மனிதன் தெய்வமாகலாம் -திரை விமர்சனம்

சேலம் மாவட்டத்தில் உள்ள அந்த மலை கிராமம் சாலை வசதி உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லாதது. அதற்காக மனு கொடுத்தாலும் அதிகாரிகள் எட்டிப் பார்ப்பதில்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஓட்டு கேட்டு போவதோடு சரி. ஆனாலும் ஊரிலுள்ள ஒரு பெரியவர் மட்டும் அடிப்படை வசதிகள் கோரி மனு கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஆனாலும் அவர்கள் கோரிக்கை என்னவோ கிணற்றில் போட்ட கல் தான். எந்த முன்னேற்றமும் இல்லை .

குறைந்த மக்கள் தொகை இருப்பதால் அரசியல்வாதிகள் யாரும் கண்டு கொள்ளவே இல்லை.

இப்படிப்பட்ட ஊரில் செல்வராகவன் சைக்கிளில் சென்று நுங்கு வியாபாரம் செய்கிறார். வயது 30 க்கு மேலாகியும் கட்டை பிரம்மச்சாரியாக இருக்கும் செல்வராகவனுக்கு உறவில் பெண் பார்த்தும் அமையவில்லை.

காலம் இப்படியே போய் விடுமா? பக்கத்து ஊரில் இருந்து ஒரு வரன் வருகிறது. செல்வராகவனின் குண நலன்கள் பெண்ணுக்கு பிடித்து போக, திருமணம் நடந்தேறுகிறது. அழகான இல்லறம். தம்பதிகள் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்திருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு பெரிதாக ஏதாவது செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று மனைவி ஊக்கப்படுத்த, அதற்கேற்ப நெடுஞ்சாலை பக்கமாய் ஒரு ஹோட்டல் வாடகைக்கு கிடைக்க…
சுவையான கை பக்குவத்தில் சில நாட்களிலேயே ஹோட்டல் வியாபாரம் சூடு பிடித்துக் கொள்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் செல்வராகவன் உயிராக நேசிக்கும் ஒரு சிறுமி காட்டுப்பகுதியில் இறந்து கிடக்க..

போலீஸ் பாம்பு கடித்தது என்று கேசை முடிக்க…

சில நாட்களிலேயே செல்வ ராகவனின் மனைவியும் தற்கொலை செய்து உயிரை மாய்க்க…

இந்த இருவர் மரணத் துக்கும் காரணமானவர்களை தேடிப் பிடித்து வதம் செய்ய ஆவேசமாய் கிளம்புகிறார் செல்வராகவன். சாதுமிரண்டால் காடு கொள்ளுமா? முடிவு என்ன என்பது ரத்தம் தெறிக்கும் கிளைமாக்ஸ்.

தான் உண்டு தன் வேலையுண்டு என்று அமைதி வாழ்க்கை வாழ்ந்து வந்த கிராமத்து ராகவனை நடிப்பால் கண் முன் நிறுத்துகிறார் செல்வ ராகவன். மனைவிக்கு பாசமுள்ள கணவன், பக்கத்து வீட்டு சிறுமிக்கு அன்பான மாமா என நிஜம் பிரதிபலிக்கும் கிராமத்து மாந்தராக அவரை ரசிக்க முடிகிறது.
செல்வராகவன் மனைவி செல்வியாக அறிமுக நாயகி குஷி ரவி வருகிறார். முதல் படம் என்று சொல்லவே முடியாத அளவுக்கு நடிப்பில் அத்தனை எதார்த்தம். குடும்பப் பாங்கான முகம், பாசத்தை வெளிப்படுத்தும் முத்தம் என்று அந்த இல்லத்தரசி கேரக்டரில் ஜொலிக்கிறார். வில்லனிடத்தில் சீற்றம் காட்டும் இடத்தில் ஆவேசப்புயலை உணர முடிகிறது.

முன்னாள் கதாநாயகி நடிகை கெளசல்யா செல்வராகவனின் உறவுக்கார பெண்ணாக வருகிறார். தம்பி மனைவியின் சாவுக்கு தானே காரணம் என்று கதறும் இடத்தில் தேர்ந்த நடிப்பு. கௌசல்யாவுக்கு மீண்டும். திரைக்கதவுகள் திறக்கும். அவரது கணவராக வரும் ஆர்.எஸ்.சதீஷ், நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார்.

கந்துவட்டி இன்பராஜ் பாத்திரத்தில் வரும் மைம் கோபி,தனது கொடூர நடிப்பின் மூலம் ரசிகர்களின் ஒட்டுமொத்த வசவுக்கு சொந்தக்காரர் ஆகிறார். நல்ல அரசியல்வாதியாக வரும் ஒய்.ஜி.மகேந்திரன் பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் விரிவு படுத்தி இருக்கலாம்.

துடிப்பான கிராமத்து சிறுமி கேரக்டரில் வரும் லிர்த்திகா, அந்த கிராமத்தின் சந்தோஷமாக வளைய வருகிறார். இயல்பான நடிப்பில் மனதை நிறைப்பவரின் முடிவு கலங்க வைக்கிறது. சேலம் தீபக் மற்றும் பல புதுமுகங்கள் அந்த ஊர் மனிதர்களாகவே படம் முழுக்க இயல்பாக வந்து போகிறார்கள்.

சாலை வசதி இல்லாத அந்த மக்களின் உணர்வுகளையும் ஊரின் நிலைமையையும் தனது கேமரா கண்கள் மூலம் திரையில் படர விடுகிறார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மா.

இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுக ராகம். சோகப் பின்னணியில் அவரது பின்னணி இசை கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும், வலிகளையும் பார்வையாளர்களிடம் கடத்தி விடுகிறது.

அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்களின் பிரச்சனைகளோடு,ஒரு சாதாரண மனிதன் எப்படி மற்றவர்களுக்கு தெய்வமாகிறான் என்பதை சோகம் சுமந்து சொன்ன விதத்தில் தேர்ந்த கிராமத்து இயக்குனராக தடம் பதிக்கிறார் டென்னிஸ் மஞ்சுநாத்.

பிளஸ்: இயல்பான கதைப்போக்கு.

மைனஸ்: ஓவர்டோஸ் ஆகிப் போகும் சோகம்.

ரேட்டிங்: 5/10.