ஒரு கட்டத்தில் ரஜினியே ராமராஜனை பார்த்து மிரண்டார்’’

‘சாமானியன்’ பட விழாவில் டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் சுவாரசிய தகவல்
நீண்ட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் ராமராஜன் நடித்துள்ள படம் சாமானியன். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இயக்குநர்கள் கே.எஸ் ரவிக்குமார், ஆர்வி உதயகுமார், பேரரசு, சரவண சுப்பையா, நடிகர் ரோபோ சங்கர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
விழாவில் நடிகர் ராமராஜன் பேசுகையில், “2010ல் நான் மீட்டிங் போய் விட்டு வரும்போது மிகப்பெரிய விபத்தை சந்தித்தேன். மயிரிழையில் உயிர் தப்பினேன். அதிலிருந்து மீண்டு வந்து நான் இப்படி ஒரு படம் நடிப்பேனா என்பது உலக அதிசயம் போல நடந்திருக்கிறது. என்னுடைய ரசிகர்களின் தமிழக மக்களின் பிரார்த்தனை தான் என்னைக் காப்பாற்றியது. இந்த ரசிகர் மன்றங்களுக்கும் நான் எதுவும் செய்ததில்லை. ஆனால் எனக்காக உயிரை தரக்கூடிய அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராகேஷ் எனக்கு அன்றும் இன்றும் என்றும் பொருந்துகின்ற மாதிரி அருமையான திரைக்கதையில் இந்த படத்தை எடுத்துள்ளார். இதற்கு விளம்பரமே கொடுக்க வேண்டாம். ராமராஜன் படம் என்றால் பார்ப்பதற்கு லட்சம் பேர் இருக்கிறார்கள்.. இந்த படத்தின் திரைக்கதை என்பது உலகில் பிறந்த ஒவ்வொருவரும் இதை கடக்காமல் போகவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு அருமையான கதை இது. படம் பார்த்து விட்டு வரும்போது தாய்மார்கள் மட்டுமல்ல, என்னுடைய ரசிகர்களும் ஆண்களும் கூட கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் அளவிற்கு ஒரு கதை. இந்த அளவிற்கு அழகாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ராகேஷ்.

இன்று ராஜா அண்ணன் வருவார் என நினைத்திருந்தேன். இந்த 23 வருடங்களிலும் என்னை ராமராஜன் என்று சொல்கிறார்கள் என்றால் இளையராஜாவின் பாட்டு தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று பல இடங்களில் இளையராஜா, ராமராஜன் பாடல்களை தான் கேட்கிறேன் என்கிறார்கள்.

கே.எஸ்.ரவிக்குமார் இங்கே இருக்கும்போது சில விஷயங்களை பேச வேண்டும். நான் நடித்த ‘ராஜா ராஜா தான்’ படத்தில் இயக்குநர் ஈ.ராமதாஸிடம் கே.எஸ் ரவிக்குமார் துணை இயக்குநராக வேலை பார்த்தார். நானும் 40 படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்தவன் என்கிற வகையில், அப்போதே அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் கே எஸ் ரவிக்குமாரின் திறமையை பார்த்து ஆச்சரியப்பட்டேன். அதன்பிறகு நான் நடித்து இயக்கிய ‘பெத்தவ மனசு’ படத்தில் என்னுடன் இணைந்து இணை இயக்குநராக பணியாற்றினார். இத்தனை வருடங்கள் கழித்து ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்களை இயக்கும் அளவு புகழ்பெற்ற அவர் மீண்டும் என்னை சந்திக்கும் போது அவர் காட்டிய அந்த மரியாதையை பார்த்த போது சினிமாவில் உண்மை, நன்றி, விசுவாசம் இன்னும் சாகவில்லை, உயிரோடு இருக்கிறது என்று நினைக்க வைத்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.

கரகாட்டக்காரன் 465 நாள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே தொடர்ந்து எட்டு 100 நாள் படங்களையும் கொடுத்தேன். இந்த படத்தில் பாட்டே இல்லாமல் படம் கொடுத்து இருக்கிறாயே என்று ராஜா அண்ணன் என்னிடம் கேட்டார். இந்த படத்தில் எனக்கு ஜோடியே கொடுக்கவில்லை.. ஆனால் அடுத்த படத்தில் ஜோடியும் வேண்டும். பாட்டும் வேண்டும். இப்போது கூட ஆறு பாட்டுக்களுடன் ஒரு படம் கொண்டு வா. உனக்கு பண்ணித் தருகிறேன் என ராஜா சார் கூறினார். இளையராஜா இதுவரை உலக அளவில் பெற்ற புகழை வேறு எந்த இசையமைப்பாளரும் பெற்றதில்லை. இனியும் பெற முடியாது.

தன்னுடைய மூன்று புதல்வர்களையும் இசைக்காக சென்னைக்கு அனுப்பிய அந்த தாய் சின்னத்தாய் அல்ல, தெய்வத்தாய். ராஜா சார் எனக்கு கொடுத்தது போல் வேறு ஒரு ஹீரோவுக்கு பாடல்களை கொடுக்கவில்லையே என்று சொல்வார்கள். நான் கூட ரஜினி சாருக்கு கொடுத்தது போல எனக்கு பாடல்களை ராஜா சார் கொடுக்கவில்லை என்று சொல்வேன். ஆனால் “சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா” என்கிற அந்த ஒரு பாடல் எனக்கு போதும். சிங்கப்பூரில் சென்று வேட்டி கட்டி நடித்த ஒரே தமிழ் நடிகர் நான் தான்.. எங்களுடன் ஒரு மாட்டு வண்டியையும் சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதாக இருந்தோம். விமானத்தில் அனுமதிக்கவில்லை.

44 படங்களில் நடித்த பின் 45வது படம் இழுத்துக் கொண்டே இருந்தது. ஆனால் சாமானியன் திரைப்படம் சரியான நேரத்தில் என்னை வந்து சேர்ந்தது” என்றார்.

இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் பேசுகையில், “ரஜினி சாரே ஒருமுறை என்னிடம் ராமராஜன் பற்றி குறிப்பிடும்போது, அவருக்கு இருக்கும் அந்த மாஸ் ஓப்பனிங் கலெக்சனை பார்த்து, நமக்கு போட்டியாக முன்னாடி போய்க் கொண்டிருக்கிறார் என பயந்து விட்டேன் என்று கூறினார். நான் பணியாற்றிய முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றால் அது ராமராஜன் நடித்த ‘ராஜா ராஜா தான்’ நான் அதற்கு முன் பல படங்கள் பணியாற்றி இருந்தாலும் முதன்முதலில் ஸ்டார்ட் கட் ஆக்சன் சொன்னது ராமராஜனுக்கு தான். ராஜ்கிரண் தயாரிப்பில், கஸ்தூரிராஜா கதை, வசனம் எழுதிய ‘பெத்தவ மனசு’ படத்தில் நான் இணை இயக்குனராக பணியாற்றினேன். அந்த படத்தில் ராமராஜன் ஹீரோ மற்றும் டைரக்டராக இருந்ததால் அவர் நடிக்கும் காட்சிகளை நான் தான் அவருக்கு ஸ்டார்ட் ஆக்சன் சொல்லி இயக்கினேன். அதுதான் என்னுடைய பிள்ளையார் சுழி. அதன்பிறகு ராஜ்கிரண் ஹீரோவாகிவிட்டார். கஸ்தூரிராஜா இயக்குநராகி விட்டார். நானும் ‘புரியாத புதிர்’ மூலமாக இயக்குநர் ஆகிவிட்டேன். 1981 முதல் 9 வருடங்கள் வரை ராசி இல்லாத சூழல் இருந்த நிலையில் ராசியான மனிதரான ராமராஜன் மூலமாக எனக்கு எல்லாமே சென்டிமென்ட் ஆக மாறியது. இதுதான் எனக்கும் அவருக்குமான பந்தம்.

இந்த படத்தில் நடிக்க இயக்குநர் ராகேஷ் வந்து அழைத்தபோது ராமராஜன் இருக்கிறார் என்றால் நான் ஒரு நாள் வந்து போகும் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க தயார் என்று கூறி விட்டேன். கார் விபத்தில் கடவுள் அருளால் உயிர் பிழைத்த அவர். இன்று மீண்டு வந்து மீண்டும் கதாநாயகனாக இளையராஜாவின் இசையில் பாடுகிறார் என்றால் அதுதான் இறைவனின் அருள்.

இளையராஜாவுடன் நான் அவ்வளவு நெருங்கி பழகியது இல்லை என்றாலும் நான் ‘ராஜா ராஜா தான்’ படத்தில் பணியாற்றிய போது அந்த படத்திற்கு இசையமைத்தது இளையராஜா தான். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து ஏவிஎம் தயாரிப்பில் சக்திவேல் என்கிற படத்தை இயக்கியபோது அதற்கு இளையராஜா தான் இசை அமைத்தார். அப்போது ஒரு பாடல் இதுபோல வேண்டும் என நான் உதாரணமாக சொல்லும் போது என்னுடைய முந்தைய படமான ‘புருஷ லட்சணம்’ படத்தில் இருந்து ‘கோலவிழியம்மா’ என்கிற சாமி பாடலை பாடிக் காட்டினேன்.

அப்போது ஏவி.எம்.சரவணன் சார் என்னை அழைத்து ‘அது தேவா சார் பாட்டு. அதை ஏன் இளையராஜாவிடம் சொன்னாய் இருவரும் போட்டியாளர்களாச்சே’ என்று என்னை செல்லமாக கடிந்து கொண்டார். அதன் பிறகு மதியம் அதேபோன்று இன்னொரு பாடலுக்காக அமர்ந்த போது ‘இப்ப என்ன பாடல் இன்ஸ்பிரேஷனாக சொல்லப் போகிறாய்?’ என்று ராஜா சார் கேட்டார். உடனே சுதாரித்துக் கொண்டேன். அப்போது எனக்கு ராமராஜன் சார் படம் தான் ஞாபகம் வந்தது. உடனே ‘மாங்குயிலே பூங்குயிலே’ போல ஒரு பாடல் வேண்டுமென கேட்டேன். அப்படித்தான் ‘மல்லிகை மொட்டு மனச தொட்டு’ என்று ஒரு பாடலை போட்டு தந்தார். அந்த பாடல் அப்போது மிகப்பெரிய ஹிட் ஆகி இப்போது வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. என்னுடைய வாழ்க்கையில் அந்தந்த சமயங்களில் நடக்கும் சம்பவங்களில் எல்லாமே ஒருவர் உள்ளே வருவார்.. அவர் தான் ராமராஜன்” என்றார்.

நடிகை வினோதினி பேசும்போது, “11 வருடங்களுக்கு பிறகு ராமராஜன் மீண்டும் திரையில் தோன்றப் போகும் இந்த படத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருக்கிறது. பூந்தமல்லி அருகில் அபார்ட்மெண்ட் ஒன்றில் படப்பிடிப்பை நடத்திய போது எதிர்பாராத விதமாக அங்கே படப்பிடிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டதும் உடனடியாக அதற்கு மாற்றாக அதே போன்று ஒரு இடத்தை வளசரவாக்கத்தில் ஏற்பாடு செய்து இரவு பகலாக 72 மணி நேரம் தூங்காமல் பணியாற்றி காட்சிகளை படமாக்கினார் இயக்குநர் ராகேஷ். அவர் ஒரு தயாரிப்பாளருக்கான இயக்குனர்” என்று கூறினார்.

நடிகை நக்ஸா சரண் பேசுகையில், “என்னுடைய வாழ்க்கையில் நான் நடித்த முதல் படம் ‘சாமானியன்’. இந்த படத்தில் ராமராஜனின் மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம். எம் எஸ் பாஸ்கர், ராதாரவி படம் முழுக்க எனக்கு வழிகாட்டியாக இருந்து நடத்தினார்கள். அவர்களுக்கு நன்றி.. இளையராஜா சாரின் பெயரை கேட்டாலே ஒரு பாசிட்டிவான அதிர்வு ஏற்படும். அவருடைய இசையில் நான் என்னுடைய முதல் படத்தில் நடித்ததை ஆசிர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன். முதல் படத்தில் மிகவும் அழுத்தமான, ஆழமாக கதாபாத்திரம் கொடுத்ததற்காக இயக்குநர் ராகேஷ் மற்றும் தயாரிப்பாளர் மதியழகன் அவர்களுக்கு என்னுடைய நன்றி” என்றார்.

இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசுகையில், “நடிகர் ராமராஜன் இயல்பான ஒரு நடிகர். ராமராஜனை என்னால் இயக்க முடியாமல் போய் விட்டதே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. நான் படம் இயக்கிய சமயத்தில் எதிர்பாராத விதமாக ஒரு விநியோகஸ்தராக ரஜினியின் ‘தர்மத்தின் தலைவன்’ படத்தை வாங்கியிருந்தேன். ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப் போனது. அப்போது ராம.நாராயணன் என்னிடம் அதற்கு பதிலாக ராமராஜன் படம் ஒன்றை தருகிறேன், அதை ரிலீஸ் செய்யுங்கள் என்று கூறினார். ரஜினி படத்திற்கு பதிலாக ராமராஜன் படத்தை ரிலீஸ் செய்வதா என்கிற யோசனை ஏற்பட்டது. அதனால் அதை என்னால் வாங்க முடியவில்லை. அந்த படம் தான் கரகாட்டக்காரன். கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் வரை அந்த படம் வசூலித்தது. ஆனால் ரஜினி படத்தை வாங்கி வெளியிட்ட வகையில் எனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ராமராஜன் மனது பூவை விட மென்மையானது. உண்மையிலேயே இவர்தான் சின்ன மக்கள் திலகம். தான் நேசித்தவர்களை எல்லாம் தயாரிப்பாளர்களாக மாற்ற முயற்சித்து அதில் வெற்றி பெற்றவர் ராமராஜன்” என்றார்.

இயக்குனர் பேரரசு பேசுகையில், “ராமராஜன் வனவாசம் முடிந்து வந்துள்ளதாக எல்லோரும் சொன்னார்கள் வனவாசம் முடிந்ததும் பட்டாபிஷேகம் தான். சாமானியன் ஒரு பட்டாபிஷேகத்திற்கு தயாராகி விட்டார். எனக்கும் அவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. எனக்கும் அவருக்கும் குருநாதர், தாய் வீடு எல்லாமே இயக்குநர் ராம நாராயணனும் தேனாண்டாள் பிலிம்ஸும் தான். அவருக்கு எப்படி ஊர் ராசியோ எனக்கும் அதே போல ஊர் ராசி தான்.. இப்போதெல்லாம் இரண்டு படங்கள் ஓடி விட்டாலே புது கம்பெனிகளுக்கு மட்டுமல்ல, தமிழ் கம்பெனிகளுக்கே கால்சீட் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். ஆனால் ராமராஜன் பெரிய நடிகராக மாறினாலும் சிறிய தயாரிப்பாளர்கள், தன்னிடம் உதவியாளராக பணியாற்றிய இயக்குனர்கள் ஆகியோருக்கு தான் முன்னுரிமை கொடுத்தார். அப்படி ஒரு மனசு அவருக்கு மட்டும் தான் உண்டு. ராமராஜன் ஓடுகிற குதிரையில் ஏறுகிறவர் அல்ல.. பல குதிரைகளை ஓட வைத்தவர்.. தனக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து மீண்டு இந்த அளவிற்கு வந்து இருக்கிறார் என்றால் அவருடைய மனதும் அவருடைய ரசிகர்களும் தான் காரணம்.. தமிழ் திரையுலகில் ராமராஜனின் அடையாளம் கல்வெட்டு மாதிரி இருக்கும். அது என்றும் மறையாது” என்று பேசினார்.

இயக்குனர் ராகேஷ் பேசுகையில், “23 வருடங்கள் கழித்து இசைஞானியும் மக்கள் நாயகனும் ஒன்றாக இணையும் படம் ‘சாமானியன்’. அதை இயக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. புகை பிடிப்பது தவறானது என சென்ஸார் கார்டு போட வேண்டும் என சில வருடங்களுக்கு முன்பு தான் ஒரு விதிமுறை வந்தது. ஆனால் தான் நடிக்க வந்த காலத்திலிருந்து சிகரெட் பிடிக்க மாட்டேன், மது அருந்த மாட்டேன் என தன் மனதிற்குள்ளேயே ஒரு ரெட் கார்டு போட்டு வைத்திருப்பவர் ராமராஜன். பல சவால்கள் நிறைந்த சூழலில் இந்த படத்தை எடுத்து இருக்கிறோம். இதை பட்டிதொட்டி எங்கும் கொண்டு போய் சேர்ப்பது உங்கள் கடமை.
படம் துவங்க ஆரம்பித்த சமயத்தில் இருந்ததை விட, கேமரா ஓட ஓட 100 மடங்கு அதிக எனர்ஜியுடன் இருக்கிறார் ராமராஜன். அவர் அவர் ஒரு சாமானிய மக்களின் பிரதிநிதி. அவர் போட்டிருக்கும் சட்டை வேண்டுமானால் கலர் கலராக இருக்கலாம். அவர் மனது என்றும் வெள்ளை தான்.. விசுவாசம், நன்றி என்றால் அது ராமராஜன் தான்..

மதுரையில் படப்பிடிப்பு நடைபெற்ற போது திண்டுக்கல் லியோனி சார் தனது மகன் லியோ சிவா நடிப்பதை பார்ப்பதற்காக படப்பிடிப்பிற்கு வந்தார். மகனது நடிப்பை பற்றி கேட்டபோது, நடிப்பு பற்றி எதுவும் சொல்லாததால் சரியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.. நீங்கள் போய் எதுவும் சொல்லி கெடுத்து விடாதீர்கள் சார் என்று கேட்டுக் கொண்டேன். எம்.எஸ் பாஸ்கர் ஒரு காட்சி இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக 20 அடி உயர தண்ணீர் தொட்டிக்குள் மூச்சை பிடித்து முங்கியபடி நடித்தார். கே.எஸ்.ரவிக்குமார் ஒரு நடிகராக, ஒரு மிகப்பெரிய இயக்குனராக இருந்தாலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு புரொடக்சன் மேனேஜராகவே மாறி படப்பிடிப்பை விரைவில் முடிப்பதற்கு ஒரு தூண்டுகோலாக இருந்தார். ராதாரவி சார் செட்டுக்கு வந்து விட்டாலே ஒருவித அமைதி வந்து விடும். அதனால் அதிகம் நடிகர்களை வைத்து படமாக்கும் சமயங்களில் எப்படியாவது அவரின் கால்சீட்டை வாங்கி அவரை அழைத்து வந்து விடுவோம்.

இந்த படத்தின் கதை எல்லோருடைய வாழ்க்கையிலும் இருப்பது தான்.. அதை உணர்வுகளுடன் சேர்த்து மனதை தொடும் விதமாக உருவாக்கி இருக்கிறோம்.. இதற்காக நந்தா பெரியசாமி உள்ளிட்ட குழுவினருடன் ஆறு மாதங்கள் உழைத்திருக்கிறோம்.
இந்தப் படத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பது இசைஞானியின் இசை தான். மக்கள் நாயகன் ராமராஜனை பட்டிதொட்டி எங்கும் உள்ள மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது அவரது பாடல்கள் தான்.. நான் ‘அம்மு’ என்கிற குறும்படத்தை எடுத்து விட்டு அதற்கு இசையமைப்பதற்காக இசைஞானியை தேடி தினசரி அவரது வீட்டு வாசலில் நின்றேன். அவர் பிஸியாக இருந்ததால் பார்க்க முடியவில்லை. ஆனால் இதை தினசரி கவனித்த பவதாரணி ஒரு நாள் என்னை அழைத்து விவரம் கேட்டார். அப்பா பிஸியாக இருக்கிறார் என கூறியபோது, அப்படி என்றால் இந்த படம் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களாவது இசையமைத்துக் கொடுங்கள் என கேட்டேன். இரண்டு நாள் கழித்து அவரை சந்தித்தபோது உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டேன்.. என்னை விட என்னுடைய அம்மாவிற்கு இந்த படம் பிடித்திருக்கிறது.. நீ இசையமைத்து கொடு என்று என்னிடம் சொல்லி விட்டார் என பவதாரணி கூறினார். அப்படி பவதாரணி இசையமைத்து கொடுத்த அந்த ‘அம்மு’ படம் தான் எனக்கு தமிழ்நாடு அரசு திரைப்பட பிரிவில் கோல்ட் மெடல் பெற்று தந்தது.

பிறகு இளையராஜா சாரை சந்திக்க முடியாமல் போனாலும் இந்த சாமானியன் மூலமாக அவரை சந்திக்கும் வாய்ப்பு மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது கூட பவதாரணி என்னிடம் ஒருவழியாக அப்பாவை பிடித்து விட்டீர்களே என்று கிண்டலாக கேட்டார். அந்த வகையில் என்னை இந்த காம்பவுண்டுக்குள் அனுமதித்தவரே பவதாரணி தான். ஆனால் இன்று அவர் இல்லை. இந்த படத்தில் மாண்டேஜ் பாடலைத் தவிர வேறு பாடல்களே இல்லையே, நானும் ராமராஜனும் சேர்ந்தாலே பாட்டுக்களை தானே ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என கொஞ்சம் என் மீது கோபப்பட்டார் ராஜா சார். முழுப்படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தில் இரண்டு பாடல்களுக்கான இடம் இருக்கிறதே என்று என்னிடம் கூறினார். அவரே அருமையான ஒரு பாடலை எழுதி இசையமைத்து இதில் எப்படியும் ராமராஜன் உதட்டசைத்து பாடும் விதமாக படமாக்கு என்று கூறினார். அந்த பாடல் தான் கிளைமாக்ஸுக்கு முன்னதாக இந்த படத்திற்கு மிக பக்கபலமாக அமைந்துள்ளது. இந்த சாமானியனை எல்லோரும் தோளில் தூக்கி வைத்து கொண்டு செல்லுங்கள்” என்றார்.

படத்தின் கதையை கார்த்திக் குமார் எழுதியுள்ளார். அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய, ராம்கோபி படத்தொகுப்பு செய்கிறார். மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். இதில் நாயகிகளாக நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி ஆகியோர் நடித்துள்ளனர். ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், லியோ சிவகுமார், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி, போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் பணிகளில் ‘சாமானியன்’ படக்குழு ஈடுபட்டுள்ளது.

Comments (0)
Add Comment