சென்னை
பெரம்பூர் பகுதியில் வசிக்கும் பாரி இளவழகனுக்கு
அதே பகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்திய பெண்ணான ரம்யா ரங்கநாதன் மீது காதல். ஆனால் ரம்யாவோ நட்பு ரேஞ்சில் மட்டும் பழகுகிறார்.
பாரிக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும், நட்பு காதலாகும் என்ற நம்பிக்கையில் நட்பை தொடர்கிறார்.
சில வருடங்கள் இப்படியே ஓடிய நேரத்தில் ஒரு நாள் ரம்யாவும் நட்பிலிருந்து காதலுக்கு மாறுகிறார். இப்போது பாரியிடம் ஒருஅதிரடி மாற்றம். தன் ஒரு தலைக் காதலியின் மனமாற்றத்திற்கு சந்தோஷம் கொள்ளாமல், அந்தக் காதலை ஏற்க தயக்கம் காட்டுகிறார். அடுத்த கட்ட அதிர்ச்சியாக ரம்யாவிடம் இருந்து விலகிச் செல்லவும் முற்படுகிறார்.
பாரியிடம் நேர்ந்த அந்த மாற்றத்துக்கு காரணம் என்ன? அவரது காதல் என்னவானது ? என்பதை நகைச்சுவை பின்னணியில் சொல்லி இருக்கிறார்கள்.
நாயகனாக வரும் பாரி இளவழகன், அந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்துகிறார். தன் நண்பியிடம் இருந்து காதல் என்ற வார்த்தையை கேட்க காத்திருக்கும் இடங்களிலும் சரி,
அதே காதல் கை
கூடும்போது தவிர்க்கும் இடங்களிலும் சரி… அதற்கான மனநிலையை நடிப்பில் அப்படியே கொண்டு வந்திருக்கிறார்.
நாயகியாக வரும் ரம்யா ரங்கநாதன், அந்த ஆங்கிலோ இந்திய பெண் கதாபாத்திரத்தை கன கச்சிதமாக கையாண்டு இருக்கிறார். ஆங்கிலம் கலந்த சென்னை தமிழை அவர் உச்சரிப்பதே தனி அழகு.
தன்னிடம் இருந்து விலகிச்செல்ல முயற்சிக்கும் காதலனை ஓரங்கட்டி மிரட்டுவது ரசனை என்றால், காதலரின் தந்தையிடம் அதிரடியாக பேசுவது ரகளை.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் சேத்தன், வாயை திறந்தாலே
திரையில் சிரிப்பு கொட்டுகிறது.
காலையில் மனைவிக்கு பயந்த கணவராக காட்சி தந்து மாலையில் ‘ராவாக’அனைவருக்கும் பயம் காட்டும் குடும்பத் தலைவராக
சமீபத்தில் ஒரு நடிகரை இப்படி சிரிக்கச் சிரிக்க திரை பார்த்ததில்லை. வெல்டன் சேத்தன்.
நாயகனின் அம்மாவாக மீண்டும் திரைப்பிரவேசம் செய்யும்
ரோஜா, தோற்றம், பேச்சு, நடிப்பு என அனைத்திலும் கலக்கோ கலக்கு என்று கலக்கி எடுத்திருக்கிறார்.
சிரிப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த கேரக்டரில் கண்டிப்பான குடும்பத் தலைவி. தவறை உணர்ந்து மனம் வருந்தும் இடத்தில் அப்படியே தலை கீழாக நடிப்பில் இன்னொரு பரிமாணம்.
நாயகனின் நண்பராக அந்த பெங்களூர் தமிழர் கேரக்டரில் படம் நெடுக வந்து சிரிப்பு மழை பொழிகிறார்,
பரிதாபங்கள் கோபி.
சில காட்சிகளே வந்தாலும்
மாங்கபாபு கேரக்டர் செல் முருகனால் சிறப்பு பெறுகிறது.
(சிரிச்சி முடியல சாமி)
நாயகனின் முறைப் பெண் வேடத்தில் நடித்திருக்கும் நிகிலா சங்கர், நாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் இஸ்மத் பானு, சகோதரனாக நடித்திருக்கும் சுதர்சன் காந்தி பொருத்தமான பாத்திரத்தேர்வில் தங்கள் இருப்பை நிரூபிக்கிறார்கள்.
சென்னை பெரம்பூர் ஏரியா ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட்டின் கேமராவில் அழகு கூடித் தெரிகிறது.
பரத் சங்கரின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்க, காட்சிகளோடு பின்னிப்பிணைந்த பின்னணி இசை கதையை இனிதே நம் வசமாக்கி விடுகிறது.
எழுதி இயக்கியதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் பாரி இளவழகன், சாதாரண காதல் கதைக்கு பெரம்பூர் பின்னணியில் அழகாகவே நகைச்சுவை முலாம் பூசி இருக்கிறார்.
படத்தின் பலமே கதாபாத்திரங்கள் அக்கறையாக வடிவமைக்கப்பட்டது தான். படம் முழுக்க சிரிப்பு
சில்லறையாக சிதறிக் கொண்டே இருக்கிறது. இனம் மொழி உள்ளிட்ட பேதங்களை அன்பால் மட்டுமே கட்டவிழ்க்க முடியும் என்பதை முடிந்தவரை ஜாலி மேளாவில் சொல்லி கில்லி அடித்து இருக்கிறார்.
பிளஸ்; சிரிப்புக்கு பஞ்சம் இல்லாத கதைக்களம்.
பிளாஷ்: ஒரு குடும்பத் தலைவரின் இரு வேறு மனநிலையை
திரையில் அற்புதமாக பிரதிபலித்த சேத்தன் கேரக்டர்.
ரேட்டிங்: 7.2/ 10.
