ஜனநாயகன் –திரை விமர்சனம்

ரேட்டிங்: 5/ 10.

விஜய் நடிப்பில் ஏற்கனவே கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட படம். அதனால் படம் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருந்தது.

கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட போது, இன்னமும் அந்த எதிர்பார்ப்பு அதிகரித்தது ஆனால் சோதனையாக படம் வெளியாவதில் தடங்கல். சென்சார் ‘நோ சார் ‘ என்றது.
வன்முறை அதிகம். மத மாச்சரியங்கள் தேச ஒற்றுமையை பாதிக்கும் என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்பட்டன. இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் சென்றது. அடுத்து ரிவைசிங் கமிட்டி படம் பார்க்க நாள் குறித்தது. படம் பார்க்க வந்த இடத்தில் சென்சார் போர்டு மெம்பர் ஒருவர் நெஞ்சை அல்லது வயிற்றை பிடித்துக் கொண்டு சரிந்து விழ… அன்றைய தினமும் படம் பார்ப்பது தள்ளிப்போனது. மேலும் சில பல காரணங்கள் காதுக்கு வந்து பட வெளியீடு நடக்குமா நடக்காதா என்று கேள்வி எழுப்ப வைத்தது… இந்த நேரத்தில் தேர்தல் வர, படத்தின் நாயகன் இப்போது தமிழக முதலமைச்சர். இதன் பிறகு சென்சார் போர்டு ஒரு வழியாக படம் பார்த்து ஏ சான்றிதழுடன் படத்தை வெளியிட அனுமதி கொடுத்து ஜூலை 23ஆம் தேதி படம் இதோ திரையரங்குகளில்.

படம் வெளிவரவே இவ்வளவு முன் கதை சொல்ல வேண்டி இருக்க…இப்போது வெளிவந்த படம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டாமா… வாருங்கள்…

நேர்மையான முன்னாள் போலீஸ் அதிகாரிக்கும் நேர்மையாக இருந்து அதனால் ஏற்பட்ட அவமானத்தில் அநீதிக்கு துணை போகும் முன்னாள் போலீஸ் அதிகாரிக்குமான நீயா-நானா போராட்டம் தான் கதைக் களம். இதற்குள் இவர்களின் நேச பிரச்சனையை யும் தேச பிரச்சனையையும் இணைய விட்டு கதை வளர்த்திருக்கிறார்கள்.

கொலைக் குற்றத்திற்காக சிறையில் இருக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரி விஜய், இறக்கும் தருவாயில் உள்ள தனது அம்மாவை சந்திப்பதற்காக சட்டத்தை மீறி ஜெயில் சூப்பிரண்டு கெளதம் வாசுதேவ் மேனன் உதவுகிறார். அதனால் அவருக்கு வேலை போகிறது.

ஏற்கனவே தேசத் துரோகிகள் செய்த சதிக்கு மனைவியை பறி கொடுத்தவரின் ஒரே கவலை, அவரது 5 வயது மகள் பற்றியது தான்.

அம்மாவின் கடைசி ஜீவ மரண போராட்டத்தை நேரில் பார்த்த அந்த குட்டிப் பெண் பயத்தின் பிடியில் இருக்கிறாள். இது எதுவுமே தெரியாத விஜய், விடுதலை ஆனதும் நன்றி சொல்லிப்போக கௌதம் வாசுதேவ மேனன் வீடு தேடி வருகிறார்.

ஏற்கனவே அவரது மகள் அறிமுகம் என்பதால் அவரது மகள் மீதும் அன்பு காட்டுகிறார். இதற்கிடையே விபத்து ஒன்றில் கெளதம் மேனன் இறந்து போக, அவர் மகளை தன் மகளாக பாவித்து விஜய் வளர்க்கிறார்.

இந்த நிலையில், விஜய்யின் வளர்ப்பு மகளான மமிதா பைஜூக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அந்த பிரச்சனையில் இருந்து மகளை காப்பாற்றும் விஜய், யாரை கொலை செய்ததற்காக சிறைக்கு சென்றாரோ அவரால் தான் தனது மகளுக்கு பிரச்சனை வந்தது என்பதை அறிந்து கொள்கிறார். தன்னால் கொல்லப்பட்டவர் எப்படி உயிரோடு வந்தார் என்று விஜய் அதிர…

விஜய்யை எதிர்பார்க்காத பாபி தியோலும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். இவர்கள் இருவருக்குமான பிளாஷ்பேக் என்ன ?, இறந்த பாபி தியோல் மீண்டும் வந்தது எப்படி? அவரது புதிய திட்டம் என்ன ?அதை விஜய் எப்படி முறியடித்தார் ? என்பதை கமர்ஷியல் அம்சங்களோடும், அரசியல் பிரசாரங்களோடும் நீட்டி முழக்கி சொல்லி இருப்பது தான் இந்த ‘ஜன நாயகன்’.

விஜய் வழக்கம் போல் தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக வருகிறார். தனது ரொமான்ஸ் குறும்புத்தனம் மற்றும் காமெடி காட்சிகளை ஓரம் கட்டி வைத்து விட்டு அரசியல் பிரசாரத்தில் தீவிரம் காட்டியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும், பஞ்ச் வசனம் பேசும் காட்சிகளிலும் திரையரங்கை வழக்கம் போல் அதிர வைக்கிறார்.

பூஜா ஹெக்டே நாயகி அந்தஸ்துடன் வலம் வந்தாலும், நடிப்பு ஏரியா பூராவும் விஜய்யின் வளர்ப்பு மகளாக வரும் மமீதா பைஜூவின் கைவசம் போய் விடுகிறது. அவரும் நடிப்பில் பிரித்து மேய்ந்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் பாபி தியோல் மிரட்டுகிறார். நேர்மையான அதிகாரியாக இருந்து வில்லனாக உருவெடுக்கும் அவருக்கான பிளாஷ் பேக் காட்சிகள் நிஜமாகவே உருக்கம்.

ஜெயில் சூப்பி ரண்டாக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், ஜெயிலராக நிழல்கள் ரவி, அரசியல்வாதியாக பிரகாஷ் ராஜ், கலெக்டராக பிரியாமணி, விஞ்ஞானியாக நரேன், காவல்துறை அதிகாரியாக சுனில், விஜய்யியின் அம்மாவாக ரேவதி, தொழிலதிபராக ஜி.எம்.சுந்தர் என அனைவரும் சிறிய அளவில் முகம் காட்டியிருந்தாலும், நடிப்பால் மனதில் நின்று போகிறார்கள். படத்தின் பிரம்மாண்டத்தை சூரியனின் கேமரா நின்று பேசுகிறது. சண்டைக்காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம். அதை உணர்ந்து அனல் அரசு மிரட்டி இருக்கிறார்கள்.

அனிருத் இசையில் தளபதி கச்சேரி பாடல் விஜய் ரசிகர்களுக்கான ஸ்பெஷல். பின்னணி இசை பல இடங்களில் ஓவர்டோஸ்.

படத்தொகுப்பாளர் பிரதீப் இ. ராகவ், முதல் பாதி படத்தை பொழுதுபோக்காக நகர்த்தி சென்று இரண்டாம் பாதியில் திணறி இருக்கிறார். அத்தனையும் ரசிகர்களுக்கான இனிப்பு என்றாலும், திகட்டும் அளவுக்கு அத்தனை திணிப்பு.

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘பகவந்த்கேசரி’-யின் தழுவல் என்றாலும், முதல் பாதி வரை பழுதில்லை. மறுபாதியில் தான் இயக்குனர் வினோத் தலை மறைவாகி விடுகிறார். கதை முழுக்க முழுக்க விஜய்

ரசிகர்களுக்கானதாக மாறி விடுகிறது. கேசரி களியாக மாறுவது இங்கே தான்.

பிளஸ்: விஜய் விஜய் விஜய்

ப்ளாஷ்: மமிதா பைஜூவின் கேரக்டர் வடிவமைப்பு.