லவ் ஓ லவ் –திரை விமர்சனம்

நடுத்தரக் குடும்ப இளைஞனுக்கு நேர்ந்த வித்தியாசமான காதல் அனுபவம் தான் படம். இளைஞன் பவிஷ் பெற்றோரின் அன்புக்கு கட்டுப்பட்டவர். மாதம் ரூ. 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்ப்பவர், மாதந்தோறும் தனது சம்பளப் பணம் மொத்தத்தையும் அப்படியே தனது அப்பாவிடம் கொடுத்து விடுபவர்.
இந்த இளைஞனுக்கும் காதல் வருகிறது. காதலியின் அதிகபட்ச அன்புக்காக ஒருகட்டத்தில் அவன் கடன் வாங்கி சிக்கலில் சிக்கிக் கொள்ளும் அளவுக்கு நிலைமை விபரீதமாக போய் விட…
அந்த காதல் இழுத்து விட்ட செலவால்
இளைஞர் மட்டுமின்றி அவர் குடும்பம் மொத்தமும் அவமானப்பட வேண்டியதாகிறது .
இதனால் காதலே வேண்டாமென ஒதுங்கும் அவரை விடாமல் துரத்துகிறார் காதலி. இதனால் கடைசியோ கடைசியாக காதலிக்கு ஒரு சோதனை வைக்கிறார் நாயகன். அந்தச் சோதனையில் நாயகி வென்றாரா? காதல் சேர்ந்ததா?பிரிந்ததா? என்பதே இந்த லவ் ஓ லவ் திரைப்படம்.

நாயகனாக வரும் பவிஷுக்கு பெயரளவில் இது இரண்டாவது படம். ஆனால் நடிப்பில் இதுதான் முதல் படம் என்று நிரூபிக்கும் அளவுக்கு அந்த கேரக்டரை தனக்குள் அழகாக சுமந்து இருக்கிறார்.
காதலியின் அதிகபட்ச அன்புக்காக ஒருகட்டத்தில் கடன் வாங்கி சிக்கலில் சிக்கிக் கொள்ளும் அளவுக்கு நிலைமை விபரீதமாக போய்விடும் இடங்களில் தேர்ந்த நடிகர்களுக்கே உரிய லாவகம் இவரது நடிப்பில்.
அறிமுக நாயகி நாகதுர்காவை புதுமுகம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அத்தனை இயல்பான நடிப்பு. படத்தில் தனது கேரக்டர் வீரியமிக்கது என்பதை புரிந்து கொண்டு தெளிவான பர்பாமன்ஸை கொடுத்து ஆச்சரியப்
படுத்துகிறார்.
நாயகனின் தந்தையாக கே.எஸ்.ரவிக்குமார், தாயாராக ஐஸ்வர்யா, நாயகியின் அம்மாவாக ரம்யா,காவல்துறை ஆய்வாளராக செல்வராகவன், மகளிர் சங்கத் தலைவியாக வனிதா விஜயகுமார் பொருத்தமான பாத்திரத் தேர்வுகளில் கதையோடு இணைந்து போகிறார்கள்.
பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு திரைக்கதைக்குள் இருக்கும் அழகான கட்டமைப்பை காட்சிப்பதிவில் செதுக்கி பிரமிக்க வைக்கிறார்.
பாக்சன் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம். பின்னணி இசை, காட்சிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளை நமக்குள் அழுத்தமாய் கொண்டு சேர்த்து விடுகிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன்.
காதல் மற்றும் ஆண் பெண் உறவுகளின் பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தக் கூடிய அழகான கதை சொல்லல் இவருக்கு நன்றாகவே வருகிறது. குறிப்பாக வசனங்கள் பல இடங்களில் கோடையிடி.
இளைய தலைமுறை, காதலிக்கும்முன்போ அல்லது காதலிக்கும்போதோ கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.
சிலருக்கு தேனாக இனிக்கும் காதல் பலருக்கு தேனியாக கொட்டி விடவும் கூடும் என்ற பரிமாணத்தில் பின்னப்பட்ட இந்த கதைக் களம் நிஜமாகவே அமர்க்களம்.

பிளஸ்: புதிய கோணத்தில் அணுகப்பட்ட காதல்.

பிளாஷ்: காட்சிகளில் இருந்து நம்மை அங்கே இங்கே விடாத ஒளிப்பதிவு.

ரேட்டிங்: 7.8 /10.