சத்தமின்றி முத்தம் தா திரை விமர்சனம்

தன்னைக் கொல்ல வருபவரிடம் இருந்து தப்பித்து ஓடும் பிரியங்கா திம்மேஷ் விபத்தில் சிக்குகிறார். அவரை மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்து காப்பாற்றும் ஸ்ரீகாந்த் , குணமானதும் தனது வீட்டுக்கு அழைத்து வருகிறார். பிரியங்காவுக்கு தலையில் அடிபட்டதால், தனது கணவன் யார் என்பது உட்பட சில நினைவுகள் மறந்து விடுகின்றன. ஒரு கட்டத்தில், தன்னுடன் வீட்டில் இருப்பது பள்ளிப்பருவக் காதலன் விக்னேஷ் (ஸ்ரீகாந்த் ) என்பது சந்தியாவுக்குத் தெரிய வருகிறது. காதலனையே திருமண ம் செய்து கொண்டேனா என்று அவர் மகிழ்ச்சியில் இருக்கும்போது, தனது மனைவி சந்தியாவை காண வில்லை என்று வியான் என்பவர் போலீசில் புகார் கொடுக்கிறார்.

வியான் தான் பிரியங்காவின் கணவனா? காதலன் ஸ்ரீகாந்த் அவர் வாழ்க்கைக்குள் வந்தது எப்படி? சந்தியாவைக் கொல்ல வந்தது யார்? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது சஸ்பென்ஸ் கிளைமாக்ஸ்.

விபத்தில் சிக்கி சாலையில் கிடக்கும் மனைவியை மருத்துவமனையில் சேர்க்கும் கணவனின் பார்வையில் தொடங்குகிறது கதை. அதுவே அடுத்தடுத்த காட்சிகளில் திருப்பங்களுக்குள் செல்லும்போது பதற்றத்தை வரவழைக்கிறது.

கூலிக்கு கொலை செய்யும் விக்னேஷ், அவரை தேடும் போலீஸ் அதிகாரி ஹரீஷ் பெராடி பூனை-எலி துரத்தலுக்கான களத்தை இன்னும் பரபரப்பாக்கி இருக்கலாம். ஸ்ரீகாந்த், கொலைகாரனாக மாறியதற்கு சொல்லப்படும் காரணத்தில் வலுவில்லை.

தன்னுடன் இருப்பது கணவன் இல்லை என்பது உணரும் பிரியங்கா, அதில் தொடங்கி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

யுவராஜின் ஒளிப்பதிவும் ஜுபினின் பின்னணி இசையும் த்ரில்லர் படத்துக்கான சிறப்புஅம்சங்கள். ராஜ் தேவ் இயக்கி இருக்கிறார். திரைக்கதையில் இன்னும் மெனக்கெட்டிருந்தால் இந்த முத்தத்தில் இனிப்பு கூடியிருக்கும்.

Comments (0)
Add Comment