ஏப்ரல் 24-ல் ரீ ரிலீசாகும் அஜித்தின் அமர்க்களம்

காலத்தால் அழியாத கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘அமர்க்களம்’. நடிகர் அஜித் குமாரின் 25-வது திரைப்படமாகவும் அவரது கரியரில் முக்கிய திருப்புமுனையாக
அமைந்த இந்தப் படம் ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இது ரசிகர்களுக்கும் சினிமா பிரியர்களுக்கும் கொண்டாட்ட தருணமாக மாறியுள்ளது.

இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு ‘அமர்க்களம்’ வெளியானது. இதற்கு முன்பு மென்மையான காதல் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்த அஜித், இந்த படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தார். இந்த ஆக்ஷன் அவதாரம்தான் இன்று அவரின் மாஸ் ஐகான் இமேஜூக்கு அடித்தளம் அமைத்தது.

இந்த படத்தில்தான் அஜித் குமார் மற்றும் ஷாலினி இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். பின்னர் அவர்கள் வாழ்க்கையிலும் ஒன்றிணைந்து, தமிழ் சினிமாவின் மிகவும் நேசிக்கப்படும் தம்பதிகளாக மாறினர். இதனால், ‘அமர்க்களம்’ திரைப்படம் ரசிகர்களின் மனதிலும் தனி இடம் பிடித்துள்ளது.
ஏப்ரல் 24 அஜித்- ஷாலினி ஜோடியின் திருமண நாளை முன்னிட்டு இந்தப் படம் மீண்டும் வெளியாவது ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமாகவும் அதே சமயம் கொண்டாட்டமாக
வும் மாறியுள்ளது. ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனத்தின் கார்த்திக் வெங்கடேசன் இந்தப் படத்தை தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியிடுகிறார்.

25 ஆண்டுகளுக்கும் மேலான பயணத்தை நிறைவு செய்த ‘அமர்க்களம்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாவது வெறுமனே ரீ-ரிலீஸ் மட்டுமல்ல, அது நினைவுகளின் திருவிழா, உண்மைக் காதலின் கொண்டாட்டமும் கூட.