ரஷ்யநாட்டுப் பெண்ணை காதலித்து மணந்த யோகிபாபுவுக்கு காதல் அளவுக்கு கல்யாணம் செட்டாகவில்லை. பிரியத் துடிக்கிறார், யோகிபாபு. ஆனால் ரஷிய மனைவியோ யோகிபாபுவின் அரண்மனையில் ஒரு நாள் தங்கினால் விவாகரத்து தருவதாக சொல்ல, மனைவியுடன் தனது அரண்மனை பங்களாவுக்கு வருகிறார். யோகிபாபு.
ஆனால் அந்த அரண்மனையில் இருக்கும் ஒரு விசேஷ கருவியை கவரத் தான் ரஷிய பெண் வருகிறார்.
அதேநேரம் யோகிபாபுவின் மீதான கோபத்தால் அவரைத் தாக்க வரும் சேஷூ, தங்கதுரை, பாலா,ரோபோ சங்கர் ஆகியோரும் அந்த அரண்மனைக்குள் வருகிறார்கள். போதாக்குறைக்கு ஒவியாவும் இந்த கூட்டணியில் இணைந்து கொள்ள…மனைவியின் மாய்மாலம் யோகிபாவுக்கு தெரிய வந்ததா? தாக்க வந்த நண்பர்களை எப்படி எதிர்கொண்டார் என்பது கலகல கிளைமாக்ஸ்.
யோகிபாபு வழக்கம் போல காமெடி பாதி கடி மீதி என நடித்திருக்கிறார்.அவரை நம்பித்தான் இந்த கதையையே உருவாக்கி இருப்பார்கள் போலிருக்கிறது. அவரும் இயக்குனரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி, பாத்திரமாகவே மாறியிருக்கிறார்.
காமெடிப் பட்டாளத்தில் சேஷூ நடிப்பில் முன்னிற்கிறார். பாலா, தங்கதுரை, ரோபோ சங்கர் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்கள்.
இளமைப் பூங்காற்றாய் வந்து ஒரு ஆட்டமும் போட்டு விட்டுப்போகிறார், ஓவியா.
ஒளிப்பதிவாளர் சுபாஷ் தண்டபாணியின் கேமரா அரண்மனையையே சுற்றி வந்தாலும் சுவாரசிய சுற்றல். இசையமைப்பாளர்கள் சாந்தன் – தர்ம பிரகாஷ் பாடல்களிலும் பின்னணி இசையிலும் சொல்லி அடிக்கிறார்கள்.
சிரிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்வதேஷ்.எம்.எஸ்