பிளாஸ்ட் — திரைவிமர்சனம்

கராத்தே மாஸ்டரான அர்ஜுன், மனைவி அபிராமி, மகள் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் அந்தப் பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறார்.
அதோடு நம் கண் எதிரில் யாருக்கு அநியாயம் நடந்தாலும் அதை தட்டிக்கேட்க தயங்க கூடாது என்பதையும் அவர்கள் மனதில் பதிக்கிறார்.
இதற்கிடையே மகள் ப்ரீத்தி முகுந்தன் எங்கு தப்பு நடந்தாலும் அதை அதிரடியாக தட்டிக் கேட்கிறார். இதனால் அவருக்கு சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட, அம்மா அபிராமியின் அறிவுரையின்படி அமைதியாக இருக்க முயல்கிறார்.
இந்த நேரத்தில், அவரது தங்கச் சங்கிலியை பறிக்க ஒரு திருடன்
முயற்சிக்க, வழக்கம் போல் தனது அதிரடி நடவடிக்கையால் அந்த திருடனை போலீசில் பிடித்துக் கொடுக்கிறார்.
சிறிய திருட்டு என்று நினைத்து அர்ஜுனும், ப்ரீத்தி முகுந்தனும் காவல் நிலையத்தில் அது குறித்துபுகார் கொடுக்க முடிவு செய்யும் போது, அது தாங்கள் சந்திக்கப் போகிற மிகப்பெரிய பிரச்சனையின் தொடக்கப் புள்ளி என்று தெரிய வர… அதனால், அர்ஜுன் குடும்பத்தினர் உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட…
அந்த ஆபத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக அர்ஜுன் குடும்பம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத திரைக்கதை.
இந்த படத்தின் தொடக்கம் முதலான சிறப்பே, அநீதிக்கு எதிராக அர்ஜுனனின் மொத்த குடும்பமும் களத்தில் இருக்கிறது என்பதுதான்.
பொதுவாக ஒரு படத்துக்கு ஆக்ஷன் கிங் அர்ஜுனின் அதிரடி அட்டகாசமே திகட்ட திகட்ட போதும்.
ஆனால் இந்த படத்திலோ அவருடன் இணைந்து மனைவியும் மகளும் கூட எதிரிகளை வெளுத்து வாங்கு கிறார்கள். இந்த வகையில் இது ஆக்சன் விரும்பும் ரசிகனுக்கு ட்ரிபிள் ட்ரீட்.
கராத்தே மாஸ்டராக வரும் அர்ஜுன், நிஜமாகவே கராத்தே மாஸ்டர் என்பதால் அவரது ஒவ்வொரு அடியும் அடியாக நெஞ்சுக்குள் இறங்குகிறது. தெரிந்தோ தெரியாமலோ, தான் பிடித்திருப்பது புலி வால் என்று தெரிந்ததும் கொலைக்கு அஞ்சாத அஞ்சாத அந்த கூட்டத்தை திட்டமிட்டு அவர் வீழ்த்தும் ஒவ்வொரு ஆக்‌ஷன் களமும் ஒட்டுமொத்த
திரையரங்கின் கரகோஷ நேரமாகி விடுகிறது.
சிறு வயது முதலே தனது மகளுக்கு தைரியம், நம்பிக்கை ஆகியவற்றை சொல்லிக் கொடுத்து வளர்ப்பவர், ஒரு சிறந்த தந்தையாகவும் பார்வையாளர்கள் மனதில் பதிந்து விடுகிறார். மனைவிக்கு அவ்வப்போது பயப்படும் இடங்களும் அதாவது பயப்படுவது போல் நடிக்கும் இடங்களும் படத்தின் கலகல ஏரியா.

அர்ஜுனின் மனைவியாக வரும் அபிராமி, அமைதியை விரும்பும் பொறுப்பான அம்மா. கல்யாண வயதில் இருக்கும் மகளை அடிதடியை கைவிட்டு அமைதியாக இருக்க அவர் வற்புறுத்தும் இடத்தில் பொறுப்பான தாயை பார்க்க முடிகிறது.
ஒரு கட்டத்தில் அவரே அதிரடியில் இறங்கும்போது அரங்கம் ஆர்ப்பரிக்கிறது, கரகோஷத்தில்.
அர்ஜுன் – அபிராமி தம்பதியின் மகளாக கதையின் நாயகியாக வரும் ப்ரீத்தி முகுந்தனுக்கு இந்த கேரக்டர் நிஜமாகவே அவருக்கு கிடைத்த அட்சய பாத்திரம்.
சண்டைக் காட்சிகளில் நிஜமான கராத்தே வீராங்கனையை கண் முன் நிறுத்துகிறார். இவரது கால் வீச்சு எதிரியின் தலை வரை சென்று பதம் பார்க்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் அடடா, அடடா ரகம்.
ப்ரீத்தி முகுந்தனைத் தேடி இனி இயக்குனர்கள் முழு நீள ஆக்ஷன் கதை கதையுடன் வர வாய்ப்பு அதிகம். நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்தால் தென்னிந்திய சினிமாக்களில் இவருக்கான இடம் உறுதி.

வில்லன்களில் அதிகம் அலட்டிக் கொள்ளாத வில்லனாக ஜான் கொக்கேன் வசீகரிக்க, அர்ஜுன் சிதம்பரம் துப்பாக்கி குண்டு பாய்ந்த காலோடு கொலை வெறி தாக்குதல் நடத்தும் இடங்கள் அத்தனையும்
பயமுறுத்தல் ஏரியா.
பவன், பாலா ஹாசன், வினோத் சாகர், விவேக் பிரசன்னா தங்கள் கேரக்டர்களில் நின்று நிலைத்து ஆடுகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ண னின் கேமரா அதிரடி காட்சிகளில் அசுரப் பாய்ச்சல்
பாய்ந்திருக்கிறது.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்தோடு அழகுற இணைந்து கொள்கிறது.
இயக்குநர் கற்பனை செய்த காட்சிகளுக்கு திரையில் உயிர் கொடுத்தவர்களின் முக்கியமானவர் சண்டைப்பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபு. அர்ஜுனின் அறிமுக சண்டைக்காட்சி தொடங்கி, ஒட்டுமொத்த குடும்பமே இணைந்து அதிரடிக்கும் ஆக்‌ஷன் வரை படத்தில் இடம்பெறும் அனைத்து ஆக்‌ஷன் காட்சி காட்சிகளும் திரையில் இடியாய் இறங்கி மின்னலாய் தெறிக்கிறது.
குறிப்பாக ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அபிராமிக்கான சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விதம் பாராட்டுக்குரியது.
எழுதி இயக்கியிருக்கும் சுபாஷ் கே.ராஜ், அரசியல் பலமிக்க ஒரு கொலைவெறி கும்பலுக்குள் மூன்று பேர் கொண்ட ஒரு சின்ன குடும்பம் சிக்கிக் கொள்வதை இயல்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார். கமர்ஷியல் படம் என்றாலும் அதை பெண்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் கொடுக்கும் ஒரு படைப்பாகவும் கொடுத்திருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் படமாகவும் அமைந்து சிறப்பு சேர்க்கிறது.
குடும்ப திரைப்படத்திற்குள் இவர் தந்திருப்பது ஒரு அதிரடி ஆக்‌ஷன்
மேளா.
பிளஸ்: நாயகனோடு இணைந்த அம்மா, மகள் அதிரடி பாத்திரப்படைப்பு.
பிளாஷ்: காட்சிகளில் ஆங்காங்கே பரவலாக இயக்குனர் தூவி விட்டுப் போகும் சமூக அக்கறை.
ரேட்டிங்: 8/10.