கட்சி தொடங்க வேண்டும். அதன் மூலம் முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்று தூபம் போடுகிறார் தம்பி ராமையா.
குல்ஷன் குமார் புதிய கட்சி தொடங்கினாரா? தேர்தலில் நின்றாரா? என்பதை கலகலப்பு பிளஸ் பரபரப்பு சகிதம் தந்திருக்கிறார்கள்.
நடிகர் விவாகரத்து விவகாரம் தொடங்கி புதிய படம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடப்பது உள்ளிட்ட சில சம்பவங்கள் தற்போது அரசியலுக்கு வந்திருக்கும் பிரபல நடிகரை நினைவு படுத்தினாலும், கிளைமாக்ஸ் காட்சியில் மேலும் இரு உச்ச நடிகர்களும் நினைவில் வந்து போகவே செய்கி றார்கள்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், குல்கந்த் குமார் என்ற தங்க நட்சத்திரமாக திரையில் ஜொலிக்கிறார். பிழைப்பு தேடி தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழை தவறாக உச்சரிப்பதால் மக்கள் மனதில் ஒரு நடிகராக உச்சத்தை தொடும் அவரது நடிப்பு மற்றும் உடல்மொழி அனைத்தும் அவரது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறது.
ஜமீனாக இருந்தாலும், குல்கந்த் குமாரின் சேவகனாக, அரசியல் வழிகாட்டியாக பயணிக்கும் தம்பி ராமையாவின் தோற்றம் மற்றும் உடல் மொழி உச்ச நடிகர் ஒருவரது ரசிகர் மன்ற தலைவரை நினைவுப்படுத்துகிறது.
எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோர் தங்க நட்சத்திரத்துடன் பயணிக்கும் அரசியல்வாதிகளாக வலம் வந்தாலும், அவர்கள் கலகலப்புக்கு மட்டுமே பயன் பட்டிருக்கிறார்கள்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஷெரிட்டா ராவ் நடன பாவங்களில் நளினம் காட்டுகிறார். காதல் கணவன் மீது விவாகரத்து வரை போகும் இடங்களில் நடிப்பும் எட்டிப் பார்க்கிறது.
நடிகையராக வரும் சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் கிடைத்த கொஞ்ச நேரத்திலும் தங்கள் இருப்பை நிரூபிக்கிறார்கள்.
ரெடின் கிங்ஸ்லி பெரும்பாலான இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா
வின் கேமரா காட்சிகளை கண்களுக்குள் வண்ணமயமாக்குகிறது.
தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்து விறுவிறுப்புக்கு உத்தரவாதம் தருகிறது.

தம்பி ராமையாவின் கதை அரசியல்வாதிகளை மேலோட்டமாக நையாண்டி செய்தாலும், அரசியல் ஆசையில் வலம் வந்த, வலம் வந்து கொண்டிருக்கிற திரை நட்சத்திரங்களையும் ஒரு பிடி பிடித்திருக்கிறது.
தந்தையின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் உமாபதி ராமையா,
அரசியலை நோக்கி பிரபல நடிகரின் பயணம் என்ற கான்செப்ட்டை சிறப்பாக கையாண்டிருக்கி
றார்.
தனக்கு முந்தைய காலக்கட்டத்தில் தொடங்கும் கதையை தற்போதைய காலக்கட்டத்தின் அரசியல் சம்பவங்கள் மற்றும் திரை நட்சத்திரங்களால் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களுடன் இணைத்து கலகலப்பாக சொல்லியிருக்கிறார் எதிர்பாராத அந்த கிளைமாக்ஸ் படத்துக்கு இன்னும் பலம் சேர்த்து விடுகிறது.
பிளஸ்: சிரிப்பு ட்ராக்கில் ஒரு சீரியஸ் அரசியல்.
பிளாஷ் : தேர்தல் சமயத்தில் படத்தை திரைக்கு கொண்டு வந்த சாமர்த்தியம்.
ரேட்டிங்: 7.2 /10.