அதோ முகம் திரை விமர்சனம்

நாயகன் எஸ்.பி.சித்தார்த், தனது காதல் மனைவி சைதன்யா பிரதாப்புடன் ஊட்டியில் வசித்து வருகிறார். மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக அவரது செல்போனில் அவருக்கே தெரியாமல் ‘ஆப்’ ஒன்றை பொருத்தி, அதன் மூலம் அவரது நடவடிக்கைகளை பதிவு செய்கிறார். அதை வீடியோ தொகுப்பாக உருவாக்கி பரிசளிக்க முடிவு செய்கிறார்.

அதன்படி அவர் பொருத்தும் ‘ஆப்’ மூலம் மனைவியின் செல்போனை ஹேக் செய்து அவரது நடவடிக்கைகளை பதிவு செய்யும் போது, அவரது மனைவியின் நடவடிக்கை அவருக்கு அதிர்ச்சி தருகிறது. அப்போது தான் தன் மனைவியை வைத்து தன்னை சுற்றி பின்னப்பட்டுள்ள சதிவலை புரிகிறது. அந்த சதிவலையில் இருந்து தன்னையும், தனது மனைவியையும் காப்பாற்றிக் கொள்ளும் நடவடிக்கையை மேற்கொள்பவர், அதில் இருந்து மீண்டாரா? இல்லையா? என்பதே ‘அதோமுகம்.’

நாயகனாக நடித்திருக்கும் எஸ்.பி.சித்தார்த் புதுமுகம். (இவர் நடிகர் அருண்பாண்டியனின் சகோதரி மகன்). காதல் கணவராக நடிப்பில் புது பரிமாணம்., எல்லா நம்பிக்கைகளும் குலைந்து அதிர்ந்து நிற்கும் இடத்தில் மனிதர் நடிப்பு அற்புதம். இவரா புதுமுகம் என்று கேட்க வைக்கிறார்.

நாயகி சைதன்யாவும் புதுமுகம்தான்.ஆபத்தான அழகியாக நடிப்பில் வசீகரிக்கிறார்.

நாயகனின் நண்பராக ஆனந்த் நாக்,அப்பாவாக மேத்யூ வர்கீஸ் பொருத்தமான பாத்திரத்தேர்வு.
சிறப்புத்தோற்றத்தில் அருண்பாண்டியன்.

குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு சுவாரசிய திரைக்கதை அமைத்திருக்கிறார், சுனில்தேவ். செல்போனில் உள்ள பேராபத்தை எடுத்துச் சொல்லி, திகில் பக்கமாய் திரைக்கதையை நகர்த்திச் சென்ற விதத்தில் எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராக தடம் பதிக்கிறார்.

அதோ முகம், ஆனந்த முகம்.

Comments (0)
Add Comment