அருள்வான்–திரை விமர்சனம்

சுதந்திரம் வாங்கி 80 ஆண்டுகளை எட்டும் இந்த நாட்களிலும் கல்வி, சுகாதாரம் ஆகிய அதி முக்கிய அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் மக்கள் வாழ்கிறார்கள் என்ற உண்மையை நெஞ்சில் ஆணி அடித்து சொல்ல வந்திருக்கும் படம்.

மலை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கிருத்திகா படிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
ஆனால், பள்ளிக்கூடமோ மலை
கிராமத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. காடு மலை ஆறு என்று தாண்டி போய் படித்துவிட்டு வருவது என்பது நடவாத காரியம்.
அதிலும் ஆற்றில் வெள்ளம் வந்து விட்டால் அடுத்த மூன்று மாதம் பள்ளி போய் வருவதை நினைத்து கூட பார்க்க முடியாது.

இந்த மலை கிராமத்துக்கும் ஒரு சமயத்தில் பள்ளிக்கூடம் வந்தது. காடு மலைகளைத் தாண்டி கொடிய மிருகங்கள் கண்ணில் சிக்காமல் அனுதினமும் உயிர் பரீட்சை நடத்த ஆசிரியர்கள் யாரும் தயாராக இல்லை. ஊர் பிள்ளைகளும் பள்ளிக்கு வருவதில் கொஞ்சமும் ஆர்வம் காட்டாமல் போக, அங்குள்ள பள்ளிக்கூடம்
எடுபட்டு போயிற்று.

இதனால் கல்வி கற்கும் வாய்ப்பையே இழந்து போன அல்லது மறந்து போன அந்த மலை மக்கள் மத்தியிலிருந்து இப்போதுதான் கிருத்திகா வடிவில் ஒரு குரல். ‘நான் படிக்க வேண்டும்., அது மட்டுமா? என்னைச் சேர்ந்தவர்களும்
படிக்க வேண்டும்…’

படிக்க விரும்பும் அந்த சிறுமிக்கும் ஒரு காரணம் இருக்கிறது.
அந்த ஊருக்கு தலைவராக இருக்கக்கூடிய அந்த சிறுமியின் தாத்தா காட்டிலாகா அதிகாரியின் சதியில் சிக்கி வெள்ளை பேப்பரில் வைத்த ஒரே ஒரு கைநாட்டு, அந்த மக்களுக்கே பிரச்சனையாக வந்து சேர, சிறுமியின் தாத்தா தன்னை மாய்த்துக் கொள்கிறார்.
அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் பேத்தியை அழைத்து, ‘படிப்பு வாசனை இல்லாததால் அந்த அதிகாரி என்னை ஏமாற்றி விட்டான். நீ எப்படியாவது படித்து இந்த ஊர் மக்களுக்கு முன் மாதிரியாக இரு’ என்று சொல்லி விட்டு தற்கொலை முடிவு எடுக்கிறார்.
இப்போது சிறுமிக்கு படித்தாக வேண்டும். அதற்கு யாரை கேட்பது… கலெக்டரை கேட்டால் இது நடக்கும் என்று அவளுக்கு தெரிய வர, சொல்லாமல் கொள்ளாமல் அந்தக் காட்டில் இருந்து பயணப்படுகிறாள். விபத்து உள்ளிட்ட
பல்வேறு இடையூறுக ளுக்கு பின் கலெக்டரே அவளை தேடி வருகிறார்.
அவரிடம், தான் மட்டும் படித்தால் போதாது. தங்கள் ஊரில் உள்ள இளைய தலைமுறையும் படித்தாக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள் அவள் கோரிக்கை மூலம் அந்த கிராமத்துக்கு பள்ளிக்கூடம் வந்ததா? அவளுக்காக தன்னை மாற்றிக்கொள்ளும் கலெக்டர் அந்த முயற்சியில் சிறுமியோடு
கை கோர்த்தாரா என்பதே இந்த அருள்வான்.

மனிதநேயமிக்க நேர்மையான முத்துவேல் என்கிற அந்த கலெக்டர் கதாபாத்திரத்துக்கு அச்சாக பொருந்துகிறார் அருள்நிதி. சிறுமி பிரச்சனையை கையில் எடுத்துக் கொள்பவரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் துடிப்பும் வேகமுமிக்க ஒரு மாவட்ட கலெக்டரையே உணர முடிகிறது.

படிக்கவேண்டும் என்று போராடும் குறிஞ்சி எனும் கதாபாத்திரத்தில் வரும் சிறுமி கிருத்திகா தான் படத்தின் ஒட்டுமொத்த ஜீவன். அதை புரிந்து கொண்டு அவரும் அந்த கேரக்டரோடு ஐக்கியமாகி விடுகிறார். படிப்பார்வம், பெற்றோரைப் பிரிந்த தவிப்பு, கலெக்டர் அருள்நிதியின் ஆதரவால் கிடைக்கும் நிம்மதி ஆகிய உணர்வுகளை அந்த மலைவாழ் சிறுமி மனநிலையில் இருந்தே நமக்குள் கடத்தி விடுகிறார்.
கிருத்திகாவுக்கு விருது காத்திருக்கு.

சிறுமி கிருத்திகாவின் பெற்றோராக நடித்திருக்கும் ஆரவ், ரம்யாபாண்டி
யன், பத்திரிகையாளர் காளி வெங்கட் பொருத்தமான பாத்திரத் தேர்வுகளில் கதையோடு கலந்து போகிறார்கள்.

கலெக்டரின் உதவியாளராக வந்து விடிவி கணேஷ் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.
காட்டிலாகா அதிகாரியாக ஜான் விஜய் வில்லத்தனம் செய்கிறார்.

எம்.சுகுமாரின் கேமரா இயற்கையைக் காட்சிப்படுத்துவதில் மேஜிக் செய்கிறது. மலை கிராமத்து அழகு காட்சிகளோடு நம்மையும் ஈர்த்துக் கொள்கிறது.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் மனதோடு நெருக்கம்.பின்னணி இசை உருக்கம்.

கணேஷ் விநாயகன் இயக்கி இருக்கிறார். மக்களின் உரிமைகளை அவர்களுக்குக் கொடுப்பதில் அதிகார வர்க்கங்கள் காட்டும் அலட்சியம், ஒரு நல்லெண்ணம் கொண்ட உயர் அதிகாரி வந்தால் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்திய விதத்தில் தேர்ந்த இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்து விடுகிறார். அந்த சிறுமியின் கல்விக் கனவு, கலெக்டரால் நனவாகும் கிளைமாக்ஸ், நெகிழ்ச்சியில் நம் கண்களையும் பதம் பார்த்து விடுகிறது.

பிளஸ்: மலை கிராம சிறுமி கேரக்டராகவே வாழ்ந்த கிருத்திகா.

பிளாஷ்: லேட்டாக வந்தாலும் முழு படத்தையும் தாங்கும் அருள்நிதி கேரக்டர்.

ரேட்டிங்: 8.5/ 10.