Evil dead burn -ஹாலிவுட் பட திரை விமர்சனம்

ஹாலிவுட்டில் வசூலை வாரிக் குவித்த ‘ஈவில் டெட்’ பட வரிசையில் இது ஆறாவது பாகம். முந்தின பாகங்களுக்கு குறையாமல் இதிலும் ரத்தம் தெறிக்கிறது. ரத்தம் சொட்ட சொட்ட உதட்டு முத்தம் கூட இருக்கிறது.
நெஞ்சை உறைய வைக்கும் ஆவி அட்டகாசம் இருக்கிறது. அப்புறம் என்ன… திகில் ரசிகர்கள் விரும்புவது இந்த படத்திலும் அவர்களுக்கு கிடைத்து விடுகிறது.

படத்தின் தொடக்கத்திலேயே திகில் சம்பவங்கள் தொடங்கி விடுகிறது
எட்கர் -சூசன் குடும்பத்தில் ஒரு மரணம் விழுகிறது. அதற்கான இறுதிக் காரியங்கள் பற்றி அந்த குடும்பம் ஓரிடத்தில் ஒன்று கூடி ஆலோசிக்கிறது .
ஆனால் அதற்குப் பிறகு நடக்கப் போகும் இறுதிக் காரியங்கள் யார் யாருக்கு என்று தெரியாத வகையில் அந்தக் குடும்பத்தில் அமானுஷ்ய சக்தியின் ஆட்டம் தொடங்குகிறது. அடுத்தடுத்து துர் சம்பவங்கள் நடக்கின்றன .அவை எதற்காக என்பதை ரத்தம் தெறிக்க தெறிக்க சொல்லி இருக்கிறார்கள்.

படத்தில் ஆறே ஆறு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு அசுர ஆட்டம் ஆடி இருக்கிறார் இயக்குநர் செபாஸ்டியன் வானிசெக்.

முதல் பாதி வரை யார் யார் ஆவி தாக்குதலுக்கு
உள்ளாவாரோ என்ற பயமே முழுமையாக நம்மை ஆட்கொண்டு விடுகிறது.
குறிப்பாக சாப்பாட்டு மேசையில் குடும்பத்தினர் அமர்ந்து பேசும் காட்சி யில் அடுத்து நடக்கும் அதிரடி சம்பவம் இதயத்தின் லப் டப்பை ஏகத்துக்கும் ஏற்றி விடுகிறது.
வெட்டு குத்து, உக்கிரம், வக்கிரம் ரத்தக் குளியல் என்று வரிசை கட்டும் திகில் காட்சிகள் நமக்குள்
திடுக்கிடலை தொடர்ச்சியாய் தக்க வைத்துக் கொள்கின்றன.

படம் முழுக்க முதியவர் பாத்திரத்தில் ஆவியின் அட்டகாசத்தை நடிப்பில் அற்புதமாக கொண்டு வருகிறார்
ஏர்ரோல் ஷான்ட்.

கதாநாயகி சௌஹைலா ஆவிக்கு பயந்து அச்சத்தில்
உறைந்தாலும்,
ஒரு கட்டத்தில் பயத்தை ஓரமாய் வைத்துவிட்டு திருப்பித் தாக்கும் காட்சிகளில்
எப்போது யாரைக் கொல்வாரோ என்ற பதற்றம் தேகமெங்கும் .
உச்சக் கட்டகாட்சிகளில் அவர் வெல்ல முடியாத சக்தியோடு வந்து இன்னும் மிரட்டுகி றார்.
படத்தின் ஒட்டு மொத்த திகிலையும் நெஞ்சுக்குள் ஏற்றி விடுகிறார் ஒளிப்பதி வாளர் பிலிப் லசானோ.
குறிப்பாக வீட்டுக்குள்ளேயே நடக்கும் பல திகில் காட்சிகளை மிரட்டலான கோணங்களின் மூலம் நம் கண்களுக்குள் கொண்டு வந்து பயமுறுத்துகிறார்.

சேவியர் காப்ஸ் , டபுள் டேஞ்சர் இசை, இருக்கிற பயம் போதாது என்று தன் பங்குக்கு நெஞ்சுக்குள் பயப் பந்தை வீசிப் போகிறது.
படத்தை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுள்ளது.