பிரியா பவானி சங்கரின் காதல் கணவரும், அவரது நண்பர்களும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கணவரின் மர்ம மரணத்தை நினைத்து தாங்க முடியாத துயரத்தில் இருக்கும் பிரியா பவானி சங்கர், 6 வருடங்களுக்குப் பிறகு அதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக கணவரின் ஆத்மாவிடம் பேச முயற்சிக்கிறார்.
அப்போது ஆபத்தில் இருக்கும் வேறு ஒரு ஆத்மா அவரிடம் உதவி கேட்கிறது. அதன் மூலம் ‘டிமான்டி காலனி’ முதல் பாகத்தின் கதையோடு இணைப்பு ஏற்படுவதோடு, அதில் இறந்ததாக காட்டப்படும் அருள்நிதியை உயிர் பிழைக்க வைப்பதற்கான ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது.
அதன்படி, அருள்நிதியை உயிர் பிழைக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடும் பிரியா பவானி சங்கர், அவருக்கு சகோதரர் ஒருவர் இருப்பதை (அவரும் அருள்நிதி தான்) தெரிந்து கொண்டு அவருடன் இணைந்து முதல் பாகத்தின் நாயகன் அருள்நிதியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் முதல் பாகத்தையும் தாண்டிய திரில் திகில்.
முதல் பாகத்தில் நாயகனாக நடித்த அருள்நிதி இதில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஒரு வேடத்தில் வில்லத்தனத்திலும் கலந்து கட்டி அடிக்கிறார்.
முதல் பாகத்தின் கதையை நாயகன் அருள்நிதி மூலம் நகர்த்திய இயக்குநர் இந்த இரண்டாம் பாகத்தின் கதையை பிரியா பவானி சங்கரை முதன்மைப்படுத்தி நகர்த்தியிருக்கிறார். அவருக்கு துணையாக அருள்நிதி பயணித்திருக்கிறார்.
காதல் கணவர் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் வெளிக்காட்டுவது, உயிருக்கு போராடும் அருள்நிதியை காப்பாற்ற முயற்சிப்பது, டிமான்டி ஆத்மாக்களின் உலகத்தில் தைரியமாக பயணித்தாலும், பயத்தையும், பதற்றத்தையும் அவ்வபோது முகத்தில் வெளிக்காட்டுவது என படம் முழுவதும் பறக்கிறது, பிரியா சங்கரின் நடிப்புக்கொடி.
அருள்நிதியின் சித்தப்பாவாக படம் முழுவதும் பயணிக்கும் முத்துக்குமார் அந்த பாத்திரத்தில் பிரகாசிக்கிறார். அருண் பாண்டியனுக்கு பெரிய வேடம் . நிறைவான நடிப்பு
மீனாட்சி கோவிந்த், அர்ச்சனா ரவிச்சந்திரன் பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். சீன துறவிகளாக நடித்திருப்பவர்களும் கதையோடு பொருந்திப் போகிறார்கள்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்.சின் பின்னணி இசை திகிலுக்கு போதிய திகிலூட்டுகிறது.
ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு பளிச்.
முதல் பாகத்தின் கதையோடு, இரண்டாம் பாகத்தின் கதையை இணைத்த விதத்தில் படத்தை ரசிகர்களோடு சுலபத்தில் கனெக்ட் செய்ததற்காகவே இயக்கிய அஜய் ஞானமுத்துவுக்கு கொடுக்கலாம், ஆளுயர பொக்கே.