ரெபெல் திரை விமர்சனம்

சாக்லேட் பாயாக இருந்த ஜி.வி.பிரகாஷை அதிரடி நாயகனாக உயர்த்தியிருக்கும் படம்.

தமிழ்நாட்டில் இப்போதுள்ள கன்னியாகுமரி போன்ற பகுதிகள் ஒருகாலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கன்னியாகுமரி நமக்கு வந்தது.

அதே போல் தமிழ் பேசும் மக்கள் கொண்ட பகுதியான மூணார் பகுதி கேரளா உடன் சென்றது.

அந்த மூணார் பகுதியில் தமிழர்கள் நிறைய பேர் இருந்தார்கள் . அப்பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளில் தமிழர்கள் அடிமைகள் போல் காலகாலமாக தோட்டத் தொழிலாளராகவே வாழ்ந்து மடிந்தனர்.

தங்களைப் போன்று தங்களது பிள்ளைகளும் கஷ்டப்படக்கூடாது, அவர்கள் எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் பட்டப்படிப்பு படிப்பதற்காக பாலக்காட்டில் உள்ள அரசினர் கல்லூரிக்கு செல்கிறார்கள்.

ஆனால், அந்த கல்லூரியில் சக மாணவர்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எதுவும் தமிழ் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அதேபோல், அங்கிருக்கும் இரண்டு மாணவர் அமைப்புகள் தமிழ் மாணவர்களை ராக்கிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்துவதோடு, அவர்களை அடக்கி ஆளும் போக்கை கடைப்பிடிக்கிறார்கள்.

இவற்றை சகித்துக்கொண்டு எப்படியாவது படிப்பை முடித்துவிட வேண்டும், என்று அடங்கிப் போகும் தமிழ் மாணவர்கள், ஒரு கட்டத்தில் அமைதி இழந்து நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் தலைமையில் புரட்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்களுடைய புரட்சி தமிழ் மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததா? அல்லது படிக்க வேண்டும் என்ற அவர்களது கனவை காவு வாங்கியதா? என்பதை சொல்வதே இந்த ‘ரெபல்’.

அடக்கு முறைக்கு அடங்கிப் போகாத கல்லூரி மாணவராக ஜி.வி.பிரகாஷ் அதிரடி நடிப்பில் துவம்சமே செய்கிறார். கல்லூரியில் தமிழ் மாணவர்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடும் காட்சிகளில், அந்த ஆவேச நடிப்பு திரை தாண்டி தெறிக்கிறது.

பிரேமலு படம் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்து போன மமீதா பைஜு நடிப்புக்கு இந்த படம் யானைப்பசிக்கு சோளப்பொறி..

கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கும் கருணாஸ், ஜி.வி.பிரகாஷ் குமாரின் தந்தையாக நடித்திருக்கும் சுப்பிரமணிய சிவா, இருவரும் படிப்பு மட்டுமே ஒருவரின் வாழ்க்கை நிலையை மாற்றும், என்பதை வலியுறுத்தும் கதாபாத்திரங்களாக நெஞ்சில் நிலைக்கிறார்கள்.

தமிழ் மாணவர்களாக நடித்திருக்கும் ‘கல்லூரி’ வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி, மலையாள மாணவர்கள் அமைப்பின் தலைவர்களாக வெங்கடேஷ் மற்றும் ஷலுரஹீம் நேர்த்தியான நடிப்பில் கேரக்டருக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்..

80-ம் காலக்கட்டத்தில் நடக்கும் கதையை காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் கேமரா படத்தின் இன்னொரு கண்ணாகி இருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் ரசனை.
தமிழர் உரிமையை கமர்ஷியலாக ரசிக்கும்படி தந்ததற்காகவே இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ், கொண்டாடப்பட வேண்டியவர்..

Comments (0)
Add Comment