காதல் திருமணம் செய்த கணவருடைய சொந்த ஊருக்கு அவருடன் இரண்டு வருடங்கள் கழித்துசெல்கிறார் சமந்தா. கணவரின் தங்கை திருமணத்துக்காக வந்த அழைப்பை தொடர்ந்து இந்த பயணம்.
அங்கே போன பிறகுதான் கணவரின் தந்தை தங்கள் விஷயத்தில் இன்னும் சமாதானம் ஆகவில்லை என்று தெரிய வர…
இதற்கிடையே தங்கள் திருமணத்திற்கு முன்னான சமந்தாவின் முன் கதை அவர் கணவர் கூட அறியாதது. இப்போது கணவர் வீட்டுக்கு வந்த இடத்தில் அதுவே அவருக்கு சிக்கல் ஆகிறது
ஸ்வர்ணா எனும் கதாபாத்திரத்தில் அமைதியே வடிவாக அந்த பெரிய குடும்பத்துக்கு அறிமுகமாகும் சமந்தா, அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த அன்பை பெற திட்டமிடுகிறார். விதவித சமையல் செய்து மொத்த குடும்பத்தையும் அசத்துகிறார். இனி
எங்கள் தங்கம் என்று புகுந்த வீட்டில் உள்ளவர்கள் கொண்டாட வேண்டியது தான் பாக்கி.
இந்த நேரத்தில் சமந்தாவின் கடந்த காலத்தில் அவருக்கு அறிமுகம் ஆன ஒருவன் அவரை சந்தித்து, ‘நீ ஜான்சி தானே’ என்று கேட்க…
இப்போது சமந்தா எடுக்கும்
இன்னொரு அவதாரமே அதிரி புதிரி திரைக்கதை.
ஜான்சி என்ற பெயரில் தனது வாழ்க்கையை தொடங்கி பெரிய குடும்பத்து மருமகள் சுவர்ணாவாக மாறும் கேரக்டரில் வரும் சமந்தா, தனது ஒப்பற்ற நடிப்பால் முழு படத்தையும் தாங்குகிறார். தன்னை மோப்பம் பிடித்து தேடி வந்த எதிரிகளை அமைதியாக கையாளத் தொடங்கி, அது முடியாமல் போய் அதிரடிக்கு மாறும் இடங்கள் அத்தனையும் சமந்தா ஸ்பெஷல். எதிரிகளை வெளுத்து வாங்கும் பஸ்சுக்குள் நடக்கும் அந்த ஒரு சண்டைக் காட்சி போதும், சமந்தாவின் அதிரடிக்கு சாட்சி சொல்ல.
சமந்தாவின் கணவராக வரும் திகந்த் மஞ்சாலே, மனைவி பற்றி தெரியாமல் இருப்பதும் தெரிந்தபின் தவிப்பதுமாய் தனது கேரக்டரை அற்புதமாக கையாண்டு இருக்கிறார்.
எதிர்மறை வேடமான கர்ணா கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் குல்சன் தேவய்யா, சமந்தாவை பெரிய வீட்டில் சந்தித்த பிறகு பழிவாங்க துடிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் வில்லத்தனத்தில் பளிச்சிடு
கிறார்.
சமந்தாவின் மாமனாராக ஆனந்த், மாமியாராக கௌதமி, மற்றும் அந்த குடும்பத்து பிரஜைகளாக ஸ்ரீலக்ஷ்மி,மன்ஜூஷா,
சைதன்ய கிருஷ்ணா,ஸ்ரீமுகி ஆகியோரும் இந்த கதைக்குள் பொருத்தமாக களமாடி இருக்கிறார்கள். குறிப்பாக சமந்தாவின் தோழியாக வரும் அந்தப் பெண் படத்தின் இன்னொரு எனர்ஜியாகவே வந்து போகிறார்.
ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவில் அமைதியான சமந்தா அதிரடி சமந்தா ஆகிய இருவரும் வேறுபட்டுத் தெரிகிறார்கள். சமந்தா தொடர்பான அதிரடி காட்சிகளில், குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டை காட்சி காட்சியில் கேமராவும் இஷ்டத்துக்கு புகுந்து விளையாடி இருக்கிறது.
சந்தோஷ் நாராயணன் இசை படத்தின் இன்னொரு பலம்.
லீ விட்டேகர்,ஏஜாஸ் குலாப்,மார்வெல் நட்ராஜ் ஆகியோர் வடிவமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் சமந்தாவின் அதிரடி காட்சிகளுக்கு பலம் சேர்த்து இருக்கிறது. அவரை புடவை கட்டிய புயலாக உணர
முடிவதே இந்த சண்டைக் கலைஞர்களின் சிறப்பும் கூட.
ராஜ் நிடிமொரு,வசந்த் மரிம்கண்டி ஆகியோர் கதை திரைக்கதை எழுத, இயக்கியிருக்கிறார் நந்தினிரெட்டி.
ஒரு இளம் பெண்ணின் இரு வேறு காலகட்டத்தை திரையில் அவர் சொல்லிய விதம், கூடவே விறுவிறுப்பையும் இணைத்துக் கொள்கிறது.
பிளஸ்: இந்த பூவும் புயலாகுமா என்று வியக்கிற அளவுக்கு சமந்தாவின் நடிப்பு.
பிளாஷ்: வித்தியாசமான அந்த பிளாஷ் பேக்.
ரேட்டிங்: 7.5 / 10.
