டார்க் ஜயண்ட்-திரை விமர்சனம்

சென்னையில் மனைவி மற்றும் தங்கையுடன் வசித்து வரும் ஆதர்ஷ் மதிகாந்த், கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார். இந்த நெருக்கடியான சூழலில் ஆதர்ஷ் மதிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் ஒருவர், கோவை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், அவரது தாத்தா இருப்பதாகவும், அவர் தனது கோடிக் கணக்கிலான மதிப்பில் உள்ள சொத்துக்களை தன் பேரன், பேத்திக்கு கொடுக்க விரும்புவதாகவும் சொல்ல…
சொத்து கிடைத்தால் தனது கடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில், தன் மனைவி மற்றும் தங்கையை அழைத்துக் கொண்டு அந்த கிராமத்துக்கு செல்கிறார் ஆதர்ஷ் மதிகாந்த்.
பாழடைந்த பங்களா போல் இருக்கும் தாத்தாவின் வீட்டை அடைந்ததும் படுத்த படுக்கையாக இருக்கும் தாத்தாவை சந்தித்து, ‘தாத்தா அழைத்த பேரன் நான் தான்’ என்று உறுதிப்படுத்தி கொள்கிறார். தாத்தாவோ பதிலேதும் சொல்லாமல் வெறித்த பார்வையுடன் அமைதி காக்கிறார்.
சொத்து கைக்கு வர வேண்டுமே. அதற்காக சில நாட்கள் தாத்தாவின் அந்த
பாழடைந்த பங்களாவிலேயே தங்க முடிவு செய்கிறார். அங்கு தங்கும் சில நாட்களில் எதிர்பார்க்காத சில பயங்கரமான சம்பவங்கள் நடக்கின்றன.
அதையும் பொறுத்துக் கொண்டு சொத்தை எதிர்பார்த்து காத்திருக்க, ஆனால் சொத்தை அவருடைய பெயருக்கு மாற்றி தரும் எந்த ஒரு நிகழ்வும் அங்கே நடைபெறுவதாக தெரியவில்லை.
அப்போது தான் அவர்களை போனில் பேசி கிராமத்திற்கு வரவைத்த நபரும், படுத்த படுக்கையாக இருந்த அவரது தாத்தாவும், பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டனர் என்ற உண்மை தெரிய வருகிறது.
அதன் பிறகு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களையும், நாயகனின் குடும்பத்தை அங்கே வர வைத்ததற்கான பின்னணியையும், இதயத்துடிப்பை எகிறவைக்கும் விதத்தில் சொல்வது தான் இந்த ‘டார்க் ஜயண்ட்’.

அமானுஷ்ய கதைக் களம் என்றால் தனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி என்பதை இந்த படத்திலும் நிரூபித்து இருக்கிறார் நாயகன் ஆதர்ஷ் மதிகாந்த். இந்த முறையும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்குள் இயல்பாக பொருந்திக் கொள்கிறார்.
பாழடைந்த பங்களாவுக்குள் ஆவியின் ஆதிக்கத் துக்குள் அவர் சிக்கி தன் இயல்பை மறக்கும் இடங்கள் அத்தனையிலும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார், அழகாகவே. குறிப்பாக கொடுத்த கடனை திரும்ப கேட்டு வரும் நண்பனிடம்
அவரை வழிநடத்தும் ஆவிக்குள்ளான அந்த நடிப்பு மிரட்டி விடுகிறது.
நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் ஜோவிதா லிவிங்ஸ்டன், குடும்பப் பாங்கான கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு. குறிப்பாக ஆவி வீட்டுக்குள் சிக்கிக் கொண்டோம் என்பது தெரிய வந்ததும் கண்களில் வெளிப்படும் அந்த மரண பயம் அத்தனை இயல்பு . நாயகனின் தங்கையாக வரும் பெண்மணி பதற்றமான காட்சிகளுக்கு மேலும் பதற்றம் சேர்க்கிறார்.
நாயகனின் நண்பனாக அமுதவாணன், போலீஸ் அதிகாரியாக ரபீக் பாட்ஷா, சிறப்பு தோற்றத்தில் கே பாக்யராஜ், லிவிங்ஸ்டன் ஆகியோரும் இருக்கிறார்கள்.
அருவி மதன் மற்றும் சோனியா அகர்வால்- குறைவான
காட்சிகளே வந்தாலும் நடிப்பில் நிறைவு. சங்கீத்தின்
ஒளிப்பதிவும் விக்னேஷ் ராஜாவின் பின்னணி இசையும் இந்த திகில்
கதைக்குள் மேலும் திகிலை பற்ற வைத்து விடுகிறது.
இயக்கி இருக்கிறார் கே.எஸ். கிஷான்.
இரண்டு மணி நேரம் ரசிகர்களை திகிலில் உறைய வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரைக் கதையை உருவாக்கினாரோ என்னவோ, நினைத்ததை சாதித்து இருக்கிறார்.

பிளஸ்: ஆவிக் கதையை அதற்கே உரிய திரில் மாறாமல் சொன்னது.

பிளாஷ்: பாதி படத்துக்குள் மொத்த ரசிகர்களையும் அந்த ஆவி வீட்டுக்குள் கொண்டு வந்தது.

ரேட்டிங்: 5.8/10.
: