வெப்பம் குளிர் மழை திரை விமர்சனம்

நம் நாட்டில் குழந்தை இல்லாத தம்பதிகள் மன ரீதியாக சந்திக்கும் கதை. அதை கிராமத்துப் பின்னணியில் கொஞ்சம் வலுவாகவே சொல்லியிருக்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணம் ஆகி 5 ஆண்டுகளாக மழலைக்கு ஏங்கும் தம்பதிகள் தான் கதையின் மையம். ஊர் பேச, உறவு ஏச, மனம் பொறாத நாயகி ஒருகட்டத்தில் கணவனை மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கிறாள்.

மருத்துவ பரிசோதனையில் கணவனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று தெரிந்து கொள்ளும் நாயகி, நவீன மருத்துவத்தின் உதவியால் கணவனுக்கு தெரியாமல் கர்ப்பமாகிறாள். மகன் பிறக்கிறான். சில ஆண்டுகள் கழித்து இந்த உண்மை கணவனுக்கு தெரிய வரும்போது குடும்பத்தில் எந்த மாதிரியான பிரளயம் நிகழ்கிறது என்பது உணர்வும் நெகிழ்வுமான திரைக்கதை.

இப்படி ஒரு சென்சிட்டிவான கதையை எடுத்து சரியான நடிகர்களை தேர்வு செய்து படத்தை எடுத்ததற்காக படக்குழுவை பாராட்டலாம். குழந்தை இல்லாத பிரச்சினை, ஒருவருக்கொருவர் உயிராய் இருக்கும் அந்த தம்பதிகளை எப்படி பாதிக்கிறது என்பதை காட்சிப்படுத்தியிருக்கும் விதத்திலும் திரைக்கதை சிறப்பு பெறுகிறது.

நாயகனாக த்ரவ். முதல் படம் என்று தெரியாத அளவிற்கு ஆணாதிக்கம் கொண்ட கணவனாகவும், தாழ்வு மனப்பான்மை கொண்ட மனிதனாகவும் இருவேறு நடிப்பில் மிரட்டுகிறார்.

நாயகியாக இஸ்மத் பானு நடிப்பில் இனிய ஆச்சரியம். குழந்தையின்மையை மாமியார் வரை குத்திக்காட்டும் இடங்களில் நடிப்பில் இயல்பாக ஸ்கோர் செய்கிறார். ‘குழந்தை ஏக்கத்தில் படுக்கையில் படுத்தபடி கணவனுக்கு தெரியாமல் முந்தானையை வாய்க்குள் வைத்து அழும் காட்சியில் நம் கண்கள் கசிந்து போகிறது. ‘நான் மலடியா?’ என்று கத்தி கதறும் காட்சியில் அது நடிப்பல்ல, உயினின் துடிப்பு. சமீபத்திய அறிமுகங்களில் திரை கண்ட ஆச்சரியமாகி இருக்கிறார். விருது காத்திருக்கு ம்மா உனக்கு.

மாமியாராக ரமா, மருமகளை குழந்தை இல்லாததற்காக குத்திக்காட்டும் இடங்களை விடவும் மகனின் புறக்கணிப்பில் மருமகளை அரவணைக்கிறாரே அந்த ஒரு இடம்போதும், இவர் நடிப்புக்கு.

கிராமத்து குசும்பு பிடித்த தாத்தாவை கண்முன் நிறுத்துகிறார், எம்.எஸ்.பாஸ்கர்.

சங்கர் ரங்கராஜன் இசையில் பாடல்கள் சுகராகம். கணவன் பார்க்கும் வேலையை கதையோடு இணைத்த விதத்தில் டைரக்டர் பாஸ்கல் வேதமுத்து சுலபத்தில் பாசாகி விடுகிறார். கோயிலில் முதல் மரியாதை தொடர்பான காட்சி வேகத்தடை.
வெப்பம்- நாயகி.
குளிர்- நாயகன்.
மழை- திரைக்கதை.

Comments (0)
Add Comment