“சிக்மா படம் மூலம் தமிழில் மீண்டும் என் புதிய தொடக்கம்”-நடிகர் ஷிவ் பண்டிட் நெகிழ்ச்சி

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் வெளிவந்துள்ள சிக்மா படம் மீண்டும் தமிழில் எனக்கு வாய்ப்பு வாசல்களைத் திறந்து வைத்துள்ளது என்கிறார், லீலை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ஷிவ் பண்டிட்.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘சிக்மா’ படத்தில் வில்லனாக திரை ஆளுமை செய்தவர் இவர்.

தன் திரைப் பயணம் குறித்து அவர் கூறுகையில், “நான் 9 வயதாக இருக்கும் போதே நாடகம் மற்றும் மேடை நிகழ்ச்சிகள் மூலம் எனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினேன். மூன்று ஆண்டுகள் ரேடியோ ஜாக்கியாகப் பணியாற்றிய அனுபவம் குரல் ஏற்ற இறக்கம் குறித்து எனக்குக் கற்றுக்கொடுத்தது.

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் வெளியான ‘சைத்தான்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ஃபிலிம்ஃபேர் விருதுப் பரிந்துரையையும் பெற்றேன். எனது முதல் தமிழ் படமான ‘லீலை’ வெளியாகி பல ஆண்டுகள் கடந்த பின்னரும், அதன் பாடல்களுக்காகவும் பின்னணி இசைக்காகவும் இன்றளவும் அதற்குத் தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
“சமூக வலைத் தளங்களில் ‘லீலை’ படம் தொடர்பாக என்னைப் பற்றி இருந்த பதிவுகளை கவனித்த இயக்குநர் ஜேசன் சஞ்சய், இந்த படத்தில் என்னை சூதாட்ட கிளப் நடத்தி வரும் வின்சென்ட் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.

ஜேசன் அர்ப்பணிப்பு மிக்க ஒரு சிறந்த இயக்குநர். இந்த படத்துக்குள் நான் வந்த பிறகு எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல் ஆகிவிட்டார். சந்தீப் கிஷன் மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவுடன் பணியாற்றியது சிறந்த அனுபவம்” என்கிறார்.

Comments (0)
Add Comment