நல்ல கதைக்கு அதற்கான நட்சத்திரங்கள் முக்கியம். தொழில் நுட்ப கலைஞர்கள் அதைவிட முக்கியம். இந்த இரண்டோடும் திரைக்கதை சிறப்பாக பொருந்திக் கொள்ளுமானால் அது வெற்றிப் படம். அது பத்தா படம்.
1986 இல் கதை நடக்கிறது.
எல்லா சமூக விரோதச் செயல்களையும் செய்துகொண்டிருக்கும் ஒரு முரடனுக்கும், ஒரு பள்ளிச்சிறுவனுக்கும் இடையே நடக்கும் சுவையான திரை மறைவு போராட்ட கதை தான் பத்தா.
எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்குள் புகுந்து வித்தை காட்டும் விஜய் சேதுபதிக்கு இந்த பத்தாவும் பக்காவாக கை கொடுக்கிறான். அடிதடி வம்பு என்று ஊரில் எல்லோரையும பயமுறுத்தும் பத்தாவையே பயமுறுத்த, பள்ளி மாணவன் சபரிக்கு ஒரு வாய்ப்பு தானாக அமைகிறது.
முழு ஆண்டு பரீட்சை முடிந்து பள்ளிக்கு இரண்டு மாதம் லீவு விட்ட நிலையில் பள்ளிக்கூட பாத்ரூமில் 8 எட்டு நாட்கள் விஜய் சேதுபதி சிக்கித் தவிக்க, தற்செயலாக அதற்கு காரணமாகிறான் சபரி.
இந்த எட்டு நாட்களில் பசி, தாகம், தூக்கமின்மை, இனி பிழைப்போமா, மனைவி குழந்தைகளை பார்ப்போமா? என எத்தனை அவஸ்தை உண்டோ அத்தனை அவஸ்தைகளையும் அனுபவித்து விடுகிறார் விஜய் சேதுபதி.
அதன் பிறகு அவர் மனதில் என்ன மாயம் நிகழ்ந்தது என்பது அழகான வளமான திரைக்கதை.
ஊரையே நடுநடுங்க வைக்கும்ஒரு மாபெரும் ரவுடி யாரும் எதிர்பாராமல் இப்படி ஒரு சிக்கலில் சிக்கினால் எப்படி நிலைகுலைந்து போவான் என்பதை தன் நடிப்பால் அற்புதமாக வெளிப்படுத்தி வரவேற்பு பெறுகிறார் விஜய் சேதுபதி.
விஜய்சேதுபதியின் மனைவியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸின் கணவன் மீதான அன்பும், அந்த அன்பிலேயே வெளிப்படும் கோபமும் அவர் நடிப்பில் அத்தனை அழகு.
தெரிந்தோ தெரியாமலோ விஜய் சேதுபதிக்கு வில்லனாகி விடும் சிறுவன் சபரி கேரக்டரில் சாய் பிரித்திவிராஜ் அசதகிறார். நாம் தான் பள்ளிக்கூட கதவை பூட்டினோம் என்பது தெரிந்து விடுமோ என்ற பயத்தில் முகத்தில் வெளிப்படும் அந்த ரியாக்ஷன் அதியற்புதம்.
விஜய்சேதுபதியின் மகளாக நடித்திருக்கும் சஹஸ்ரா, சிறுவன் சாய் பிரித்திவிராஜின் அம்மாவாக நடிக்கும் சாந்தி பாலச்சந்திரன், அப்பாவாக நடிக்கும் ஹரி கிருஷ்ணன் ஆகியோரும் தங்கள் பாத்திரங்களை பொருத்தமாக கையாண்டு வரவேற்பு பெறுகிறார்கள்.
விஜய் சேதுபதியின் அடியாளாக வரும் விஷ்ணு அந்த குடும்பத்தில் ஒருவராகவே மாறிப் போகும் நடிப்பில் தன் பங்கை சிறப்புற நிறைவேற்றுகிறார்.
ஒளிப்பதிவாளர் எஸ்.கே.செல்வகுமாரின் கேமரா, காட்சிகளை மனதோடு நெருக்கமாக்க,
சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் அத்தனையும் பரமசுகம்.
எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி தரணிதரன்.
புத்தம் புதுசான சிந்தனையுடன் ஒரு கதையை திரைக்கு தந்து இருக்கிறார். எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான கதை அவருக்கு சிறப்பு சேர்க்கிறது.
பொருத்தமான நட்சத்திரங்களை கொண்டு கதை சொன்ன விதத்தில் இந்தப் படம் அவருக்கு பெருமை சேர்க்கிறது. நடுவுல கொஞ்சம் பக்கங்களை காணோம் என்று சொல்ல முடியாத கதைக் களம் ரசிகர்களுக்கு அழகான திரை விருந்து ஆகி விடுகிறது.
பிளஸ்:
ஊருக்கே ரவுடி என்றாலும் மனைவி மகளிடம் காட்டும் அன்பில் நம்மை ஆகர்ஷிக்கும் பத்தா கேரக்டர்.
பிளாஷ்:
கதையோடு இணைந்து நம்மை கட்டிப் போடும் இசையும் ஒளிப்பதிவும்.
ரேட்டிங்: 7.2/10.