சிக்மா – திரை விமர்சனம்

கோடிக்கணக்கான பணம் ஓரிடத்தில் இருப்பது தெரிய வந்தால், அதைக் கைப்பற்ற பலர் முயல்வதும், அதற்காக நடக்கும் அடிதடி போராட்டங்களும் கொண்ட கதைகள் நிறைய வந்து விட்டன. இதில் தன் பங்குக்கு அப்படி ஒரு கதையை எடுத்துக்கொண்டு இயக்கி இருக்கிறார், ஜேசன் சஞ்சய்.

Youtube நடத்தும் நாயகன் சந்திப் கிஷன் போதிய வருமானமின்றி கடனில் சிக்குகிறார். தொழிலில் இழந்த பணத்தை மீட்க சூதாடுகிறார். அதிலும் தோற்கிறார். அங்கே அவருக்கு ஒரு பென் டிரைவ் கிடைக்க…

போதைப் பொருள் கடத்தலில் பல கோடிகளை சம்பாதித்து ஒரு கண்டெய்னரில் பதுக்கி வைக்கிறார் சம்பத். அந்த கண்டெய்னரின் இன்னொரு சாவி பல இடங்களுக்குப் போய் அந்த சாவி தான் நாயகன் சந்தீப்பிடம் வந்து சேர்ந்திருக்க…

அதைத் தெரிந்து கொண்ட வில்லன் கோஷ்டி அவரைத் துரத்துகிறார்கள். அவர்களின் தடுப்புகளை தாண்டி கண்டெய்னர் பணத்தை அடைய நாயகனால் முடிந்ததா என்பது கதைக்களம்.

நாயகனாக சந்தீப் கிஷன் இந்த கேரக்டருக்கு பொருத்தமான தேர்வாக நடிப்பில் தன்னை நிரூபிக்கிறார். அடிதடியில் இறங்கி அடிப்பவர், காதலிலும் கிறங்கடிக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பரியா அப்துல்லா, தனக்கு கொடுக்கப்பட்ட குறைவான இடத்திலும் நிறைவாக வந்து போகிறார்.

சம்பத், ஷிவ்பண்டிட், ஜேக்பி வில்லன்களாக தங்கள் பணியை சிறப்புற செய்து இருக்கிறார்கள்.

டாக்டராக வரும் நடன இயக்குநர் ராஜு சுந்தரம், நகைச்சுவை என்ற பெயரில் அநியாயத்துக்கு கடிக்கிறார்.

கிருஷ்ணன் வசந்த்தின் கேமரா அடிதடி காட்சிகளில் பிரித்து மேய்ந்திருக்கிறது.

தமனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் தன் இருப்பை தக்க வைக்கிறார்.

வெங்கட் மற்றும் சில்வாவின் சண்டைக்காட்சிகள் திரை தெறிக்கும் அளவுக்கு ஆக்ரோஷம்.

எழுதி இயக்கியிருக்கிறார் ஜேசன் சஞ்சய். ஏற்கெனவே நமக்கு பழக்கப்பட்ட கதை என்றாலும், திரைக்கதையில் சிற்சில மாற்றங்கள் செய்து படத்தை சுவாரசியமாக்க முனைந்திருக்கிறார்.

பிளஸ்:

திரைக்கதையின் மைனஸ் பக்கங்கள் வெளிப்படாத அளவுக்கு சாமர்த்திய இயக்கம்.

மைனஸ்:

இதே மாதிரி கதை அமைப்பில் வந்து போன சில படங்கள்.

ரேட்டிங்: 5/10.

Comments (0)
Add Comment