அங்கீகாரம் -திரை விமர்சனம்

சென்னையில் துப்புரவுத்தொழிலாளியாகப் பணியாற்றும் ரமாவுக்கு ஒரு மகன், ஒரு மகள். விபத்து ஒன்றில் கணவர் உயி ரிழக்க, பிள்ளைகள் இருவரையும் கஷ்டப்பட்டு படிக்கவைத்து ஆளாக்குகிறார்.
இந்நிலையில்
அவர்கள் குடியிருக்கும் குடிசை வீட்டுக்கும் கேடு வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள குடிசைகளை இடித்து அப்புறப்படுத்த அரசாங்கம் அவ்வப்போது முயற்சி மேற்கொள்ளும் நிலையில்
ரமாவின் மகன் தடகள் ஓட்டப்பந்தய வீரராக தடம் பதிக்க விரும்புகிறார். தேசிய அளவில் விளையாடி வெற்றி பெற்று வறுமையில் இருந்து விடுபட வேண்டும் என்பது அவரது ஆசை.
போதிய வசதிகள் இல்லாத அந்த ஏழ்மை நிலையிலும் ஓட்டப்பந்தயத்தில் பல சாதனைகள் செய்கிறார்.
ஆனாலும் அவர் மீது வன்மம் கொள்ளும் விளையாட்டு துறை அதிகாரிகள் அவரை சர்வதேசப் போட்டியில் விளையாட அனுமதிக்க மறுக்கின்றனர்.
இதனால் வேறு வழி இன்றி நீதிமன்றம் போகிறார்.
வலிமையும் அதிகாரமுமிக்க விளையாட்டு ஆணையங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் தனக்காக தானே வாதாடுகிறார்.

வழக்கின் முடிவில் அவருக்கு நீதி கிடைத்ததா? அவர் சர்வதேசப் போட்டியில் விளையாடினாரா? கேள்விகளுக்கான விடையே இந்த அங்கீகாரம் திரைப்படம்.

விளையாட்டு வீரராக அறிமுக நடிகர் கே.ஜே.ஆர். வருகிறார். அந்த கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அப்படி ஒரு உழைப்பை நடிப்பாக கொட்டி இருக்கிறார். விளையாட்டு ஆணையம் தன்னை புறக்கணிக்க தொடங்கிய பிறகு நீதி கேட்டு நீதிமன்றம் போகும் அவருக்கு அடுத்தடுத்து மனமடிவை ஏற்படுத்தும் அரசு வழக்கறிஞரால் அவமானமே மிஞ்சுகிறது. இருப்பினும் அவமானத்தை துடைத்துப் போட்டு தன் பக்க நியாயத்திற்காக அவரே வாதாடும் இடங்கள் அத்தனையும் அவர் நடிப்புக்கான கரகோஷ இடங்கள்.
பந்தயத்துக்காக ஓடத் தொடங்கும் இடங்களில் அவரது உடல் மொழி வரை நடிக்கிறது. நீதிமன்றம் அவர் பக்க நியாயத்தை புரிந்து கொள்ளும் இடம் தொடங்கி நடிப்பில் இன்னும் இறங்கி அடிக்கிறார்.
வறுமைக் கோட்டில் உள்ளவர்களை, விளையாட்டு கனவில் வரும் இளம் பெண்களை இந்த ஆணையங்கள் பார்க்கும் பார்வையே வேறு என்பதையும் கோர்ட்டில் அவர் போட்டு உடைக்கும் இடத்தில் திரையரங்கில் ”அடப்பாவிகளா’ சத்தம் அமைதியை கிழிக்கிறது.
ஓட்டப்பந்தய வீராங்கனையாக நடித்திருக்கும் சிந்தூரி விஸ்வநாத் தன்னிடம் அத்துமீறும் உயரதிகாரியிடம் சீறும் காட்சியில் சிங்கப் பெண்ணின்சீற்றம் உணர முடிகிறது. நீதிமன்றத்தில் மேல திகாரியால் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டலை
சொல்லும் இடம் நெஞ்சுக்குள் தீப் பிடித்த உணர்வு.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா,சென்னை துப்புரவுத் தொழிலாளியாக, பாசமுள்ள அம்மாவாக நெஞ்சில் பதிகிறார்.

அரசுத்தரப்பு வழக்குரைஞராக வரும் விஜிவெங்கடேஷ் ஆரம்பத்தில் அலட்சிய மனோபாவத்தில் அந்த வழக்கை கையாளும் இடங்கள் அத்தனையும் அவர் நடிப்புக்கான சிறப்பு. அதற்கேற்ற அலட்சிய உடல்மொழியும் அவருக்கு நன்றாகவே கை கொடுத்து இருக்கிறது.

விளையாட்டு ஆணையத்தில் கணக்காளராக நடித்திருக்கும் ஆண்டனி, வரும் குறைந்த காட்சிகளிலும் நிறைவான நடிப்பை தந்து போகிறார்.

நீதிபதிகளாக மோகன்ராம், ரங்கராஜ் பாண்டே அமைச்சராக மன்சூர் அலிகான் பொருத்தமான பாத்திரத் தேர்வுகளில் தங்கள் இருப்பை நிலை நாட்டுகிறார்கள்.
ஏ.விஸ்வநாத்தின் கேமரா நீதிமன்ற காட்சிகளை படம் பிடித்த விதம் சிறப்பு.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் ரசிக்கவும் பின்னணி இசை பிரமிக்கவும் வைக்கின்றன.
பீட்டர்ஹெயினின் சண்டைப்பயிற்சி புதுவித உத்தியில் கவனம் பெறுகின்றன.
எழுதி இயக்கியிருக்கும் ஜே.பி.தென்பாதியான், ஏழ்மை நிலையில் ஒரு தடகளவீரர் அவருடைய போராட்டம் என்கிற கதைக்குள் அவர்களை மேம்படுத்த வேண்டிய அதிகாரிகள் , அதை செய்ய முன்வராமல் அவர்களை எப்படி விளையாட்டுத் துறையில் இருந்து ஓரம் கட்டுகிறார்கள் என்பதை நெஞ்சுக்கு நெருக்கமாக சொல்லியிருக்கிறார். அதுவே ஏழ்மை நிலையில் உள்ள இளம் பெண்களை தங்கள் இச்சைக்கு பலியாக்க முயன்று, அது முடியாமல் போகும் பட்சத்தில் அவர்கள் அதன் பிறகு விளையாடவே முடியாத அளவுக்கு இரும்புக் கரம் கொண்டு செயல்படும்
அவலத்தையும் காட்சிப்படுத்தி, சுயநல அதிகாரிகள் தலையில் ஆணி அடித்திருக்கிறார்.
அந்த கிளைமாக்ஸ் நிச்சயம் எதிர்பாராதது.
பிளஸ்: கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது தேசத்தில் உள்ள 33 விளையாட்டுக்
களுக்கும் கொடுங்கள் என்ற வலியுறுத்தல்.

பிளாஷ்: இம்மாதிரியான
திருந்தாத ஆணையங்கள் இருந்தென்ன, இல்லாமல் போனால் என்ன? என்ற சிந்தனைக்குள் பாமரனை கொண்டு வந்த இயக்கம்.

ரேட்டிங்: 7.8 / 10.