காமி (தெலுங்கு) திரை விமர்சனம்

நாயகன் விஷ்வக் சென்னை மனிதர்கள் லேசாக தொட்டால் கூட அவருக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு. அதோடு சில மணி நேரங்கள் செயலற்றும் போய் விடுவார். தனக்குள் இருக்கும் இத்தகைய பாதிப்பில் இருந்து மீள்வதற்காக வைத்தியர் ஒருவரை அவர் அணுகிறார்.

இப்படிப்பட்ட பாதிப்பை குணப்படுத்தும் அரிய வகை காளான் ஒன்று இமயமலைப் பகுதியில் இருப்பதாகவும், 36 வருடங்களுக்கு ஒரு முறை வளரும் இந்த காளான் வளர்ந்த 24 மணி நேரத்தில் அழிந்து விடும் என்றும் கூறுகிறார்.

அந்த அதிசய காளான் குறித்து பல வருடங்களாக ஆய்வு மேற்கொள்ளும் மருத்துவர் சாந்தினி செளத்ரியுடன் சேர்ந்து, காளானை எடுப்பதற்காக நாயகன் ஆபத்து நிறைந்த இமயமலைப் பகுதிக்கு பயணப்படுகிறார். இதற்கிடையே, அவரது நினைவுகளில் அடிக்கடி ஆபத்தில் இருக்கும் சிறுவன் தன்னை காப்பாற்றுமாறு சொல்வது போலவும், சிறுமி ஒருவரும் அடிக்கடி வருகிறார்கள்.

அவர்கள் யார்? எதற்காக தன் நினைவுகளில் வருகிறார்கள்? என்ற குழப்பத்தோடு நாயகன் ஆபத்து நிறைந்த தனது இமயமலை பயணத்தை தொடர…

ஆபத்துக்களை கடந்து காளானை அவர் எடுத்தாரா? இல்லையா? அவரது நினைவில் வந்து போகும் அந்த சிறுவனுக்கும், சிறுமிக்குமான நாயகனின் தொடர்பு எத்தகையது? முற்றிலும் எதிர்பாராத புதிய கதைக்களத்தில் தந்திருக்கிற திரைக்கதை படத்தின் பெரும்பலம்.

நாயகனாக விஷ்வன் சென், அவருடன் இமயமலைக்கு பயணப்படும் மருத்துவராக சாந்தினி செளத்ரி, சிறுமி ஹரிகா பெட்டா, சிறுமியின் அம்மாவாக அபிநயா, ஆய்வுக்கூட சிறைச்சாலையில் சிக்கித்தவிக்கும் சிறுவன் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்குள் பயணப்பட்டிருக்கும் விதம் காட்சிகளை உணர்வுபூர்வமாக்கி விடுகிறது..

மூன்று கதைகள் சொல்லப்பட்டாலும், மூன்று கதைகளுக்கும், மூன்று கதாபாத்திரங்களுக்கும் இருக்கும் கிளைமாக்ஸ் முடிச்சு திரைக்கதையின் அழகான சுவாரசியம்..

படத்தின் மிகப்பெரும் பலம் VFX காட்சிகள். இமயமலைப் பயணத்தையும், அதில் ஏற்படும் ஆபத்துக்களையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, மிக தத்ரூபமாக VFX பணிகளை மேற்கொண்டு அசத்தியிருக்கிறார்கள்.

ஆய்வுக்கூட சிறைச்சாலையில் சிக்கித்தவிக்கும் சிறுவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவன் அங்கிருந்து தப்பிக்கும் முயற்சிகள் தொடர்பான காட்சிகள் காட்சியின் திகிலை மனதில் ஏற்றி விடுகிறது. அபிநயாவின் தாய்ப் பாசம் நெகிழ வைக்கிறது..

மூன்று கதைகளிலும், மூன்று விதமான உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை படத்தோடு ஒன்றிவிட செய்துவிடும் இயக்குநர் வித்யாதர் ககிடா, மருத்துவ குணம் கொண்ட காளானை மையமாக வைத்துக்கொண்டு சொல்லியிருக்கும் கதைக்களம் புதுசு..

‘காமி’ மொழிகளை தாண்டி திரை மொழியில் எடுத்திருப்பது விசுவரூபம்.

Comments (0)
Add Comment